Saturday, March 12, 2011

கவிதைகள் மௌனன்

அப்பாவின் தோட்டம்


மூன்றாம் பரிசு பெற்ற கவிதை

வீட்டின் புறத்தே சிறியதோர் தோட்டம்
பருவம் ஒவ்வொன்றிலும்
மஞ்சள் சிவப்பு வெள்ளை நிறங்களை
மலர்களில் குழைத்து
செடிகள் விளையாடும்.
தங்கையின் நேரடிக் கவனிப்பில்
நேர்த்திமிக்க வரிசைப்படுத்தல்
தோட்டத்தைப் பெண்பாலாக்கியிருந்தது
பாத்தி கட்டப்பட்ட கீரைகள்
அம்மாவின் விருப்பம்
பறிக்கப் பறிக்கப் படரும் பொன்னாங்கன்னியை
அம்மா போலவே என்பாள் தங்கை
தென்னையின் அருகே நிற்கும் வேம்பு
நான் நட்டது
செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றும்போது
அம்மாவிடம் கேட்கிறேன்-
அப்பாவுக்கென்று எந்தச் செடியும் இல்லையே
அப்பா பற்றிய கதைகள் வேண்டுமெனில்
மலர்களும் வண்ணத்துப் பூச்சிகளும்
என்ன செய்யும்?
அப்பாவின் வாசத்தை
காற்றெப்படி உணரும்!
அப்பாவுக்கென்றிருக்கும் தனித் தோட்டத்திற்கு
அழைத்துச் சென்றாள் அம்மா
நான் பசேலென்றிருந்தேன்
தங்கையின் முகச்சாயல் பூக்களில்
ஊடுபயிராகியிருந்தாள் அம்மா
அந்தத் தோட்டத்து மண்ணின் சுவை
உவர்ப்பும் கரிப்பும்.

1 comment:

mouna kaatchigal said...

mika sirantha kavithai. appaavai patriya aazamaana purithalai undaakkukinrathu. anbu niidikka ithupondra kavithaikalai nichayam padikka vendum.
- kokilan.