Friday, March 11, 2011

கவிதைகள் சிபிச்செல்வன்

மலைக் கவிதைகள்

1.
என் காலையுணவாக
மலைப் பாறையை விண்டு உண்டேன்.
விக்கித் திணறிய வேளை
அருந்தினேன் மலையருவி நீரை.
என் மதிய உணவாக
மலையிலிருந்து வெட்டித் தின்றேன்
ஒரு கவளம் மண்.
பகல் முழுவதும்
ஒரு மலைக் குன்றையென்
முதுகில் ஏற்றிக்கொண்டு
இம்மலை உச்சியிலிருந்து
அம்மலை உச்சிக்குத்
தாவித்தாவி விளையாடுவேன்.
என் இரவு உணவாக
மலையைச் சாறாகப் பிழிந்துண்பேன்.
உணவு இடைவேளைகளுக்கிடையில்
கொஞ்சம் கொஞ்சம்
கூழாங்கற்களை அசைபோட்டுக்கொள்வேன்.
ஆகையால்
எப்போதும் என் பெயர் மலைச்சாமி.

2.
என் அதிகாலை மலையைத் திறந்தேன்
யாரின் பார்வையிலும் படாது
மலை உச்சியில் பூத்துக் குலுங்கியது மஞ்சள் மலர்.
யாரின் மூக்கையும் துளைக்காது
மனம் வீசிக்கொண்டிருந்தது மலை மலர்.
யாரின் கவனத்திற்காகவும் காத்திருக்காமல்
மலை உச்சியிலிருந்து வீழ்ந்துகொண்டிருக்கிறது
மஞ்சள் மலர்.

3.
என் கிழக்கு வாசற்கதவைத் திறந்தேன்
மௌனமாகச் சிரித்தது ஒரு மலை
ஜன்னலைத் திறந்தபோது
வானூயர எழுந்து நின்றது ஒரு மலை
பின்கட்டுக் கதவைத் திறந்தபோது
வேறொரு பசுமை மலை
படுக்கை அறை
கழிவறை ஜன்னல்கள் வழியாக
சமையலறை புகைபோக்கி வழியாக
வழிந்தன
மற்ற மற்ற மலைகள்.
தெருவில் இறங்கி காலடி வைத்தேன்
மலைகள்மீது
திரும்பிய திசையெல்லாம் எதிரொலித்தது
இவ்வூரின் பெயர்
*‘மலைகள் சூழ்ந்த ஊர்’ என்பது அவ்வூரின் பெயர்.

*சேலம் - சைலம் என்பது மருவி சேலம் என்றானது.
சைலம் - ‘மலைகள் சூழ்ந்த ஊர்’ எனப் பொருள்.

No comments: