Friday, March 11, 2011

கவிதைகள் ஜனகப்ரியா

ஆசையின் கால்கள் உலவிய பாதை
அன்பின் யௌவனங்களை இருளில் கரைத்த
நிலைப்படிகள்
காமம் ஊற்றும் பனியில்
காதல் திரண்ட விழியால்
புறம் களைந்து அகம் குளிர்வித்த
வண்ணக் கதவுகள்
கடந்த காலத்தை நீ
வாசிக்க வாசிக்க
வானாய் விரிகிறது வெறுமை
ஏனிப்படி அலைக்கழிக்கிறாய் அடிக்கடி
பொசுங்கிவிடப் போகிறது ஆகாயம்
நினைவுக் குளத்திலிருந்து மேலெழும்பி
மேகமாய் உயர்கிற ஏக்கமே
பொழிந்து நிறைகிறதாய் மேலும்
கிளர்ந்து எழுகிறதாய் . . .
பூக்களின் முறுவலும்
பொய்கையா யன்பும்
வீடளித்த காயங்களை
ஆற்றிக் குளிர்வித்த கருணையும்
புதைந்த தெருவினில்
நடக்கக் கூசுகின்றன பாதங்கள்
அவற்றால் உயிர்த்த கணங்களின் மெய்
சாம்பல் படர்ந்த தணலாய்
ஆனாலும் . . .



முதற் புள்ளியில் தொடங்கி
வளைந்து தேங்கிவந்த உயிர்
லிபியாகி நிறைய
விட்டு வெளியேகினேன்
இருட்டின் தொடு விளிம்பில்
மொழி உலர் நாக்கின் வெப்பம்
வானம் தொட விரியும் ஒளிக்கை -
இம்முரண் விரல் ஸ்பரிசம் உணரக்
காத்திருந்த பூமி



அந்தரத்தில் போகுமோர் அரூபக் கயிறு பற்றி
தொங்கும் பழைய வாழ்விற்கு
நிகழ் வந்து நெருக்கியதால்
பிடிநழுவி
நடக்கின்ற நாடகத்தின் திரை வீழும்
காட்சிகள் மாறுவதும்
நடிகர்கள் முகவுரை கழற்றுவதும்
நிழலாகத் தெரிகிறது
தப்பி முளைத்த தானிய நிழலில் தங்கும்
பெருங்கூட்டத்தோடு
எவ்வித மிருந்ததென் இருப்பென்று
குரலொன்று கெஞ்சும் ஊடே
இரந்து பெற்றாலும் விதித்திருக்கிறது
இருக்கவே என்றான
வழிநடை தொலைக்க
யாருக்கு ஏலுமென்றபடி . . .
பழம் வன்மம் பரவியிருந்ததால்
நினைவுகளின் பகையனைத்தும்
அணியமாகி எதிர்நிற்க
தாகம் தீர்க்கும் குருதிக்காய்
உடல்கள் தேடும் அரங்கின் வெறுமை

No comments: