Friday, March 11, 2011

கவிதைகள் தொகுப்பு: சுகுமாரன், குவளைக்கண்ணன்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.
உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும் . . .
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு -
தெரிவதே போதாதா?

ந. பிச்சமூர்த்தி

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவிடுத்துக்கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

நகுலன்

அறைவெளி

தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

சி. மணி

அடிமனம்

முட்டித்ததும்பியென்ன?
மாலையில் பகல் வடிகிறது.
ஒளி ஒதுங்கி இரவாகிறது.
கதிர்
எங்கோ சொட்டி
விளைந்தன தாரகைகள்,
பகலின் துளிகள்.
என் மன அகலிகையின்
நிறைவின்மை முடிவற்று
வாழ்வு கரவாகிறது.
இனி என்ன?
கௌதம உக்கிரத்திற்கு
ஒரு போலி.
போலிப்பரிதி.
ஒரு போலி வைகறை.
உதிக்கிறது எங்கும் ஒரு
திருட்டுத் தெளிவு.
இந்திர நிலவு.
பாதி தெளிந்து
ஆடை களைந்து
வெளிர்கிறது மனவெளி.
ஒலியற்றுச் சிரித்து
மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு, தனித்து
வெறிச்சோடிய தெருவெங்கும்
அழுகி வடியும் விளக்கின்
வாழ்த்தொளி.
இது நிகழ்ந்த சமயம்
இடமற்ற
மனோவேளை.

பிரமிள்

மனிதனுக்கு

மேக நிழல்
மிக மெல்லிய நைலான் துணியாய்
நிலத்தில் புரளும்.
பகல்.
தார் ரோடில்
தன் நிழலை நசுக்கி மிதித்து
வாழ்க்கையின் மூலச்சூட்டால்
கொதித்தோடும்
மனித வாகனங்கள் பல.
வயிற்றின் நிழலாய்
பசி பின்தொடர
வாழ்வின் நிழலாய்
தன்னலம் பதுங்க,
வறட்சியில் புரட்சி, கட்சி.
நகரெங்கும் நிழற்கடல்கள்,
அதன் மோதல்கள்
கணத்திற்குக் கணம்
தான் காய்ந்து
பொது நிழல் பரப்பக்
கிளைகள் வளர்க்கும்
மரங்களும் உண்டு
இந்த மனிதனுக்கு.

எஸ். வைதீஸ்வரன்

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பை முன்வைத்து
நிலைக்கண்ணாடி உடைக்கிற என் கோபத்தை
உறிஞ்சிக் கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

கல்யாண்ஜி

சிறுபறவை அழைத்துவரும் மேகம்

அதோ
அந்தச் சிறுபறவை
அழைத்துவரும் மேகம்
தண்ணென என்னை நிறைக்கையில்
நான்
இல்லாது போவேன்.
என் சட்டையை நீ எடுத்துக்கொள்ளலாம்
நீ என் செருப்பை எடுத்துக்கொள்.
என் சுவாச கோளங்களை
மேகம் நிறைக்கையில்
கணிதங்கள் அற்றுப்போகும்
அதன்பின்
என்னைப் பற்றி
ஏதேனும்
அறியவேண்டுமாயின்
அந்தச் சிறுபறவையை
அழைத்துக்
கேள்.

ஆனந்த்

அக்கரை இருள்

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின் மேலிருந்த
என் அறையின் விளக்கொளி.
இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்.
முளைத்த துயரொன்றை கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி.
என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல
நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்.
நட்சத்ரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும்தான் . . . திடுக்குற்றேன்.
அது சமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது.

தேவதேவன்

சினேகிதனின் தாழ்வான வீடு

கறுப்பேறிப் போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.
காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்,
பொன்மொழிகள்
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் - என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.
படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.
அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் - பல
தல புராணங்கள்
சிவஞானபோதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில், பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.
முதல்ப்பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய் - அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள். . . . . . . . . . . . .
நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.

கலாப்ரியா

அடுத்த கட்டத்தில்

அடுத்த கட்டத்தில் கால் வைத்துக்கொண்டது
மனித குலம். இது வெளிப்படை.
சமூகவியலார் மனிதப்பயணம் பற்றி நிறைய
சொல்லியாயிற்று
கூடவே எந்திரமெனும் துணையும் கூட்டாயிற்று
இந்தச் சிட்டுக் குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்
நான் போரை, அது அமைதியை
விடுதலை தூரப்பொருளல்ல என்றே காட்சி தருகின்றன
காலைக்குரல்கள், மரங்கள், சத்தமற்று சேருமுன் சிறுநீர்
குதிரையாய் இருந்தபடி கதிரை ஏறும் தப்புக்கு முன்னால்
வயிற்றின் அமிலத்தின் வதங்குகிறது குதிரை
எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்
காணாததால் முயற்சியும் கொண்டு இங்கொருமனம்
தேடியபடி இருக்கிறது இயல்வதை.

தேவதச்சன்

வறட்சி

வானுக்கு இல்லை இரக்கம். பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லத்
துக்கித்து இருக்கிறது வீதி.
அடிஉறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை.
ராஜசுந்தரராஜன்

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல்மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டுவிழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர்வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பிவைத்தாள் தாய்போல
முதல்பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள.

விக்ரமாதித்யன்

வெளியில் ஒருவன்

பரிவில்லாதது வீடு
வெளிக் காற்றில் ஏராளம் விஷம்
சோகை பிடித்த தாவரங்கள்
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்.
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்
சரித்திரம் கெக்கலிக்கும்.
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து
எங்கும் பொய்கள் கவியும்.
ஒன்று அல்லது மற்றொன்று -
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.

திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று
மனிதர்கள் எரிக்கப் படுவதை
பெண்கள் சிதைக்கப் படுவதை
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.

பாதுகாப்பற்றது வெளி
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை.
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்.
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.
எனினும்
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை
தாமிரச் சூரியன்
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்
அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்
காத்திருக்கிறது நம்பிக்கை
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.

- சுகுமாரன்

இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை
இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்
அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல
தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்
இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன
இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது.

மனுஷ்யபுத்திரன்

அரைக் கணத்தின் புத்தகம்

ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள்
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான்
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.

சமயவேல்

கதவைத் திற

கதவைத் திற காற்று வரட்டும்
சிறகை ஒடி
விசிறியின்
சிறகை ஒடி.
விசிறிக்குள் காற்று
மலடிக்குக் குழந்தை
கதவைத் திற காற்று வரட்டும்
உணவை ஒழி
உடலின்
உணவை ஒழி
உணவில் உயிர்
நீருள் நெருப்பு
கதவைத் திற காற்று வரட்டும்
சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
கதவைத் திற காற்று வரட்டும்.

சுந்தர ராமசாமி

அந்தர நதி

பேரழுகையின் உப்பு நதியில்
வழி தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக்
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.

ரமேஷ் - பிரேம்

கதை சொல்லி

கதை சொல்லும்
கல் தச்சன்
ஊருக்குள் வந்தான்.
உளியின் சொல்லுக்குத்
திறந்த கல்
ஒவ்வொன்றும் கூறின
ஒவ்வொரு கதை.
அம்மிக் கல்லில் ருசியின் கதை
இருட்டறைச் சிற்பத்தில்
பக்தியின் கதை
பல்கிட்டி இளிக்கும்
யாளியின் வாய்க்
கல் உருண்டையில்
மாயப் புனைகதை.
நதிக் கனவில் மயங்கும்
வறண்ட மணல் படுகையென மெய்
மறந்து கேட்
டிருந்த நாட்கள் அநேகம்.
ஊர் நீங்குமுன் அவன்
விட்டுச்சென்ற கதையிது:
ஏதோவொரு பகலிரவின்
பிரதியற்ற கணமொன்றில் அது
நேர்ந்திருக்கும்.
ஓசையும் மௌனமும்
கலவியுறும்
நிசப்த வெளியில் தன்
துடுப்பை முதன்முறையாய்
அசைக்கும்
அந்த மீன்
முட்டை ஓட்டின் விரிசல் வழி
நீளும்
பிஞ்சு அலகுக்கு
முதல் உணவாய்க் கிடைக்கும்
ஒரு துளி ஆகாயம்
என் காலமானியில்
முள்ளென நகரும் நான்
குறிக்கப்படாத அலகைத்
தீண்டும்போது
பேரோசையெழுப்பி
ஓய்ந்திருக்கும்
ஊசல்.

எம். யுவன்

ஏதாவது செய்*

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

ஆத்மாநாம்

* Do Something என்ற குந்தர் க்ராஸ் கவிதையை முன்னோடியாகக் கொண்டு எழுதப்பட்டது. க்ராஸின் கவிதை அடிப்படையில் மிகவும் கிண்டலானது. ஆத்மாநாமின் கவிதை தீவிரத்தையே தொனியாகக் கொண்டது.

லீப் வருடத்தில் கடவுள்

தேவன் உங்களை நேசிக்கிறார்
நான் தேவனை நேசிப்பதில்லை.
கோயில் கதவுகளைத் திறக்கிறார்.
நான் சாத்துகிறேன். என் திறப்பில்
தெரிகின்றன கழுவப்படாத கழிப்பறைகள்.
ரில்கே சரண் அடைகிறான்:
“இனியோ
அது
இங்கு வந்து
என்னை நெடிது தேடி
மாலைப் போதில்
ஏதிலார்
வன்மடியில்
வீழும்.
எனக்குப் பயமாகின்றது
என் செய்வாய் இறைவா?”
நான் சரண் தருவதில்லை.
அவர் புதைக்கப்பட்டதை மறைக்கப்பட்டதை
நினைவில் வைத்து மறைத்திருக்கிறேன்
என் மண்டையின் ‘ஞாபகப் பித்தானை’ அழுத்து.
கடவுள் இறந்த மறுநாளில்கூட
இங்குக் குயில் ஒன்று சுருதி சுத்தமாய்
காதலைக் கூவியது பெயர் தெரியாத் தெருக்களில்
கழுதைகள் புணர்ந்து நின்றன போராளிகள் சரிந்தனர்
தோட்டாக்கள் துளையிட்ட மார்புகளுடன் நண்பர்கள்
தோழமை நகரைத் துறந்தனர்
நாய்கள் 10 மணி வெய்யிலில் நன்றாய்த் தூங்கின
படித்து முடித்த எனிட் பிளைட்டனை
மீண்டும் கடையில் வாங்கிக்கொண்டிருந்தனர்
நாகரிக யுவதிகள்
டாலர் மதிப்பு இந்திய ரூபாய்த் தகராறில் கடவுள்
இன்னும் இறக்கவில்லை புத்தகத்தை வாங்கவில்லை
லீப் வருடத்தைக் கொண்டாடப் பூமி தன்னைச் சுற்றித்
தானே நடனமாடுகிறதாம். . . . . . . .

பிரம்மராஜன்

No comments: