Friday, March 11, 2011

கவிதை எம். ரிஷான் ஷெரீப்

சூறாவளியின் பாடல்

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

உஷ்ண வெளிக்காரன்

கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி

வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்

வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன

உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

No comments: