Friday, March 11, 2011

சுகிர்தராணி கவிதைகள்

அவளை மொழிபெயர்த்தல்

சுருட்டிய காகிதமென
வெளிச்சம் வீசப்பட்ட படுக்கையறையில்
உறக்கம் கலைகிறார்கள்
இசைக் குறிப்புகளற்ற
பாடலைக் கேட்டு.
சிறுபறையைக் கையிலேந்தித்
தாளமிட்டவாறு
மெலிந்த பின்புறங்கள் அசைய
அவள் கடந்து போகிறாள்
பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை
எட்டிப் பார்க்கும் ஆவலுடன்
என்னிடம் வினவுகிறார்கள்
அப்பாடலின் பொருள் வேண்டி
பசியை உண்டு
பசியைக் கழிக்கும் வறுமையையும்
தீண்டாத காற்றால்
தெளிக்கப்பட்ட அவள் இருப்பிடத்தையும்
ஒடுக்கப்பட்ட அவள் இனத்தையும்
மொழிபெயர்த்துச் சொன்னபோது
நான் அவளாகியிருந்தேன்.

l

போரின் குறுவாள்

மீன்கள் புரளும் கழிமுகத்தைப் போல்
குறுவாள்கள் நிறைந்திருக்கின்றன
என் பாசறையில்
இரத்தம் பார்க்கக் காத்திருக்கும்
பசித்த புலியின் பற்களென
ஒன்றையொன்று குத்தி
வெறியேற்றிக்கொள்கின்றன
கற்களும் உலோகங்களும்
உரசிக்கொள்ளும் அச்சத்தம்
ருசி கொண்ட பேரொலியை ஒத்திருக்கின்றது
தசைப் பிசிறு உலர்ந்த வாள்களின்
கண்ணீர்க் கதைகள்
ஏதேன் நதிநீரால் கழுவப்படுகின்றன
என்னுடலைக் கீறிக் கீறி
ஒவ்வொன்றாய்ச் சோதனையிடுகிறேன்
அவற்றின் கூர்மை
பிஞ்சுப் பெண்ணொருத்தியின்
முளைத்த மார்புபோலத்
திருப்தியூட்டுகிறது
தூரத்தில் தீவட்டி ஏந்திய
மனிதர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
போருக்குத் தயாராகிறேன்
குறுவாள் ஒன்றை
யோனிக்குள் மறைத்துக்கொண்டு.

l

ஆகச் சிறந்த புணர்வு

காமப்பனி பொழியும் அவ்விடம்
கூடலின் அடிவாரத்தில் உறைந்திருக்கிறது
மாலையின் சாய்ந்த ஒளியும்
பிச்சியின் இளவாசனையும்
கூடாரமாய்க் கதகதப்பூட்டுகின்றன
பிசைந்த மாவைப் போல்
மென்மையுற்ற உடலின் மேடையில்
சாகசங்களைத் தொடங்குகிறாய்
வேர் பிடுங்கப்பட்ட நீர்த் தாவரத்தைப் போல்
எழும்பி மிதக்கிறேன்
உன்னை விரகத்தின் வளையமாக்கிக்
கால்வழியே நுழைத்தெடுக்கிறாய்
பின் முத்தத்தின் வாள் கொண்டு
என் தேகத்தைச் சிதைக்கப்
பீறிடுகின்ற பருவத் தேனை
வாயின் குழலால் உறிஞ்சுகிறாய்
இன்பத்தின் பாரம் தாளாது
அசைந்தாடுகிறது உடல்கிளை
கடைசியிலுன்னை நீலநிறச் சுடராக்கித்
திரட்சியாக விழுங்குகின்றேன்
ஆகச்சிறந்த புணர்வின் திரை
கீழிருந்து மேலெழும்புகிறது.

l

அப்பாவின் கல்லறை

இளவேனில் கால இராட்டினத்தில்
பயணித்து
அவரது கல்லறையை அடைகின்றேன்
வாடாமல்லிகள் புன்னகைக்கின்றன
உள்வாங்கிய மண்ணை
விலக்கிக்கொண்டு மேலேறி அமர்கிறார்
சொல்லாமல் விட்ட மனவருத்தங்களை
நினைவின் இலையில்
பரிமாறுகின்றேன்
மர வாசனை வீசும் வனவாசியைப் போல்
கவிதைப் பழங்களை
விற்றுத் திரிந்த என்
கன்னத்தில் அறைந்ததற்காய்
அன்பின் களிம்பைப் பூசுகிறார்
நீர்க் கொடிகளிலிருந்து விடுபட்ட
வெற்றுடலைப் போல்
குற்ற உணர்வில் மிதக்கும் அவருக்கு
என் பாடலின் வரிகளை
இசைத்துக் காட்டுகிறேன்
அவர் கண்களில் நீர் துளிர்க்கிறது
இருள் விலகாத அதிகாலையில் பார்க்கலாம்
கவிதையை நான் பாடுவதையும்
கண்மூடி அவர் இரசிப்பதையும்
மனிதர்கள் எங்கள்மீது கல்லெறிவதையும்.

l

இன்றைய பகல் பொழுது என்னுடையது

உயர்ந்த நெற்குதிர்போலிருக்கும்
இரவின் ஆளுகையிலிருந்து
காற்றின் கயிறேறித் தப்பிக்கிறேன்
வெளிச்சத்தின் நதியில் மூழ்கி எழ
படீரென்று திறந்துகொள்கின்றன
என் உடலின் கண்கள்
எவ்வளவு சுகங்களை இழந்திருக்கிறேன்
செம்பழுப்பான முத்தச் சுவட்டைக்
கன்னத்தில் இடுகிறது சூரியன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பறவையாகிப் பறக்கின்றேன்
உரசிப் புணர நெருங்கி வருகிறது
ஒரு நிஜப் பறவை
கீழிறங்கி வனங்களில் திரிகின்றேன்
விலங்குகளோடு ஓடுகின்றேன்
இலையுதிர்ந்து நிற்கும் மரங்களில்
முத்தங்களைக் கட்டித்
தொங்க விடுகிறேன்
நெடுநாள் தவித்த மழையின் கொடிகளை
என்மீது படர விடுகின்றேன்
முலையழுந்த என் நண்பனைத் தழுவுகையில்
பகலின் குளிகை தீர்ந்துபோகிறது
வருகின்ற இரா எப்படியோ
இன்றைய பகல் பொழுது என்னுடையது.

l

ஒற்றைச் சாட்சி

கிரணங்கள் கரைந்து வழியும்
பின்மாலை வேளையில்
என் அத்தனை பலவீனங்களையும்
சுருட்டி ஒளித்தபடி
அவ்விடத்தை அடைகிறேன்
பகலின் ஒளி துடைக்கப்பட்டு
மின்னும் அவ்விடத்தின் பேரமைதி
மிருகத்தின் ரோமத்தால் பின்னப்பட்ட
ஒரு போர்வையாகி என்னைப் போர்த்துகிறது
எத்தனை பாதச் சுவடுகள்
எத்தனை கிசுகிசுப்பான வார்த்தைகள்
பாதரசத் திவலைகள்போல்
காலடியில் உருண்டு ஓடுகின்றன
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றுகொண்டிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றைச் சாட்சியாய்.

No comments: