Saturday, March 12, 2011

கவிதைகள் செல்மா பிரியதர்ஸன்

பூச்சிக் கடி - பொம்மக் கடி - கல்லுக் கடி

தன் வழியே சென்றாலுங்கூட
ஒரு பாம்பை ஏன் அடித்துக்கொல்ல வேண்டும் என்பது
குழந்தைக்குப் புரிவதில்லை
கழிகொண்டு அதன் நீள உடலைத் தொங்கவிடுபவர்களைக் கண்டே
குழந்தை அதிகம் அஞ்சுகிறது
அவர்களோ பொம்மை வாங்கித் தருபவர்களாகவும்
இருந்துவிடுகிறார்கள்
ஆனால்
நிர்வாணம் குறித்து
பொம்மைக்கோ குழந்தைக்கோ
கருத்திருப்பதாகத் தெரியவில்லை
குழந்தைக்கு ஆடையைக் கட்டாயமாக்குகையில்
குழந்தை பொம்மையை நிர்வாணமாக்குகிறது
பிறகு
பொம்மையைக் குளிப்பாட்டவோ
தொட்டிலிலிட்டுத் தாலாட்டவோ
வாய்வரை கொண்டுசென்ற சோற்றை
தானே தின்று
பொம்மையின் வயிறு நிறைப்பதையோ
குழந்தை சட்டென நிறுத்திவிட்டிருந்த நாளை
நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள்
அப்போதுதான்
கண்கள் தோண்டப்பட்டு
கைகால் முறிந்த பொம்மை
மறைவிடங்களிலிருந்து நிர்வாணமாய் உங்கள்முன் தோன்றுகிறது
ஏற்கனவே
வாசலில் ஊர்ந்துவரும் பூரானுக்கு
காலணியைத் தூக்கிவந்து
உங்களிடம் தரக்
குழந்தை சமத்தாய்ப் பழகியுமிருக்கிறது
குழந்தையின் உயிரற்ற பொம்மையையும்
பொம்மையின் கருணையற்ற குழந்தையையும்
ஒரு சேரப் பார்க்கத் தெரியாத நீங்கள்தான்
பதற்றமுறுகிறீர்கள்
ஊனம் மற்றும் நிர்வாணம் குறித்து.

பனியில் எரியும் காகிதக் கப்பல்கள்

இன்னும் பெய்யாத அடைமழைக் காலத்தில்
நீங்கள் அந்தச் சிறுமியைக் காண்கிறீர்கள்
அவளிடம் குளிர்காலத்திற்கான கம்பளிகள் எதுவுமில்லை
திருடிவந்த சோளத்தட்டைகளை
பதத்துப்போன குப்பைகளோடு
பனிக்கு எதிராகத் தீயிலிடும் வழக்கத்தை
அறிந்திருக்கிறாள்.
அவளிடம் காத்திருக்கின்றன
மிதக்கும் சில காகிதக் கப்பல்கள்
மேலும்
வேறிடம் நோக்கி நகரும் மேகங்கள்மீதான
ஒரு பிரார்த்தனை
முந்திக்கொண்டுவிட்ட பனியின்
வாடைக்காற்றில் அவளுடல் துயருருகிறது
மேலும் காகிதக் கப்பல்களைத் தீயிலிடுவது
அவளது பற்களின் நடுக்கத்தைக் குறைக்கிறது
பருவங்களின் தீர்க்கதரிசனங்களைப் பற்றிய
பாடல் ஒன்றினை நினைவுகூர்ந்தவள்
மேகங்கள் மீண்டு வரும்
அறுவடையில் கம்பளி தரும்
என் வரிகளையே தொடர்ந்து முணுமுணுக்கிறாள்
மறந்த வரிகளையும்
அவளது மழைக் காலத்தையும்
தென்துருவத்துப் பனிச் சூறாவளி
வேறு பிராந்தியங்களுக்குக் கடத்திச் செல்வதை
நடுங்கும் சிறுமியோடு
நாமும் காண்கிறோம்.

No comments: