Saturday, March 12, 2011

சீனகவிதை பயணி

ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்

அறிமுகம்

ஒரு சில கோணங்களில், ஷிழ் சிங் எனும் பழங்காலச் சீன இலக்கியம், நம் சங்க இலக்கியத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது.

ஷிழ் சிங், சீன இலக்கிய வரலாற்றில் இதுவரை கிடைத்துள்ளவற்றில் முதல் நூல். 305 பாடல்கள் கொண்ட தொகை நூல். பாடல்களை எழுதிய கவிஞர்களின் தகவல்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை. பாடுபொருள்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியின் துணையுடன், இவற்றில் சில பாடல்களின் தொன்மை கி.மு. 1000க்கும் முந்தையது என்பர். பாடலின் வரிகள் பாடல்களாகத் தோன்றிய காலமும் பாடல்கள் எழுதப்பட்ட காலமும் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட காலமும் தெரியவில்லை. சீன அறிஞர் க்கொங் ஃபு ட்ஸ§ (கன்ஃபூசியஸ்) இதன் தொகுப்பாசிரியர் என்று சொல்லப்படுகிறது. க்கொங் ஃபு ட்ஸ§ இப்பாடல்களை மேற்கோள்களாகப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.

ஷிழ் சிங் என்பதைக் கவி நூல் என்று மொழிபெயர்க்கலாம். நற்பாடல் தொகுப்பு, செங்கவி நூல் என்றெல்லாம் மொழிபெயர்ப்பதும் உண்டு. இந்நூலில் மூன்று பிரிவுகள் உள்ளன: 160 நாட்டுப் பாடல்கள், 105 விழாப் பாடல்கள், 40 வேண்டுதல் பாடல்கள்.

பல மொழிகளில் ஷிழ் சிங் நூலின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சீன இலக்கியத்தின் எந்த நூலுமே நேரடியாக இந்திய மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில இந்திய, சீன நண்பர்களின் துணையுடன், ஷிழ் சிங் நூலிலிருந்து சில பாடல்களை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரவுள்ள இந்நூலிலிருந்து சில கவிதைகள் இங்கே தரப்படுகின்றன.

குறிப்பு: சீன மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை, தாவிரவியல் மற்றும் விலங்கியல் பெயரிடல் முறைமையின்படி அடையாளம் காண முடிகிறது. இப்பெயர்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு உதவி தேவைப்படுகிறது. உதவ முனைபவர்கள் msridharan@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.

தினைச்செழிப்பு

(கவி எண்: 65. நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்தது)

அந்தத் தினை செழித்திருக்கிறது
அந்தச் சோளம் முளைவிட்டிருக்கிறது
மெதுமெதுவே நெடுகும் நடை
அசைந்தாடி அலைபாயும் மனம்

என்னைத் தெரிந்தவர்கள்
என் மனம் வாடுகிறதோ என்பார்
என்னைத் தெரியாதவர்கள்
எதை நாடுகிறேனோ என்பார்
விரிநெடும் பெருவானமே!
இது யாராலேயோ!

அந்தத் தினை செழித்திருக்கிறது
அந்தச் சோளம் கதிர்விட்டிருக்கிறது
மெதுமெதுவே நெடுகும் நடை
மயங்கிக் குழம்பியதாய் மனம்

என்னைத் தெரிந்தவர்கள்
என் மனம் வாடுகிறதோ என்பார்
என்னைத் தெரியாதவர்கள்
எதை நாடுகிறேனோ என்பார்
விரிநெடும் பெருவானமே!
இது யாராலேயோ!

அந்தத் தினை செழித்திருக்கிறது
அந்தச் சோளம் முற்றியிருக்கிறது
மெதுமெதுவே நெடுகும் நடை
முள்சிக்கிய தொண்டையாய் மனம்

என்னைத் தெரிந்தவர்கள்
என் மனம் வாடுகிறதோ என்பார்
என்னைத் தெரியாதவர்கள்
எதை நாடுகிறேனோ என்பார்
விரிநெடும் பெருவானமே!
இது யாராலேயோ!

சென்றான் தலைவன் பணிநிமித்தம்

(கவி எண்: 66. நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்தது)

சென்றான் தலைவன் பணிநிமித்தம்
திரும்பும் நேரம் தெரியவில்லையே

கோழிகள் கூடுதிரும்புகின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆநிரைகள் கீழிறங்குகின்றன
சென்றான் தலைவன் பணிநிமித்தம்
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?

சென்றான் தலைவன் பணிநிமித்தம்
நாட்கள் இல்லை; திங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?

கோழிகள் கூடடைந்துவிட்டன
பொழுது சாய்ந்துவிட்டது

ஆநிரைகள் கீழிறங்கியடைந்தன
சென்றான் தலைவன் பணிநிமித்தம்
பசியும் தாகமும் வாட்டாதிருக்கட்டுமே

நல்லேர்

(கவி எண்: 291. வேண்டுதல் பாடல்கள் வகையைச் சேர்ந்தது)

கூரிய கூரிய நல்லேர்
தென்காணியிலே துவக்கம்1
தானியம் பலவும் விதைக்கின்றார்
ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்.

பொருட்கள் பண்டங்கள் கொணர்கின்றார்
கூடைகளில் மற்றும் வட்டிகளில்.
அவர்கள் கொணர்வது நற்சோளம்
தலையில் வட்ட மூங்கில் தொப்பி
அந்தக் கலப்பைகள் ஆழ உழுவன
கள்ளியையும் பூண்டையும் அகற்றிவிடுவன
கள்ளியும் பூண்டும் அழுகும் நிலத்தில்
கம்பும் தினையும் செழித்து வளரும்.
அறுப்போர் முன்பு சரசரக்கின்றன
அடுக்கப்பட்டுத் தலையாட்டுவன
சுவரின் உயரமாய் அடுக்கப்பட்டன;
சீப்பின் பற்களாய் வரிசைப்பட்டன.

களஞ்சியம் யாவும் திறக்கப்பட்டன
களஞ்சியம் யாவும் நிறைந்துவிட்டாலோ
மனைவி மக்களுக்கு அமைதி நிலவும்.
கிளைத்து வளைந்த கொம்புகள் கொண்ட
கறுப்புக் கிடாவைப் பலிகொடுத்தோம்
நாமே வெல்வோம்; நாமே தொடர்வோம்
தொடர்வோம் நமது முன்னோரைத்தானே.

குறிப்புகள்:

1. மூலத்தில் மு எனும் சீன நில அளவு, இடப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பலிகொடுக்கப்படுகிற கிடாவின் வளைந்து கிடக்கிற கொம்புகள், நற்பயனைக் கொடுப்பன என்ற நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது. சில உரையாசிரியர்கள், இது காலங்காலமாய் சந்ததி சந்ததியாய் ஒன்றையன்று பின்னிப் பிணைக்கும் உறவைக் குறிப்பதாகவும் கொள்வர்.

No comments: