Friday, March 11, 2011

சல்மா கவிதைகள்

1
சென்றிருந்த குழந்தைகள்
காப்பகத்தில்
பட்டாம்பூச்சிகளென
நிறையக் குழந்தைகளிருந்தார்கள்.
கைகளின்றி, கால்கள் இன்றிப்
பிறந்த குழந்தைகள்
மணமாகாத தாய்களுக்குப் பிறந்த
ஆண் குழந்தைகள்
குப்பைத் தொட்டிகளுக்குப்
பரிசளிக்கப்பட்ட
வேண்டியிராத பெண் குழந்தைகள்,
எனது இரண்டு கைகளையும்
எட்டுக் குழந்தைகள் பற்றிக்கொண்டு
அறைகளுக்கு வழிநடத்திச் சென்றார்கள்.
புரியாமல் விழித்த என்னிடம்
தன்னை அழைத்துச் செல்ல
வந்த
தாயாக நானிருக்கலாம்
என்கிற ஆசைதான்
என்கிறாள், காப்பகத்தைப் பார்த்துக்
கொள்கிற, தத்துக் கொடுப்பவள்

2
கனவுகள் வராத இரவுகள்
அதிகரித்துக்கொண்டிருக்கின்றன
வறண்ட நிலங்களாகிக்
கொண்டிருக்கின்றன இரவுகள்
ஒரு நாள் அல்லது
இரண்டு நாள்
மிஞ்சிப் போனால் ஒருவாரம்
பொறுத்துக்கொள்ளலாம்
நல்லதாகவோ
கெட்டதாகவோ
இரவுகள் பாலைவனங்களாகிக்
கொண்டிருக்கும்
கொடுமையை
யாரிடம் சொல்ல

3
குழந்தைகள் உலகத்தில்
நுழைந்துகொள்வது
வேறெதைக் காட்டிலும்
அற்புதமானதாக இருக்கிறது.
வணக்கங்களோ
பாவனைகளோ பவ்யங்களோ
வேண்டியிராத
அவர்களுடனான சந்திப்புகள்
ஒரே அசௌகர்யம்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
அவர்கள் வெளியேற்றி
விடுகிறார்கள் என்னை
என் அனுமதியில்லாமலேயே
4
இரண்டு கைகளிலுமாக
ஆறு நாய்களைப்
பிடித்திருந்தான்
அனூப்
மனிதர்களைப் போல
நீட்டமாக ஒன்று
மற்றதெல்லாம்
வகைக்கு ஒன்றாக
ஒவ்வொன்றாக ஓடிவந்து
என்னை முகர்ந்துவிட்டு
திருப்தியுடன் அவன் கைகளுக்குத்
திரும்பிக்கொண்டிருக்க
என் குழந்தை கேட்கிறான்
நாய் விற்பவரா என்று
நல்லவேளை, அவன் சொன்னது
அனூப்பின் காதுகளில் கேட்டது
போல
நாய்களின் காதுகளில்
விழவில்லை,
நிச்சயமாக
அவை வருத்தப்பட்டிருக்கும்

5
எல்லாவற்றையும்
பெட்டியில் அடைத்தாயிற்று
சேமித்த புத்தகங்களை
அணிகலன்களை, துணிகளை
இப்போதும் மிஞ்சிவிட்ட
ஆசைகளை
நம்பிக்கைகளை
எதுவும் தொந்தரவு
தரவேயில்லை
இருந்தாலும்
முடித்துக்கொண்டு செல்கிற
சம்பிரதாயமான உறவு
கொஞ்சம் பிணக்கிக்
கொண்டுதான்
ஒப்புக்கொள்கிறது

6
அழகான ஒரு பனிநாளில்
தூர தேசத்திலிருந்து
தொலைபேசியில்
அம்மாவை அழைத்து
குழந்தைகள் பள்ளியிலிருந்து
திரும்பியதும்
என்னை அழைக்கச் சொன்னேன்
அழைப்பு வரவேயில்லை
காத்திருந்து சோர்ந்து
நானே மறுபடி அழைத்தபொழுது
சொன்னாள்
அவர்கள் உன்னைக் கேட்கவில்லையே
வலித்தது.

No comments: