Friday, March 11, 2011

கவிதைகள் ஆனந்தராஜ்

சுவரில் வசிக்கும் புலி

உறுமும் தோரணையுடன் நெடுநாட்களாக
அறையின் சுவரில் வசிக்கிறது ஒரு புலி.
ஆபத்தின் நிறமான பழுப்பு மின்னும் அதன் விழிகளில்
காலம் 360 டிகிரிகளில் சுழல்கிறது.
காணும்போதெல்லாம் அவை நினைவுபடுத்துகின்றன
ஒரு ரயில் பயணத்தின்போது என்னருகில்
நந்திக்கலம்பகம் படித்துக்கொண்டு வந்த பெண்ணை.
அப்புலியின் முதுகிலிருக்கும் நீண்ட கறுப்பு வரிகளிலிருந்து
பறக்கும் தூசிகளில் ஒட்டியிருக்கின்றன
மீண்டும் வரும் பயங்கரக் கனவுகளுக்குக் காரணமானவர்களின் முகங்கள்.
இரையைத் தவறவிட்ட ஆவேசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
அதன் மீசையில் துடிக்கும் வன்மம்
வெளித்தெரியும் பற்களின் கூர்மையுடன் போட்டியிடுகிறது.
நினைவின் அடர்நீல சமுத்திரத்தைத் தாண்டி கண்ணுக்கெட்டாத தூரம் வரையிலும்
செல்கிறது ஆண்டாள் கோயில் தேர்வடக்கயிறு போல் திண்மையுடைத்த அதன் வால்.
பீரோ, மேசை டிராயர், ஜோல்னா பை, கணினி பிரிண்டர் என
அனைத்திலும் நிறைந்திருக்கிறது எனக்கு மட்டும் கேட்கும் அதன் உறுமலோசை.
மனதை உருக்கும் ஒரு காவியத்தை எழுதத் தூண்டுகிறது
சுற்றித்திரிந்த வனத்தின் அடந்த பசுமையை நினைத்து
ஏங்கும் பொழுதுகளில் அதன் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்.
திடீரென வேறொரு கோணத்திலிருந்து பார்க்கையில்
ஆனந்த நடனமிடும் இறைவனைப் போல இருக்கிறது அது.
அறையின் சுவரில் வசிக்கும் அதன் எடை அதிகரித்துக்கொண்டே வருவதை
இன்னும் எவராலும் கண்டுகொள்ள முடியவில்லை.
நடுச்சாமங்களில் ஹல்க் பட ராட்சத மனிதனின் பேருருவம் கொள்ளும்
அதன் முதுகிலமர்ந்து சன்னல் வழியே பறந்து திரும்புகிறேன்
பேரண்டத்துடன் புழங்கிக்கொண்டிருக்கும் என் பாட்டையாவிடம் கதை கேட்பதற்கு.

மறைந்து வாழும் பேன்

வழக்கமாய்ப் பயணிக்கும் பச்சைநிறப் புகைவண்டி
அடிக்கடி நினைவுபடுத்துகிறது
மறைந்து மறைந்து பல காலமாய்
என் தலையில் கடிக்கும் அவளது பேனை.
ஆதிசேஷனின் மறுபிறவியான அந்தப் பெரிய ஆலமரத்தைத்
தினசரி கடக்கும் அப்புகைவண்டியில் ஒரு நாள்
என் பின்னந்தலையோடு தன் கூந்தலைப் பொருத்தி
கனவுகளைப் பிய்த்துப்போட்டபடி பயணித்தாள் அவள்.
கொழுத்த மீன் சிக்கிய தூண்டிலைச்
சுண்டியிழுக்கும் கையின் வேகத்துடன் அவளை நோக்கி
என் தலையைத் திருப்பியபடியிருந்தது அவள் முகம்.
மழையில் கழுவப்பட்ட கறுப்புநிற
ஸ்கார்ப்பியோ காரின் கவர்ச்சியுள்ள ஒரு பேன்
அப்போதுதான் என்மீது இடம் மாறியிருக்க வேண்டும்.
மேஃபிளவர் பூக்களைத் தேடும் வண்டு போல
என் தலையின் மயிர்க்கால்களைத் தேடியலையக்கூடிய அது,
இந்நேரம் இரவுநேரப் புரோட்டாக் கடைகளில்
அடுக்கி வைக்கப்படும் மாவுருண்டைபோல் பெருத்திருக்க வேண்டும்.
என் இரத்தத்தைக் குடித்தபின் அதன் கனவுகளில் வரும்
என்னுடைய முற்பிறவி ஞாபகங்கள் தாங்க முடியாமல்
தன் இரத்தம் கக்கி அது விரைவில் சாகக்கூடும்.
பவளமல்லிப்பூவின் வாசனையுள்ள நெடுங்கூந்தலையுடைய
வனதேவதையின் உறவினளான அவள்
எரிமலையின் கரும்புகை நாற்றமடிக்கும் என் இரத்தத்தின் கறை
படிந்த தலையுடன் நான் பயணிக்கும் பெட்டியில்
மீண்டும் ஏறும் நாளின் இரவில்,
எங்கள் கனவுகளில் ஒரே சமயத்தில் நாடகமாய் அரங்கேறலாம்
ஒரு ஆதிகால வேசி இருபதினாயிரம் பட்டத்து ராணிகளுக்குப்
பிரசவம் பார்த்த கிழவனைக் காதலிக்கும் தொல்கதை.

No comments: