Saturday, March 12, 2011

கவிதைகள் பாலை நிலவன்

பாம்பு அறை

மனிதர்களின் வாசமற்ற பூமி அல்ல இது
பேரச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள
நவீன மனக் குறிகள் விதைக்கப்பட்டுள்ளன.
எழுந்து பயணமாகும் யுவன் யுவதிகள்
பூனையாக இரவில் கூடடைகிறார்கள்
அந்நாளின் தோலின் மீதுதான்
நோய்கள் விதைக்கப்பட்டன.
தினந்தோறும் பூமியின் ஒளிமுக வாசலில்
கையேந்தி நிற்கும் ஒருவனிடம்
ஒரு விதைகூடப் பரிசளிக்க இயலாத
அதே அண்டத்தின் மீது
அவன் நோயுடனே வாழ்ந்துவருகிறான்
வீடுகளுக்குள் பாம்பெனப் பதுங்கிவிட
அறைகளில் பூனைகள் மட்டுமே
சுற்றிச் சுற்றி வருகின்றனவே
அது எவ்விதம்
அதுகூட அறியாமலேயே
நோயின் தாய்மையின் கரங்களில்
மயங்கி வீழ்ந்திருக்கிறான்.
சிதைவு சிதைவு என நகரும் பூமிமீது
சிறுமலரெனத்
தன் குழந்தையையும் கிடத்தியிருக்கிறான்.
அவனோ
நோயின் தாய்மையை அறியாமலேயே
கண்மூடியிருக்கிறான்.

பஞ்சு இறக்கைகளின் வானம்

கிளர்ச்சியூட்டும் ஒரு கனவுக்காக
மலைப் பிரதேசம் வந்தவன்
பரவசத்தை மனத்தின் சிதிலத்திலிருந்து
மீட்டுகிறான்.
அதனூடாகக் காலவெளியின்
அழுகையைத் திசையெங்கும் பூசுகிறான்
அவன் முத்தத்தின் இனிப்பால்
மலையின் பெருங்கற்கள் அசைகின்றன.
பேரன்பின் வியர்வை மணமும்
மலையிலிருந்து மஞ்சு விரிப்பாக மோதி
நாசியில் ஏறுகிறது
பஞ்சு இறக்கைகளின் வானம்
தலை வழிய
மலைப் பிரதேசம் நடனத்தின்
அசைவுகளுக்குள் வந்துவிட்டது.
கீழே ஊர்ந்து நகரும் எறும்பு மனிதர்கள்
எதையுமே அறியாதவர்களாக
பெரும்பாரத்தை சுவாசத்தின் கனல் பொங்க
சுமந்து நகர்கிறார்கள்.
தேகமணம் இனிக்க
மார்பில் நீந்தும் மலைப் பிரதேசம்
கிளர்ச்சியூட்டும் கனவாக
மெல்ல விரிவுகொண்டுவிட்டது
மலைப் பிரதேசம் வந்தவனின்
காலடி நிலம்
பித்தத்தின் ஒரு கணமாக
எழுந்து நிற்கிறது.
ஆடத் தொடங்குகிறான் பைத்யன்
குலுங்குகிறது
மலை.

குட்டி மான்

அவளுடைய அழுகையை நேர்கொண்டு
அறிந்த கணம்
பரிதவிப்பும் பயண வழிகளில்
நிறைந்த கண்ணீருமாய்
அலைந்தவன் எங்கிருக்கிறான்?
லேசான மனத்தின் பயமும்
சுய பச்சாதாபமும் கலந்த அழுகையை
அறிந்தவன் யார்?
சுவர்த் தடுப்புகளின் காவிய அறையில்
பனித்த நீர்மை மிகு ஓலம்
எதைப் பற்றியது
நிராதரவு என்ற சொல்லின்மீது
நிகழ்ந்த அழுகையை
எப்படி எதிர்கொள்வது
கைவிடப்படுதலுக்கும் கைவிலங்கிடப்படுதலுக்கும்
நடுவே ஓர் இளம் பெண்
தனது வாழ்வை அழுகையின்
கரிய மலரிலிருந்து அறிந்துணருகிறாள்.
விம்முதல் மட்டுமல்ல
துளித் துளிக் கடலாய்ப் பெருக்கெடுக்கும்
பேரலையின் கடுஞ்சீற்றமுமல்ல
தன்னந் தனிமையின் நிழல் படிந்த
பெருந் தயக்கம்
தனக்கு முன்பாக நிர்மானிக்கப்பட்ட
வணிகக் கூடங்களின் பெருநகரத்தில்
ஓர் இளம் பெண்
ஓரு பொருட்டல்ல
சுவரில் சாய்ந்து
முழங்கால்களில் புதைந்து விம்மும்
ஒரு முகம்
யாருடையது?
அவளுடைய எதிர்பார்ப்பின் சரிவோ
எதிர்காலம் பற்றிய பீதியோ
இக்கணத்தில் நிகழும் துக்கமோ
எதுவுமேயல்ல உங்களை அசைப்பது
துயரத்தின் அதி உன்னதமான
சம்பாஷணையின் ஆழ்ந்த பொருளை
விளக்க அவளுக்கு எதுவுமே தடையாயில்லை.
ஏனெனில்
அவள் அழுதாள்
காடுமலைகள் தாண்டித்
தன்னைக் காவுகொள்ளத் துரத்தும்
கொடு மிருகத்திடமிருந்து
சுவாசம் பீறிட ஓடோ டிக்கொண்டிருக்கும்
ஒரு குட்டி மானின்
காலடிகளுக்குச் சமானமாய்
ஓர் இளம் பெண் அழுதாள்.

No comments: