Friday, March 11, 2011

மாயா ஏஞ்சலோ கவிதைகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு குவளைக் கண்ணன்

இருந்தும் நான் எழுகிறேன்

உனது கசந்த, திருகலான பொய்களால்
வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம்,
என்னைப் புழுதியில் தள்ளி மிதித்துவிடலாம்
ஆனால் இருந்தும், புழுதியைப் போல், நான் எழுவேன்.

எனது வெட்கங்கெட்டதனம் உன்னை நிலைகுலைக்கிறதா?
நீ ஏன் இருண்டு கிடக்கிறாய்?
எனது அறையில் எண்ணெய்க் கிணறுகள்
இரைத்துக் கொண்டிருப்பைப் போல் நான் நடப்பதாலா!

நிலவுகளையும் சூரியன்களையும் போல்,
உயரும் அலைகளின் நிச்சயத்தன்மையோடு
நம்பிக்கைகள் உயரப் பாய்வதைப் போல்,
இருந்தும் நான் எழுகிறேன்.

கண்ணீர் சொட்டுகளென தோள்கள் சரிய
ஆத்மார்த்தமான கதறல்களால் சோர்ந்துபோய்,
குனிந்த தலையோடும் தாழ்ந்த கண்களோடும்
நான் நொறுங்கிப் போவதைப் பார்க்க விரும்புகிறாயா?

எனது செருக்கு உன்னைக் காயப்படுத்துகிறதா?
எனது புழக்கடையில் தங்கச் சுரங்கங்களை
தோண்டிக் கொண்டிருப்பதைப் போல்
நான் சிரிப்பதை உன்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அல்லவா.

உனது சொற்களால் என்னைச் சுட்டு வீழ்த்தலாம்
உனது கண்களால் என்னை வெட்டிவிடலாம்
உனது வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்
ஆனால் இருந்தும், காற்றைப்போல், நான் எழுவேன்.

எனது கவர்ச்சி உன்னை நிலைகுலைக்கிறதா?
எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்திருப்பதைப் போல் நான் நடனமாடுவது
சட்டென அதிர்ச்சியடைய வைக்கிறதா?

வரலாற்றில் அவமானக் குடிசைகளிலிருந்து
நான் எழுகிறேன்
வேதனையில் வேர்விட்டிருக்கும் ஒரு இறந்த காலத்திலிருந்து
நான் எழுகிறேன்

உயர்ந்தேறும் அலைகளில் பொங்கியெழுகிற, உப்புகிற,
பாய்ந்தெழுகிற, அகன்ற கருங்கடல் நான்
திகிலான அச்சந்தரும் இரவுகளைப் பின்தள்ளி
நான் எழுகிறேன்
அதிசயிக்கத்தக்க அளவுக்கு தெளிவாகப் புலர்ந்த காலையில்
நான் எழுகிறேன்
எனது மூதாதையர் தந்த பரிசுகளைக் கொண்டு வருகிறேன்,
அடிமையின் கனவும் நம்பிக்கையும் நான்,
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்,

n

வியப்புக்குரிய பெண்

எங்கே இருக்கிறது எனது ரகசியம் என்று
கவர்ச்சிகரமான பெண்கள் அதிசயிக்கிறார்கள்
ஆனால் அவர்களிடம் சொல்லத் துவங்கும்போது
பொய்களைச் சொல்வதாக நினைக்கிறார்கள்
நான் சொல்கிறேன்,
அது எனது கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது
எனது இடுப்பின் வீச்சில் உள்ளது
எனது காலடியின் தாவலில் உள்ளது
எனது உதடுகளின் சுழிப்பில் உள்ளது
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்,
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

n

எவ்வளவு அமைதியாக உங்களால்
ஒரு அறைக்குள் நுழையமுடியுமோ
அவ்வளவு அமைதியாக நுழைகிறேன்,
மேலும் ஒரு ஆணை நெருங்குகிறேன்
பயல்கள் எழுந்து நிற்கிறார்கள் அல்லது
மண்டி இடுகிறார்கள்.
பிறகு என்னை மொய்க்கிறார்கள்,
ஒரு தேனீக் கூட்டம்.
நான் சொல்கிறேன்,
எனது கண்களில் தீயில்
எனது பற்களின் பளீரிடலில்
எனது இடுப்பின் ஊசலில்
எனது பாதங்களின் குதூகலத்தில் உள்ளது.
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்,
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

n

என்னுள் எதைக் காண்கிறார்கள் என்று
ஆண்களே கூட அதிசயித்தார்கள்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள்
ஆனால் எனது உட்புற மர்மத்தை
அவர்களால் தொடமுடியவில்லை
அதை நான் காட்ட முயற்சித்தபோதும்
அதைப் பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
எனது பின்புறத்தின் வளைவில்
எனது சூரியனின் புன்சிரிப்பில்
எனது மார்பகங்களின் ஓட்டத்தில்
எனது பாங்கின் நயத்தில் அது உள்ளது.
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

n

இப்போது புரிந்துகொள்
எனது தலை ஏன் சும்மா குனிவதில்லையென்று.
நான் கத்தவோ, குதிக்கவோ
அல்லது உரக்கப் பேசவோ வேண்டாம்
நான் கடந்து போவதைப் பார்க்கும்போது
அது உன்னைப் பெருமிதமடைய வைக்க வேண்டும்.
நான் சொல்கிறேன்.
எனது குதி உயர்ந்த செருப்பின் க்ளிக்கெனும் ஒலியில்,
எனது தலைமுடியின் வளைவில்
எனது உள்ளங்கையில்,
எனது அக்கறைக்கான தேவையில் அது உள்ளது.
ஏனென்றால் வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

n

பாடம்

நான் மீண்டும் இறந்துகொண்டே இருக்கிறேன்.
உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின்
சிறிய முஷ்டிகளைப் போல் திறந்து
ரத்த நாளங்கள் தளர்கின்றன.
பழைய கல்லறைகளின் நினைவுகளும்,
அழுகிக் கொண்டிருக்கும் தசைகளும் புழுக்களும்
சவாலுக்கு எதிராக
என்னைச் சமாதானப் படுத்துவதில்லை
வருடங்களும் கிளர்ச்சியற்ற தோல்விகளும்
என் முகம் நெடுக்கவுள்ள
கோடுகளில் ஆழமாக வசிக்கின்றன.
அவை என் கண்களை மங்கச் செய்கின்றன. இன்னும்
இறந்த இறந்துகொண்டே இருக்கிறேன்,
ஏனென்றால் நான் வாழ விரும்புகிறேன்.

n

ஒரு தேவதையால் தீண்டப்பட்டு

நாம், துணிச்சலாயிருக்கப் பழகாததால்
உவகையிலிருந்து நாடு கடந்து
தனிமையின் ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்,
அன்பு அதன் புனிதக் கோயிலைவிட்டு
நமது பார்வைக்குள் வந்து
நம்மை வாழ்வுக்குள் விடுதலைப்படுத்தும்வரை.

அன்பு வந்து சேர்கிறது
மேலும் அதனைப் பின்தொடர்ந்து வருகின்றன பரவசங்கள்,
இன்பத்தின் பழைய நினைவுகள்
வலியின் புராதன வரலாறுகள்.
இருந்தும் நாம் துணிவோடிருந்தால்,
அன்பு நமது நெஞ்சங்களிலிருந்து
பயத்தின் சங்கிலிகளை உடைத்தெறிந்து விடும்.

அன்பின் வெளிச்சத்தில் அடித்துச் செல்லப்பட்டு
பயத்திலிருந்து தொடர்பு மறக்கடிக்கப்படுகிறது
துணிச்சலடையத் துணிகிறோம்.
மேலும் எதுவாகவெல்லாம் இருக்கிறோமோ அதையும்
எதுவாகவெல்லாம் இருப்போமோ அதையும்
அன்பு விலையாகப் பெற்றுவிட்டதை சட்டெனக் காண்கிறோம்,
இருந்தும் அன்பு மாத்திரமே
நம்மை விடுவிக்கிறது.

No comments: