Friday, March 11, 2011

கவிதைகள் விஸ்லாவா சிம்போர்கா ஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்

ஒரு மணல் துகளுடன் கூடிய காட்சி

நாம் அதை மணல் துகள் என்றழைக்கிறோம்,
ஆனால் அது தன்னை துகள் என்றோ மணல் என்றோ
அழைத்துக்கொள்வதில்லை.
பொதுப்பெயரோ, குறிப்பிட்டதோ,
நிரந்தரமானதோ, நிலையற்றதோ ,

தவறானதோ, கச்சிதமானதோ.

பெயரின்மையிலேயே அது திருப்திகொள்கிறது,

நமது பார்வையும், நமது ஸ்பரிசமும் அதற்கொரு பொருட்டல்ல.
தான் பார்க்கப்படுவதையும் தொடப்படுவதையும் அது உணர்வதில்லை.
அது சன்னல் படிக்கல்லின் மீது விழுந்தது
என்பது நம் அனுபவமே, அதனுடையதன்று.
அதனைப் பொறுத்தவரை, விழுந்து முடித்துவிட்டதா அல்லது விழுவது தொடர்கிறதா என்கிற எந்த நிச்சயமும் இன்றி

வேறெதன் மீதும் விழுவது போலதான் இதுவும்.

இந்தச் சன்னல் வழியே ஏரியின் அற்புதமான காட்சியொன்று.

ஆனால் இந்தக் காட்சி தன்னையே காண்பதில்லை.
அது இந்த உலகில் இருக்கிறது
நிறமின்றி, வடிவமின்றி,

ஒலியின்றி, மணமின்றி, வலியின்றி .

இந்த ஏரியின் தரை, தரையின்றி இருக்கிறது
அதன் கரை, கரையின்றி இருக்கிறது.
அதன் நீர் தன்னை ஈரமெனவோ உலர்வெனவோ உணர்வதில்லை
அதன் அலைகள் தம்மை ஒருமையெனவோ பன்மையெனவோ அறிவதில்லை.
அவை சிறிதோ பெரிதோ அல்லாத கூழாங்கற்கள்மீது
தம் இரைச்சலுக்கே செவிடாக இரைகின்றன.

இவை அனைத்தும் நிகழ்வது தன் தன்மையிலேயே வானற்ற வானின் கீழ்.
அங்கு சூரியன் மறைவதும் மறையாமலே,
கொஞ்சமும் கவலையற்ற மேகத்தின் பின் ஒளிவதும் ஒளியாமலே.
காற்று அதனை வருடுவதன் ஒரே காரணம்
அது வீசுகிறது என்பதே.

ஒரு நொடி கடக்கிறது,

இரண்டாவது நொடியொன்று,
மூன்றாவது நொடியொன்று,

ஆனால் அவை மூன்று நொடி என்பது நமக்கு மட்டுமே.

காலம் அவசரச் செய்தியுடன் செல்லும் தபால்காரன் போல் விரைகிறது.
ஆனால் அது நமது உவமை மட்டுமே.
அவன் ஒரு கற்பனைப் பாத்திரம், அவனது அவசரம் கற்பிதமானது,
அவனது செய்தி மனிதமற்றது.

என் சகோதரியின் புகழாக

என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை

அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவார் என்பது சாத்தியமில்லை.

அவள் தன் அன்னையைப் போல; அவர் கவிதைகள் எழுதவில்லை,
தந்தையைப் போலவும்; அவரும் கவிதைகள் எழுதவில்லை.
என் சகோதரியின் வீட்டில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்:
என் சகோதரியின் கணவர் இறந்தாலும் கவிதை எழுதமாட்டார்.
பீடர் பைப்பர் போலச் சொன்னதையே சொல்லத் தொடங்கினாலும்
என் உறவுகளில் எவரும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் உண்மை.

என் சகோதரியின் மேசை இழுப்பறைகள் பழைய கவிதைகளைச் சுமந்திருப்பதில்லை

அவளது கைப்பையில் புதிய கவிதைகள் கிடையாது.
என் சகோதரி என்னை மதிய உணவுக்கு அழைக்கும்போது,
அவள் தன் கவிதைகளை எனக்கு வாசிக்க எண்ணமில்லை என்றறிவேன்.
அவளுடைய சமையல் இரகசியத் திட்டங்களெதுவுமின்றி சுவையாயிருக்கிறது,
அவள் குடிக்கும் காபி, பிரதிகளின் மீது சிந்துவதில்லை.

பல குடும்பங்களில் எவரும் கவிதை எழுதுவதில்லை
ஆனால் எங்காவது தொடங்கிவிட்டால் தடைசெய்வது கடினமாகிறது.
சில நேரங்களில் கவிதைத் தலைமுறைகள் வழியாக அருவியென விழுந்து

குடும்ப நேசங்கள் நிலைதடுமாறும் சுழல்களை உருவாக்குகிறது.

என் சகோதரி உரைநடைப் பேச்சு வழக்கை ஓரளவு வெற்றியுடன் கையாண்டுள்ளார்,
ஆனால் அவரது மொத்த எழுத்துப் பணியும் அவர் வெளியூர் விடுமுறைகளிலிருந்து
அனுப்பிய அஞ்சலட்டைகளுள் அடங்கும்.
அவற்றின் வாசகமோ ஒவ்வொரு ஆண்டும் மாறாத வாக்குறுதி:

அவள் வீடு திரும்பியதும் சொல்வதற்கு
அவளிடம் நிறைய

நிறைய
நிறைய இருக்கிறது.

தலைப்பெதுவும் தேவையில்லை

வந்து சேர்ந்திருக்கும் நிலைமை இதுவே -
நான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன்.
ஒரு ஆற்றின் அருகில்
ஒரு இளவெயில் காலையில்.
இது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வன்று,
வரலாற்றில் எழுதப்படாது.

இதில் போர்களும் அமைதி ஒப்பந்தங்களும் இல்லை,

காரணங்கள் அலசப்படுவதில்லை,
சொல்லத்தக்க கொடூரங்கள் எதுவுமில்லை.

எனினும் நான் இந்த ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறேன் என்பது உண்மை.
மேலும், நான் இங்கிருப்பதால்
எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும்.
அதற்கு முன்
நான் வேறு பல இடங்களுக்கும் சென்றிருக்க வேண்டும்,
நாடுகளை வெல்பவர்கள்
பாய்மரமேற்றும் முன் செய்வது போல்.

விரைந்து மறையும் தருணத்திற்குக்கூட வளமான கடந்தகாலமுண்டு.
அதன் சனிக்கிழமைக்கு முன் வரும் வெள்ளி,
அதன் ஜூன் மாதத்திற்கு முன் வரும் மே மாதம்.
படைத்தலைவனின் களநோக்கியில் தெரிவதை விடவும்
இத்தருணத்தின் தொடுவானம் ஒன்றும் தோற்றமயக்கமல்ல.

இந்த போப்லர் மரம் இங்கு பல ஆண்டுகளாக வேரூன்றியிருக்கிறது.
இந்த ஆற்றின் பெயர் ராபா; இது ஊற்றெடுத்தது நேற்றல்ல,
புதர்களுக்கிடையில் செல்லும் இப்பாதை
வகுக்கப்பட்டது சென்ற வாரமல்ல.
காற்று மேகங்களை இங்கு கொண்டு வீச வேண்டியிருந்தது,
அவற்றை இங்கிருந்து வேறெங்கோ கொண்டு வீசும் முன்.

அருகில் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கவில்லை, எனினும்
உலகில் விஷயங்களுக்குக் குறைவில்லை.

புலம்பெயரும் இனங்கள் அதைச் சிறைபிடித்த காலங்களைப் போலவே
அது இன்றும் இருக்கிறது உறுதியாகவும் திடமாகவும்.

அமைதி இறுகச் சுற்றியிருப்பது சூழ்ச்சிகளை மட்டுமல்ல.
காரணங்கள் பணியாட்படை போல் தொடர்வது முடிசூட்டுதல்களை மட்டுமல்ல.
புரட்சிகளின் ஆண்டுவிழாக்கள் புரண்டோடலாம்,
அங்ஙனமே இந்த நிர்ப்படுகையைச் சுற்றியுள்ள முட்டைவடிவ கூழாங்கற்களும்.

சூழ்நிலைகள் எனும் அலங்காரத்துணி நுணுக்கமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறது.
புற்களில் தையலிடும் எறும்புகள்,
தரையினூடே தைக்கப்பட்ட புற்கள்,
அலைவடிவத்தை வரைந்துகொண்டிருக்கும் சிறுகுச்சி.

எனவே நானும் இருக்கிறேன் பார்க்கிறேன்.
எனக்கு மேல் வெண்ணிறப் பட்டாம்பூச்சியொன்று காற்றில் சிமிட்டிச் செல்கிறது
தன்னுடையதேயான இறக்கைகளில்.
அதன் நிழல் என் கைகளைத் தொட்டுச் செல்கின்றது.
அதுவேயான வேறல்லாத நிழல், அதனுடையதேயான வேறெதனுடையதுமல்லாத நிழல்.

இது போன்றவற்றைக் காணும்போது
எது முக்கியமானதோ
அது முக்கியமற்றதைவிட முக்கியமானது
என்பதில் நான் எப்போதும் உறுதியாக இல்லை.

நமது காலத்தின் குழந்தைகள்

நாம் நமது காலத்தின் குழந்தைகள்,
இது ஒரு அரசியல் காலம்.

நாள்தோறும், இரவு முழுவதும்
- உமது, எமது, அவர்களது

எல்லா விவகாரங்களும்
அரசியல் விவகாரங்கள்தாம்.

உங்களுக்கு விருப்பமோ இல்லையோ
உங்கள் மரபணுக்களுக்கு ஒரு அரசியல் பின்புலமுண்டு,

உங்கள் சருமத்திற்கு ஒரு அரசியல் வார்ப்பும்,

உங்கள் கண்களுக்கு ஒரு அரசியல் சாய்வும் உண்டு.

நீங்கள் கூறும் எதுவும் எதிரொலிக்கிறது,
நீங்கள் கூறாதது தனக்கெனக் குரலெழுப்புகிறது.
எப்படியிருந்தாலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது அரசியல்.

காடுகளில் தஞ்சம் புகும்போதும்
நீங்கள் அரசியல் பூமியில்
அரசியல் அடிகளையே எடுத்துவைக்கிறீர்கள்.

அரசியல் சாரா கவிதைகளும் அரசியலானவையே.
நமக்கு மேல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவுகூட
இனி வெறும் நிலவன்று.

இருப்பதா இல்லையா என்பதே கேள்வி.
சீரணச் சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றெனினும்,
எப்பொழுதும் போலவே இது ஒரு அரசியல் கேள்வி.

அரசியல் பொருள் பெற
நீங்கள் மனிதராக இருக்க வேண்டும் என்பதல்ல.
கச்சா பொருள் போதும்,
அல்லது புரத உணவோ எரிபொருளோ போதும்.

அல்லது அதன் வடிவம் குறித்து மாதக் கணக்கில் சர்ச்சைக்குள்ளான
ஒரு கருத்தரங்க மேசை:
வாழ்வும் சாவும் விவாதிக்கப்பட வேண்டியது
வட்ட மேசையிலா சதுர மேசையிலா?

இதற்கிடையில் மக்கள் மறைந்தனர்,
விலங்குகள் இறந்தன,
வீடுகள் எரிந்தன,
வயல்கள் நாசமாயின,
பழங்காலங்களில்,

இத்தனை அரசியலற்ற காலங்களில்

நிகழ்ந்தது போலவே.

யதார்த்த உலகம்

யதார்த்த உலகம் சிறகடிப்பதில்லை,
கனவுகளைப் போல.
எந்த மெல்லிய குரலும், எந்த அழைப்பொலியும்
அதைக் கலைத்துவிடுவதில்லை
எந்தக் கிரீச்சிடுதலும், எந்த மோதல் ஒலியும்
அதைப் பாதியில் நிறுத்திவிடுவதில்லை.

கனவின் பிம்பங்கள்
திடமற்றும் தெளிவற்றும் இருக்கின்றன.
மேலும் அவற்றிற்குப் பொதுவாகப்
பல விளக்கங்கள்.
ஆனால் யதார்த்தம் என்பது யதார்த்தம்,
அதை உடைத்தெடுப்பது தனி வித்தை.

கனவுகளுக்குத் திறவுகோல்கள் உண்டு
யதார்த்தம் அதுவாகத் திறக்கிறது,
அதை மூடவும் முடியாது.
தேர்வு அறிக்கைகளும் நட்சத்திரங்களும்
அதிலிருந்து கொட்டுகின்றன,
பட்டாம்பூச்சிகளும் குளிராடைகளும்
அதிலிருந்து பொழிகின்றன.
தலையற்ற தொப்பிகளும்
கண்ணாடித் துண்டுகளும்கூட.
இவை இணைந்து உருவாக்குவது ஒரு புதிர்,
அதைத் தீர்க்க இயலாது.

நாமின்றி கனவுகளில்லை.
ஆனால் யதார்த்த உலகம் சார்ந்திருக்கும் நபர்
யாரென இன்றளவும் அறியப்படவில்லை.
அவரது தூக்கமின்மையின் விளைவுகள்
விழித்துக்கொள்ளும் எவருக்கும்
காணக் கிடைக்கின்றன.

சமீபத்தில் இறந்த நம்முடையவர்கள்
கனவுகளில் இன்னமும் உயிர்வாழ்கிறார்கள்.
கச்சிதமான உடல்நலத்துடன் மட்டுமின்றி
இளமையின் மறுமலர்ச்சிக்குத் திரும்பியவர்களாகவும்.
யதார்த்த உலகம் பிணங்களை
நம் முன் கிடத்துகிறது.
யதார்த்த உலகம் கண் சிமிட்டுவதில்லை.

கனவுகள் இறகொத்த கனமுடையவை,
அவற்றை நினைவுகள் எளிதில் உதறிவிடலாம்.
யதார்த்த உலகம் மறதி குறித்து கவலைப்படத் தேவையில்லை.
அது கடினமான வாடிக்கையாளன்,
அது நம் தோள்களில் ஏறி அமர்கிறது,
இதயங்களில் கனக்கிறது,
கால்களுக்குள் உருண்டோடுகிறது.

அதிலிருந்து தப்பிக்க இயலாது

ஓடும் ஒவ்வொரு முறையும் பின்தொடர்கிறது.
தப்பித்தோடும் வழியில்
யதார்த்தம் நம்மை எதிர்பார்த்துக் காத்திராத
நிறுத்தங்களே இல்லை.

முடிவும் தொடக்கமும்

ஒவ்வொரு போருக்குப் பின்னரும்
யாராவது சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.
பொருட்கள் தம்மைத் தாமே
ஒழுங்குபடுத்திக்கொள்வதில்லை.
சவங்களை அள்ளிச் செல்லும் வண்டிகள்
செல்வதற்கு ஏதுவாய்

யாராவது இடிபாடுகளை
சாலையோரமாக எடுத்துத் தள்ளவேண்டும்,.

யாராவது சிரமத்துடன் நடந்தாக வேண்டும்,
சகதியின் வழியே, சாம்பலினூடே,
இருக்கைகளின் கம்பிச் சுருள்கள்,
கண்ணாடித் துண்டுகள்,
இரத்தம் தோய்ந்த கந்தல் துணிகள்,
இவற்றின் வழியே.

யாராவது கம்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்,
சுவருக்கு முட்டுக் கொடுக்க,
சன்னலை யாரேனும் சுத்தம் செய்யவும்,
கதவை அதன் சட்டத்தில் பொருத்தவும் வேண்டும்.

காட்சித் துணுக்குகள் எதுவுமில்லை, புகைப்பட வாய்ப்புகளில்லை,
மேலும் இதற்கு ஆண்டுகளாகிறது.
எல்லா காமிராக்களும் போய்விட்டன
மற்ற போர்களுக்கு.

பாலங்களைக் கட்டியாக வேண்டும்,
இரயில் நிலையங்களும் கூட.
சட்டைக் கைகள்
கிழியும் வரை சுருட்டப்படும்.

கையில் துடைப்பத்துடன் யாரோ ஒருவர்,

அது எப்படி இருந்ததென நினைவு கூர்கிறார்.
வெடித்துச் சிதறாத
தன் தலையை அசைத்தபடி

வேறொருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

விரைந்துகொண்டிருக்கும் வேறு சிலருக்கோ

இதெல்லாம் சலிப்பூட்டுவதாக இருக்கும்.

சமயங்களில் யாராவது,

துருபிடித்த விவாதங்களைப்

புதரடியிலிருந்து தோண்டியெடுத்து
குப்பைத் தொட்டிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் நன்கறிந்தவர்கள்
கொஞ்சமே அறிந்தவர்களுக்கு
வழிவிட வேண்டும்.
பின் அதைவிடக் குறைவாக,
இறுதியில் முற்றிலும் அறியாதவர்கள் வரை.

அதன் காரணங்களையும் விளைவுகளையும்

போர்த்திப் படர்ந்திருக்கும் புல்லின் மீது
சோளத்தைக் கடித்தபடி
மேகங்களை வெறித்தபடி

பின் எவரோ படுத்திருக்க வேண்டும்.

நாம் பெரும் பாக்கியசாலிகள்

நாம் பெரும் பாக்கியசாலிகள்,
எம்மாதிரியான உலகில் வாழ்கிறோம்
என்பதை நாம் துல்லியமாக அறிந்திருக்கவில்லை.

அதற்கு ஒருவர்
நெடுங்காலம் வாழ வேண்டியிருக்கும்
உலகத்தின் காலத்தையும் கடந்த கேள்விகளற்ற நெடுங்காலம்..

ஒப்பீட்டிற்காகவேனும்
மற்ற உலகங்களை அறிய வேண்டியிருக்கும்.

உடலினின்றும் மேலெழும்ப வேண்டியிருக்கும்,
அதற்குத் தடையாகவும்
தொந்தரவு தரவும்
மட்டுமே தெரியும்.

ஆய்வுக்காகவும்,
விரிந்த நோக்கிற்காகவும்,
உறுதியான முடிவுகளுக்காகவும்,
ஒருவர் எல்லாமும் விரைந்து சுழலும்
காலத்தைக் கடந்து நிற்க வேண்டியிருக்கும்.

அந்த நோக்கிலிருந்து
ஒருவர் சம்பவங்களுக்கும் குறிப்புகளுக்கும்
விடைகொடுத்து விடலாம்.

வார நாட்களை எண்ணுவதன்
அபத்தம்
அங்கு தவிர்க்க முடியாமல் புலப்படும்.

தபால் பெட்டியில் கடிதங்களைப் போடுவது
இளமையின் முட்டாள்தனமெனவும்

“புட்களின் மீது நடக்காதீர்” என்ற அறிவிப்பு
மனப்பிறழ்வின் அறிகுறியெனவும் தோன்றும்.

விஸ்லாவா சிம்போர்காவின் இக்கவிதைகள் ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா ஆகியோரது ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான
WISLAWA SZYMBORSKA Poems, New and Collected 1957-1997. என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
வெளியீடு: Harcourt Brace and Co., New York, USA.

No comments: