Friday, March 11, 2011

கவிதைகள் சே. பிருந்தா

ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி
குரலெழும்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே, மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இது போதும்,
இவை போதும்
வாழும்படிதான் இருக்கிறது -
வாழ்க்கை.



காதலைச் சொல்லத்தான் வந்தேன்
மரம் சிலிர்த்து இலைகளசைவதில்
லயித்துவிட்டேன்.
இரண்டும் சாத்தியமில்லை -
காதலைச் சொல்/
கவிதையை மற.
எழுதாத பக்கங்களின் நெருடும் மௌனம்
என் கவிதை வரிகள் புரியாத நீ.
உன் புன்னகையில் நானருந்திய
என் பதின் பருவம்.
நிகழ்த்த ஏலாமல்
தீயாய்த் தவிக்கும்
(உன் - என்) பொருந்தாக் காமம்.
பத்தாவது மாடியிலிருந்து
தலைகுப்புற ஒரு தற்கொலை.
நவம்பர் கடைசியில்
ஓயாத மழை.

No comments: