Friday, March 11, 2011

பெருந்தேவி கவிதைகள்

க்ராஸ்டாக் (அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப் போச்சு
சிரிப்பாச் சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்குக் காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவதுதான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையைக் காலை வச்சுக்கிட்டுச் சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரி சும்மா டைம்பாஸுக்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சிக் கவுந்தவங்கதான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப் பெரிய பெரிசுதான்
ஆமாமாம் மிகப் பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாக்கூட
மார்க்வெஸ்தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக் காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

சில ஆலோசனைகள்

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

நீ அவ்வப்போது பொய் சொல்ல வேண்டும்
அந்தப் பொய்களுக்காக அவனிடம் (மட்டுமே)
கண்ணீர்விட வேண்டும்
ஒருபோதும் உண்மையை (அப்படி ஒன்று இருந்தால்) நேசிப்பவளாகக்
காட்டிக்கொள்ள வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

ஒரு கண்ணில் அமிர்தத்துடனும்
இன்னொன்றில் விஷத்துடனும்
பார்வையில் ஒன்றுசேர விழுங்க வேண்டும் அவனை
ஒருபோதும் அமிர்தத்துக்கும் விஷத்துக்குமான வேறுபாட்டை
அவன் உணரச் செய்ய வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

திரும்பவும் உன் சிறுபிராயத்தை நோக்கிச் செல்.
சிறுபிராயத்தையும் அவன் ரசிக்கத் தர வேண்டும்
அவன் இல்லாத உனக்கேயான பிராயமென்று
உன் முதுமை அமையலாம் ஒருவேளை.

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

திரைப்படக் காமக் காட்சியில் வீணையைப் போல்
அறிவுஜீவிகள் மத்தியில் பிரதியைப் போல்
வாசிக்கப்படுபவளாகக் உன்னைக் காட்டித்தர வேண்டும்
(ஆற்றைவிடவும் ஆழமாக)
வீணைகள் பிரதிகள் பெண்களை வாசிக்க
ஆண்களுக்கு விருப்பமென்பதை மனத்தில்கொள்.

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

அறிவில் அவனில் நீ பாதிக்குக் கீழ் எனவும்
அன்பு தருவதில் நிரம்பித் ததும்பியும்
உன்னை அறிவித்துவிட வேண்டும்.
அன்பு கொஞ்சம் குறையும்பட்சத்தில்
கார்ப்பரேஷன் தண்ணீரை இட்டு நிரப்பு பாதகமில்லை.

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

மழையைக் குழந்தைகளை நேசிப்பதாக
அவன் முத்தம்கொடுக்கும்முன் சொல்லப் பழகு
அப்போது உன் கூரிய பற்களை
உதடுகளுக்குள்ளே அடக்கிவைத்துக்கொள்
அவன் நெஞ்சில் படரும்போது
கனவுகளைக் காண்பவளாக உன்னைக் காட்டிக்கொள்
அல்லது அச்சமயம் கண்ணையாவது மூடிக்கொள்

ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

லக்கானோ புரந்தரதாசரோ பெரியாரோ
இந்திய அரசியல் சட்டமோ விளக்குபவனிடம்
குளிர்இமைகளை சற்றே உயர்த்திக்கேள் “அப்படி..
யா?” அதற்குமுன் உன் புருவங்களைச் செம்மை செய்ய
மறக்காதே எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.

பலஸ்ருதி
ஒரு ஆண் (அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்ப வேண்டுமென்றால்

ஆலோசனைகளை வாசித்ததாகத்
தெரியப்படுத்த வேண்டாம் அல்லது இவற்றை
நிராகரித்ததாகச் சொல்லிக் கண்ணடித்துவிடு
அல்லது (மிகப் பணிந்து) ஏதோ ஒன்றை.
விரும்பப்படாவிட்டாலும் அவனோடு
ஆகப்பெருவாழ்வு வாழ உதவும் இவை.

பகல்போல் இல்லை இரவு

6 0 8 7 7 5 3 098038823 112
தொலைபேசி டயலின் எண்கள்
தனித்தெழும்பி விரலருகே நெருங்கும்
சனி நள்ளிரவைச் சற்றே கடந்து,
(நேற்று என்பது தொலைத்து முழுகி
தலையை உலர்த்தி
உறங்கச் சென்றுவிட்டது ஆதலால்)
பேச வேண்டியவரை
சாதனம் எப்படித் தீர்மானிக்கும்
ஆனால் பேசுகிறேன்
என் குரல் கேட்கவில்லை
கேட்கிறேன்
ஆனால் குரலேயில்லை
மேசையின் மேல்
சின்னத் தம்ளரின்
நாலாப் பக்கங்களிலும்
சொற்தடங்கள்
பால் வழிந்து
பழைய அர்த்தம் காய்கின்றன
இப்போதெ
ல்லாமே புரிவதாகத்
திறந்துவைத்த
நேற்றின் கடைசிப்
புத்தகம் வெளியே பறக்கிறது
ஒரு சிட்டாக.
பேசுமுனையின் விஸ்தரிப்பாக
கரம் ஆகிவிட்டிருந்தபோது
எனதுள்ளங்கைக்குள்
ளே என் பேச்சு ஒளிர்கிறது
எதிர்முனையில்
எல்லாம் தெரிந்த ஞாயிறோ
பறந்து சென்ற சிட்டை
பிடிக்கப்போகும் வலையோ
அல்லது சாவின் காதோ
யாரறிவார்.

கவிதாயினி இறந்துவிட்டாள்

இதை
மேற்கோள்களுக்குள்
வாசிக்கவும்.
கவிதையின்
நடைபாதையில்
காத்துக்கிடக்கிறது
பிணம்
விரல்களின் நுனியில்
தேங்கிக்கிடக்கும்
கையொப்பம்போல
அல்லது
கடலில் நுழைந்தவர்
கரையில்
விட்டுச்சென்ற
காலடித்தடம்போல.

No comments: