Sunday, March 13, 2011

உரைநடைக் கவிதைகள் ராணிதிலக்

எனக்குப் பசிக்கிறது



எனக்குப் பசிக்கிறது. இது எல்லோருக்கும் நடப்பதுபோலத்தான். என் பசியைப் போக்கக் கூடிய கனியொன்று அந்த மரத்தில் வாழ்கிறது. இக்கனியை வீழ்த்த ஓர் அம்பு போதுமானது. அல்லது எனது உடல் போதுமானது. நான் என் உடலை நம்பினேன். அது மரமேறத் தொடங்கியது. இந்தச் சின்னஞ்சிறிய மரமோ மேலும் மேலும் வளர்ந்தபடியே இருக்கிறது. எனக்கோ வயதாகிவருகிறது. எனக்குப் பசி தீர வேண்டும். கனி வேண்டும். என் கால்கள் மரத்தைப் பற்றியிருந்தாலும் கைகளால் கனியைப் பறிக்க முடியவில்லை. என் முதுகு சுமக்கும் அம்புக்கூட்டில், சில அம்புகள் வெளியை நோக்கிப் பார்த்தபடியிருக்கின்றன. எனக்கு வயதாவதால், மரத்தைவிட்டு இறங்கினேன். நாணில் அம்பைப் பூட்டினேன். குறி பார்த்தேன். கனியைப் பார்வை எய்தியது. என் பார்வை யைத் தொடர்ந்தபடி அம்புகள் பறந்தன. அக்கனி தரையில் விழுந்தது. ஏதோ ஓர் அம்புதான், கனியை வீழ்த்துகிறது. அக்கனியிலிருந்து அம்பைப் பறித்தேன். அம்பறாத்தூணியில் அடைத்தேன். கனியைப் புசித்து பசியை அழித்தேன். கனியை வீழ்த்தாத அம்புகள் பறந்துகொண்டிருந்தன. அவை தற்சமயம் கிளையை, இலையை, புவி ஈர்ப்பு விசையைக் கடந்துவிட்டன. அவற்றிற்கும் பசிதான் போலும்.

சனி

என் உச்சந்தலையில் சிலந்தி எதுவும் வசிக்கவில்லை. சமீப காலமாக, என் தலையை நோக்கி வரும் காக்கை, சடாரென்று கொத்திப் பறப்பது வழக்கமாக நிகழ்ந்துவருகிறது. இக்காகங்களைப் பிதிர்கள் என்பார்கள். எந்தப் பிதிருக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை. மேலும் பிதிரைக் கல்லால் அடிப்பதுகூடப் பாவம் என்பதால் காகம் தப்பிப் பிழைத்துவருகிறது. மேலும் காகம் கொத்துவது என்பது சனி பிடிப்பது என்கிறார்கள். சனி பிடிக்கிறதோ இல்லையோ, என்னிடம் சிலந்தி இல்லை என்றாவது காகத்திடம் சொல்ல வேண்டும். என்னால் முடியாத பட்சத்தில், என் தலையை அறுத்தாவது, அதனிடம் தந்துவிட வேண்டும். எனக்கிருப்பது ஒரே ஒரு தலைதான் என்பதால் அதற்கும் சாத்தியம் இல்லை. மேலும் காகம் கொத்துவது குறித்த சந்தேகங்கள், மனதில் பலப்பல வலைகளை விரித்தபடி இருக்கிறது. எதிலும் காக்கை சிக்குவதாக இல்லை. ஒரு வேளை சிலந்தி கிடைத்தால் காகத்திடம் கொடுத்திடத்தான் வேண்டும். இப்போதைக்குக் காகத்தை விரட்டியபடி இருக்கிறேன். அது கொத்தியபடியே இருக்கிறது. அந்தி சாய்ந்த பிறகு காகம் மறைந்துவிடுகிறது. என்றாலும், இந்த இரவு காகத்தின் நிறத்தில் ஒளிரும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது தலையைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

மீனின் வார்த்தைகள்

நான் என் பார்வையைத் தொடங்குகிறேன். அங்கிருந்து ஆறு பிறக்கிறது. அது போலத்தான் ஆறு முடிவதும்கூட. இந்த ஆறு வாழ்ந்துகொள்ள, இதன் கரையில் அமர்ந்திருக்கிறேன். ஏனெனில், என்னை நானே தொலைத்துக்கொள்ளும் முகாந்திரம் இங்குதான் கிடைக்கிறது. அதன் சுழித்தோடும் ஓசையைக் கேட்கும் போது, என் கால்கள் கூழாங்கற்களை அடைந்துவிடுகின்றன. என் விரல்கள் வழவழப்பாகிக்கொண்டிருக்கும் கற்களைத் தீண்டும் கணத்தில், என் கண்கள் மீன்களைப் பார்க்கத் தொடங்குகின்றன. மீன்கள் உதடசைப்பது, அவை பார்க்கத் தவறவிடுவதும் இல்லை. என் காதுகளோ, மீன்கள் தமக்குள் பேசுகின்றன என்கின்றன. அவற்றின் பேச்சுகள் அர்த்தமானவை என்று நான் நம்பத் தொடங்கினேன். என் இதயம், மீனின் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை உருவாக்கத் தொடங்கின. நான் மீன்களோடு உரையாட எத்தனிக்கும்போது துரதிர்ஷ்டம் நடந்தேறியது. நீங்கள் நினைப்பதுபோலவே அந்தி சாய்ந்துவிட்டது. ஓசை மறைந்தது. அதன் பின்னால் கூழாங்கற்கள் உருண்டோ டிவிட்டன. நதியும் காணாமல்போனது. நான் காணாமல் போக முடியாது என்பதால், இந்த நகரத்திற்கு வந்தும்விட்டேன். எதிர்ப்படுபவர்களிடம் மீனின் வார்த்தைகளைச் சொல்ல முயல்கிறேன். அவர்களோ, உங்கள் உதடுகள் ஏன் மீனின் உதடுகள் போல் துடிக்கின்றன என்கிறார்கள். எங்கே என்மீதான நம்பிக்கையை நான் வெறுக்கிறேனோ, அங்கிருந்து நீர்க் குமிழிகள் அதிகமாகவே உடைபடத் தொடங்கிவிடுகின்றன. நகரமெங்கும் சும்மாவாகவே பேசியபடி திரியும் ஒருவனைப் பைத்தியக்காரன் என்று சொன்னாலும், எனக்கு ஆட்சேபம் இல்லை. அங்கிருந்தே மீன்களின் புரிபடாத வார்த்தைகள் தொடங்குகின்றன.

No comments: