Saturday, March 12, 2011

கவிதைகள் எஸ். பிரசாந்தன் (கொழும்பு)

ஓவியம் செதுக்குகிற பாடல்


இரண்டாம் பரிசு பெற்ற கவிதை

1

தொன்மங்கள் மடிகளில் தாலாட்டிய
வரலாற்றை
தன் பங்கிற்கு வர்ணந்தீட்ட விரும்பிய ஒருவன்
கடலின் நிறத்தை அழைத்துத் தோற்கிறான்.
வானவில் வர மறுத்து மறைகிறது.
சோர்ந்து உட்கார்ந்தவன்
முகத்துக் கவலை ரேகைகளைப் பொறுக்கி
அதன் அர்த்தத்தில் அடுக்க,
பிறந்தது ஒரு துப்பாக்கி.
இனி, வர்ணக் குழம்பு குறித்த கவலையில்லை.
இருந்தது எங்கள் அனைவரதுங் குருதி.
வர்ணங்கொடுத்துப் பிணங்களானோம்.
நிகழ்ந்த,
செந்தூரிகையின் தாண்டவத்தை
உலகு மறவாது ஒரு பொழுதும்.

2

தீட்டிய வர்ணம் உலர்வதற்கிடையில்
தன்னை ஒரு சிற்பியென்றும் உணர்கிறான்.
வர்ணங்கொடுத்துப் பிணங்களானோம் நாம்.
எம் மனைவியரோ
கல்லாய்ச் சமைந்து விழுந்தனர் எங்கும்.
அவர் உடம்புகளில்
தன் உளி கொண்டு செதுக்கத் தொடங்க
ஆயின, ஒரு கோடிப் பேய்ச் சிற்பங்கள்.

3

எல்லாம் முடிந்த பின்னர்
காலத்தின் சுவரில் தனது ஓவியங்களை மாட்டுகிறான்.
கிடக்கும் வெளி எங்கும்
பேய்ச் சிற்பங்களை அடுக்கிப் புன்னகைக்கிறான்.
விரலிடை கொழுவிய புகையுடன்
வாயில் ஒரு பாடலை மிதக்க விடுகிறான்.
எல்லாவற்றையும் மறைத்து
வரலாற்றை மெழுகுகிறது,
அவன் பாடும் தருமகீதம்.

No comments: