Sunday, March 13, 2011

கவிதைகள் அப்பாஸ் கவிதைகள்

ஜன்னல்


அ) முடிவே
இல்லாததுதான்
இந்த ஜன்னல்
நீ
ஆடையை ஒப்பனையை
களைந்து, களைந்து
மாற்றுவதைப் போல
உன்னை
நோக்கிக்
காத்திருக்கிறது
ஒரு
வெளி ஜன்னல்.

ஆ) பிரபஞ்ச வெளியெங்கும்
நீந்தும்
உனது ஜன்னலில்
ஒரு
ஓவியம்
வரைந்துகொண்டிருக்கிறது
தன்
வரைபடத்தை
விரித்தபடி

இ) வெள்ளை நாரைகள்
நீந்துகின்றன
ஏரியில்
உனது கண்களைப் போலவே
மெல்ல உடையும்
ஜன்னலின்
பகலில்
உனது கண்களை
யாசித்துக் கிடக்கிறான்
ஜன்னல் மனிதன்.

ஈ) கண்களையும்
திறந்த ஜன்னல்களையும்
என்னதான் செய்துவிட முடியும்
ஜன்னல் இல்லாத
வீடொன்று வேண்டுமா
வெளியில் வா
மறைப்பே
இல்லாத பூமி ஒன்று
தகித்துக் கிடக்கிறது
தன்
நிர்வாணத்தின்
பச்சை மலைகளோடு.

உ) வெளி தெரியும்
ஜன்னலில்
என்னதான் பேசுகின்றன
உனது கண்கள்.
உன்னை மறைக்க
எது உண்டு பூமியில்
நனைந்த மரங்களும்
உதிர்ந்த மஞ்சள் பூக்களும்
நீயெனக்
கிடக்கின்றன
வெளி ஜன்னலில்.

ஊ) ஒரே ஒரு முறை
பார்க்கிறாய்
ஜன்னல் வழியே
பின்னும்
திறந்துகொள்கிறது
மற்றும் ஒரு ஜன்னல்.

எ) திறந்த ஜன்னல்
காட்சிகள் மாறுகின்றன
ஒரே நொடியில்
வேறு வேறு
வடிவங்கள்
வேறு வேறு
பார்வைகள்
எல்லாம் நொடியில்.

ஏ) உனது
ஜன்னலுக்குத் தெரியும்
உனது நிர்வாணம்
மூடுவதும்
திறப்பதும்
உன் கையில் என்றாலும்
தன் சுதந்திரத்தை
உனக்குக் கொடுத்தபடி
அது கிடக்கிறது
ஒரு பெரு
மன வாசலில்.

ஐ) ஏதாவது
ஒன்றில்தான் மிதக்க வேண்டியிருக்கிறது
தேநீர்க் கோப்பையில்
மாலை சாய்மானத்தில்
குழந்தையின் சிரிப்பில்
புகைப்பின் தனிமையில்
நீ
மிதக்க முடியாத
பகல் ஒன்று
துணைக்கு அழைக்கிறது
தன்
தனிமையின் ஜன்னலுக்கு.

No comments: