Friday, March 11, 2011

கவிதைகள் வா. மணிகண்டன்

கோடை மரணம்

அவள்
உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை
உணர்த்திக்கொண்டிருக்கிறீர்கள்

அவள்
தன் துக்கங்களைப் பகிர்ந்து
புதிர்களுக்கான முடிச்சுகளைக் காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்

அவளை அவளாகவே

எனினும்
உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறாள்
சிரிப்பதாகப் பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில்
அவளின் படத்தைப் பார்த்துக் கதறியழுதீர்கள்

பிறகு
தனித்த பயணத்தில்
சூரியன் முகத்தில் விழும் கணத்தில்
அழுது தீர்த்தீர்கள்

நாட்கள் கழிய
உங்களைப் பிடிக்கும் என்கிறாள்
சொற்களை
உங்களோடு புதைத்துக்
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்கள்

நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையைப் பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
ஆளுமையைச்
சிதைக்கிறாள்

உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
அவை
தன்
சிக்கல்களின் வெற்று பிம்பங்கள் என்கிறாள்

நீங்கள்
நிராகரிக்க எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் கசங்கத் துவங்குகிறீர்கள்
இந்தத் தார்ச்சாலையின் மதிய வெயிலில்
வாகனத்தில் நசுங்குவதுகூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்

கண்ணீரில் கரையத் துவங்கும்
உங்களைப் பார்த்துச் செருப்புத் தைப்பவன்
வருத்தப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்களின் துக்கம் உங்களுக்கானது
இந்தக் கண்ணீருக்கான அர்த்தம் முடிவற்றது
உறங்கச் செல்கிறீர்கள்
இரவின் வெறுமை உங்களை விழிக்கச் செய்கிறது
அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு.

இலையுதிர்கால முத்தம்

மரம் ஒன்றை
வெட்டியெறிகிறார்கள்

குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுக்கிறார்கள் என்றேன்
கிழவியைக் கோடாரியால் பிளக்கிறார்கள் என்றாய்

குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுப்பதும்
கிழவியைக் கோடாரியால் பிளப்பதும்
உனக்கும் எனக்கும் புதிதாகத் தோன்றாததால்
வேறொன்றை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
நமக்கு

அவசரமாக எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம்

வெட்டப்படும் மரமொன்று
நாம் தனித்திருக்கும் மாலையை
ஆக்கிரமிக்க விரும்பாத
இருவருமே
பேச்சை மாற்ற முயல்கிறோம்

முத்தம் பற்றி நான் ஆரம்பிக்கிறேன்
ஸ்பரிசம் பற்றி நீ

வெளிச்சம்
வடிய
இழந்த குஞ்சுகளையும்
கூடுகளையும்
தேடும்
பறவைகளின்
பதற்றம்
நம் தனிமையைக் கலைக்கிறது

இன்று
இந்த மாலையை
இந்த இடத்தை
விரைந்து கடக்கப் பிரார்த்திக்கிறோம்

நேரமாவதாகச் சொல்கிறாய்
நானும் ஆயத்தமாகிறேன்
முத்தம் இல்லாத
இந்த மாலையில்
இறந்துகொண்டிருக்கும்
இந்த மரத்தைப்
பார்த்துவிட்டு நகர்கிறோம்

நம் முத்தங்களின்
சாட்சி
உயிர்
கசிந்துகொண்டிருக்கிறது

No comments: