Friday, March 11, 2011

ரைனர் மாரியா ரில்க்கே கவிதைகள் ஜெர்மன் மூலத்திலிருந்து தமிழில்: வஸந்தா சூரியா

பெரும் பாடலா, நான்?

என் உயிரைச் சுழித்துச் சுழித்து வளர்த்து வருகிறேன் நான்
பொருள்கள் அனைத்துக்கும் மேல்
அதன் வட்டங்கள் உயர உயர
இழுக்கப்படுகின்றன.
பூர்த்திசெய்ய முடியுமா என்னால்
இறுதிக் கட்டத்தை?
ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால்,
முயற்சி செய்தே தீருவேன் நான்.
வலம் வருகிறேன் நான்
தொல் கோபுரத்தானை
இப்படியே விடாமல் சுற்றுகிறேன் நான்,
ஆயிரம் ஆயிரங்காலமாக. நான் யார்?
இதுவரையில் எனக்குத் தெரியவில்லை -
ஒரு கழுகா, நான்?
புயலா, நான்?
அல்லது
ஒரு பெரும் பாடலா, நான்?

புயல்களை விடவும்

எப்போது?
எப்போது ஓயும் இந்த மழை?
இந்தப் போற்றுதலும் புலம்பலும்?
மனிதச் சொற்களில் ஓதிய அத்தனை மந்திரங்களும்
முன்பே மாமந்திரவாதிகளால் கொட்டித் தீர்க்கப்படவில்லையா?
அட, பெருமைகொள்வதற்கு இது என்ன,
புதுக் கண்டுபிடிப்பா?
மனிதச் செவிப்பறைகள்மீது
விடாமலே அடித்துக்கொண்டிருக்கும் மணியோசைகளின்
ரீங்காரம் அலுக்கவில்லையா?

இரண்டு நூல்களுக¢கிடையே
மௌன சொர்க¢கத்தைக¢ கண்டோ
அல்லது இந்த அப்பாவிப் பூமியின்
ஒரு விள்ளலைக¢ கண்டோ
மகிழ் மனமே.

புயல்களை விடவும்
சமுத்திரங்களை விடவும் இரைந்து
கதறியிருக்கிறது, மனிதக¢ குரல்.

நம் ஓலங்களுக்கு மேல்

வானத்தில் வீச்சில் அளவில்லாத
மௌனம் மிஞ்சிக் கிடப்பதனால்
நம்முடைய அலறல்களில் மூழ்காமல்
காதுக்கு எட்டுகிறது, வெட்டுக்கிளி கிறீச்சிடும் சப்தம்.
நம் ஓலங்களுக்கு மேல்
வானில் நட்சத்திரங்கள்
ஓசையின்றித் தோன்றுகின்றன.

நம்மை விட்டுப்போனவர்கள்
முதியோர்கள்
முதல்முதல் தோன்றிய
நம் முன்னோர்கள்
மீண்டும் பேசமாட்டார்களா!
நாம் முதல்முதலாக
கேட்கமாட்டோமா?
நாம்
வெறும் வாய்
எல்லாவற்றின் மத்தியில்
அதோ, நெடுந்தொலைவில்
நிறைவடைந்து வாழும் இதயத்தை
யார் பாடுவார்?
அதன் பெரும் நாடிஅசைவு துண்டிக்கப்பட்டு,
சின்னஞ்சிறு துடிப்புகள் பொட்டலங்கட்டப்பட்டு
நம் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பெரும் வேதனையைப் போலவே
அதன் ஆனந்தக¢ கூத்தும்
நம்மால் தாங்க முடியாதது
அதனிடமிருந்து
மறுபடியும் மறுபடியும் பிய்த்துக்கொள்கிறோம்,
வெறும் வாயாகி விடுகிறோம், நாம்...
ஆனாலும், திடீரென்று
பேர் ஆற்றல் வாய்ந்த அந்த இதயத் துடிப்பு
ரகசியமாய் நமக¢குள் நுழைகிறது; எனவே
நாம் கதறுகிறோம் -

அதன் பிறகு -
நாமே மெய்மை, உருமாற்றம், வதனம்

அன்னம்

அலுப்பூட்டும் எதிர் நீச்சல் இது.
இன்னும் செய்து தீர வேண்டிய எல்லாவற்றின் நடுவே
சுமையுடன், தளைகள் தடுக்க, தத்தித் தடுமாறும் அலங்கோலம்,
இந்த வாத்து நடை.

பிறகு, சாவு.
இன்னும் தொற்றிக்கொள்ள முடியாமல்
நேற்றுவரை மிதிபட்ட பூமி சரிந்து,
திகிலுற்று, தன்னையே நழுவவிட்டு

நீரில் விழுந்து,
மெதுவாக ஏற்கப்பட்டு
இன்பமுற்று தளர்ந்து விட்டுக்கொடுத்து
நீர் அலையலையாய்ப் பின்வாங்கும்போதே

எல்லையில்லா அமைதியுடன், உறுதியாய்
முழுமையை நோக்கி, கம்பீரமாக
மிதக்கும் அன்னம்.

No comments: