Friday, March 11, 2011

கவிதைகள் அனார்

வெளியேற்றம்

என்னுடைய வரிகளில்
என்னைத் தந்து முடிவதும் இல்லை
எடுக்கவும் முடிவதில்லை

சொற்களின் சுழற்சித் தீவிரத்தில்
நினைவு ரயில் விரைந்து கடக்கையில்
பாய்கின்றது
என்னை வெளிப்படுத்தக்கூடிய
ஒரே ஒரு வார்த்தை

கருநொச்சிப் பூ ...
கிளி...
நத்தை ...
குறித்த வார்த்தைத் தன்மைகள்
மிகுதியான இறுக்கத்துடன்
விபத்தின் உருக்குலைவில் கதறும் பிராணி
இல்லையேல்
தற்கொலை பற்றியே யோசிக்கின்ற பைத்தியம்

மழையில் நனைவதை விட்டுவிட்டேன்
‘கசலின்’ மிருதுவான ஆலாபனையொன்றுடன் இழைந்து கிடந்ததையும்

கொதி நிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலை நெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான்
இதே கவிதையின்
ஏதோ ஒரு வரியில்
எங்கோ ஒரு சொல்லில்
எனது வெளியேற்றம் இருக்கலாம்
...

இல்லாமலும் இருக்கலாம்

பாறை இயல்

சூழ்ச்சிகளால் மறைக்கப்பட்ட பாதைகளில்
உறுதியான உரோமங்கள் மூடிய
பாறைகள் நகர்கின்றன

என்னுள் பாறைகள் வளர்ந்துகொண்டிருப்பது
உனக்குத் தெரியாது
( உனக்குத் தெரியாத இன்னொன்று, என்னை
எப்படிக் காதலிப்பதென்பது )

மரணத்தின் உச்ச இலக்குகளில்
அசைகின்ற பாறையின்
சமிக்ஞை அதன் நோட்டம்
... காத்திருப்பு
மிகவும் பொறுமைகளிலிருந்து
பின் வெடிக்கின்ற எரிமலை மூச்சு,
தணல் குழம்புகள் ...
மௌனத்தின் உள்ளே இருக்கிறது !

எதனால் கற்கள் விளைகின்றன
பின் முற்றிப் பாறைகளாகி
மலைகளாக ஊதுகின்றன

மலைகளுக்கிடையே பயத்துடன்
பதுங்கிக்கொள்கிறேன்

கலைந்துகிடக்கின்ற மேகங்களுடன்
மலைகளையும் மேய்த்துச் செல்கிறேன்

அவற்றின் பசி தணிவதற்காக
அந்தி மாலைகளை இழுத்துவருகிறேன்

கனவு பனித் திரள்களாக
கவிந்த வெண்மலைகள் கவர்ச்சியானவை

இறுகிய திரைக்குள்
திறந்து விரியும் கதவுகள் தாண்டி
எதிரொலிக்கும் சிரிப்பின்
விசும்பலின் கருகல் நெடி
கசப்பின் தீரா இருளில் படர்கிறது

கடல்களை விலக்கிக்கொண்டு
முள் முனையாய் உயர்ந்த பாறையில்
குத்தி கிழிபட்ட பழுத்த நிலாப் பாறை
நீல விசம் கொட்டுகிறது

என் குரல் உன் உலகிலிருந்து விடைபெற்றுவிட்டது
அதன் நிரந்தரமான கேள்விகளோடு

No comments: