Friday, March 11, 2011

கவிதைகள் உமா ஷக்தி

வெளிறிப் பொலிவிழந்த நின் முகமும்
நிலையற்ற அலைந்த பார்வையும்
உன்னில் முன்னெப்போதும் கண்டிராதவை
எஞ்சியிருக்கும் உன்னை எப்படி மீட்பது?
எங்கு தொலைத்தாய் உன்னை?
உன் காதலர்கள் கைவிட்டிருக்கலாம்
ஏதோவொரு ரகசியக் கனவின்
வண்ணச் சேர்க்கைகளின்
பாதியில் நீ விழித்திருக்கலாம்
தோழியுடன் கணவன் சுகித்திருப்பதைக்
கண்டு அதிர்ந்திருக்கலாம்
எதுவாயினும் சொல்லிவிடு
மருண்ட விழியின் இருண்மையில்
தொலைந்தது நீ மட்டுமல்ல
இந்த நிலமும் நானும்...

o

உறக்கத்தினூடே
நோய்மையின் உலகத்தில்
களைப்புடன் அவன் தேகம்
அனல் கொதித்துக் கிடந்தது!
துளித் துளியாய்ச்
செலுத்தப்பட்ட நீர்த்திவாலைகள்
தெறித்துக் கனவுச் சட்டகங்களை
உடைத்தபடி இறங்குகின்றன.
தொன்மத்தின் படிமங்களாலான
காற்றின் தீண்டல்கள்
அவனிடம் ஏதேதோ ரகசியங்கள்
மொழிய முற்படுகின்றன
நினைவிற்கும் கனவிற்குமிடையே
கருஞ்சுடராய்
உயிர் வதையின் முனகல்கள்
சவரம் செய்யப்படாத
முட்புதரில் முத்தமிட்டுச் சொன்னேன்
சீக்கிரம் எழுந்துவா நமக்கேயான
காலம் காத்துக் கிடக்கின்றது!

o

உனக்கு வார்த்தைகள் பிடிக்கும்
நான் சொற்களின் காதலி
உன் ஆழுலகில் தேடுகிறேன்
எனை மீட்டெடுக்கும் மந்திரச் சொல்லொன்றை

எந்த ரகசியக் கனவின் நீட்சி நீ?
உன் பெயர் எழுதிய தாளைக்கூட
முத்தமிடுகிறேன் திரும்பத் திரும்ப ...
அதன்பின்
நிகழ்த்திக்கொள் சொற்களால்
கவிதையோ காதலோ கலவியோ.

No comments: