Friday, March 11, 2011

ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

மனிதனும் பறவையும்

சாலையோரம் கிடக்கிறது
அந்தக் காக்கை
அனாதைப் பிணமாக.
சற்று முன்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
அதன் மரணம்.
விபத்தா?
எதிரிகளின் தாக்குதலா?
இயற்கை மரணமா?
எதுவென்று தெரியவில்லை.
மரக்கிளைகளில் மதில்சுவர்களில்
கரைந்திரங்கல் தெரிவித்து
கலைந்து போயிற்று
உறவுக்கூட்டம்
அனாதையாகக் கிடக்கிறது அது.
சற்று முன்னதாக
ஏதேனும் வீட்டு வாசலில்
அல்லது கொல்லை மரக்கிளையில்
உறவின் வருகையறிவித்து
அதற்கான உணவை
யாசித்திருக்கலாம்.
செத்துக்கிடந்த எலியை
இனத்துடன் சேர்ந்து
கொத்திக் குதறியிருக்கலாம்.
மைனாக் குருவியை
விரட்டிச் சென்றிருக்கலாம்.
கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.
தன் ஜோடியுடன்
முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.
கூடுகட்ட நினைத்திருக்கலாம்.
இப்போது அனாதையாய்
இந்தச் சாலையோரம்.
மனிதன் இறந்துகிடந்தால்
காவலர் தூக்கிச்செல்வர்.
அற்பப் பறவையிது.
கவனிப்பாரில்லை.
சற்று நேரத்தில்
நாயோ பூனையோ
கவ்விச் செல்லலாம்.
குப்பையோடு குப்பையாய்
மாநகராட்சி வாகனத்தில்
இறுதிப்பயணம் செய்யலாம்.
அற்பப் பறவையன்றோ அது.



பயணங்கள்

எதிர்வருவோர் மோதிவிடாமல்
வளைந்து நெளிந்து
நிதானமாக
மிகக் கவனமாக
நடைபாதையில் அவன் பயணம்.

தார் தகிக்கும் சாலையில்
எதிரெதிர் திசைகளில்
வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு
ஒருகண மனப் பதற்றம்.
கிறீச்சிட்டு நின்ற
வாகனங்கள் நடுவே
செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.

விசிலூதி விரைந்த காவலர்
சிதைந்த கபாலத்தின் மீது
கைத்தடியால் தட்ட
பதற்றத்துடன் எழுந்தவன்
சிதைவுகளைச் சேகரித்துக்கொண்டு
விரைந்தான் நடைபாதை நோக்கி.

பதற்றம் தணிந்து
நிதானமாக
மீண்டும்
நடைபாதையில் அவன் பயணம்

விதிக்கப்பட்டது...

நடந்துகொண்டிருக்கிறான்
மனச் சுமையின்றி
புறச் சுமையின்றி
நடந்துகொண்டிருக்கிறான்.

மரநிழலில் இளைப்பாறி
திண்ணைகளில் படுத்துறங்கி
கிடைப்பதைப் புசித்து
வயிற்றின் வெம்மை தணித்து
நடந்துகொண்டிருக்கிறான்.

கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள்
எதிர்கோஷங்கள்
சவால்கள்
கோரிக்கைகள்
காதுமடல்களில் மோதிப்
பின்வாங்க
சலனமேதுமின்றி
நடந்துகொண்டிருக்கிறான்.

மண்ணில் காலூன்றி
தொடுவான் நோக்கி விரல்களசைக்கும்
மரங்களின் பசுமைக் கம்பீரத்தில்
தாவிச்செல்லும் அணில்களின்
மெல்லிய கீச்சொலிகளில்
விருட்டெனப் பறந்து செல்லும்
குருவிகளின் சிறகசைப்பில்
முன்செல்லும் பெண்ணின்
தோளில் பூத்த மழலைச்சிரிப்பில்
மனக்குளப் பரப்பின்
மலர்கள் பூத்தசைய
நடந்துகொண்டிருக்கிறான்.

காலில் ஏதோவொன்றிடற
குனிந்து நோக்க
துண்டித்த சிறுகரமொன்று
மெல்லப் பற்றியெடுத்து
புதரோரம் வைத்துவிட்டு
ஒருகணம் கனத்த மனம்
மறுகணம் வெறுமையாக
நடந்துகொண்டிருக்கிறான்.

காலோய்ந்தொருநாள்
தெருவோரம் வீழ்ந்தாலும்
மனமெழுந்து காற்றாகி
நடைதொடரும் நம்பிக்கையில்
நடந்துகொண்டிருக்கிறான்.





கவிஞர் ராஜமார்த்தாண்டன் 6.6.2009 அன்று காலமானார்.

ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி மாவட்டம், சந்தையடி கிராமத்தில் பிறந்தவர் (1948). இளம் அறிவியல் கணிதப் படிப்பைக் கும்பகோணத்திலும், முதுகலைத் தமிழ்ப் படிப்பைக் கேரளப் பல்கலைக்கழகத்திலும் முடித்த பின்பு புதுக்கவிதை பற்றி, கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக சேர்ந்தார். அப்போது கோகயம் என்னும் காலாண்டிதழை நடத்தினார். ஆய்வு முடித்த பின் 1976-83 வரை கொல்லிப்பாவை (12 இதழ்கள்) காலாண்டிதழை நடத்தினார்.

தினமணியின் மதுரைப் பதிப்பிலும் சென்னைப் பதிப்பிலும் இருபதாண்டுகள் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

தமிழகத்தில் பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை விமர்சனங்கள் எழுதியுள்ள ராஜமார்த்தாண்டன், தன் புதுக்கவிதை தொகுதிக்காகத் தமிழக அரசு விருது பெற்றுள்ளார் (2003). இவரது முக்கியமான நூல்கள் புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (2000), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (2002), புதுக்கவிதை வரலாறு (2003), சுந்தர ராமசாமியின் கவிதைக்கலை (2007) ஆகியன.

தமிழ்ப் புதுக்கவிதைகளில் சிறந்தவற்றைத் தெரிந்தெடுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். இவர் தினமணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு காலச்சுவடு மாத இதழில் பணியாற்றினார். இவர் மனைவி ரெங்கம்மாள். குழந்தைகள் அஜிதா, கிருஷ்ண பிரதீப்

No comments: