Friday, March 11, 2011

கவிதைகள் பெருமாள்முருகன்

நடனம்

புதர் நடுச் சிறுவெளி
சாரைப் பாம்புப் பிணையல்
எழுந்தெழுந்து தாழும் தலை
முறுக்கி நெகிழும்
உடல் நிகழ்த்தும் அசைவுகள்
காற்றுத் தாளம்

ஏகாந்த வெளியெங்கும்
நடனம்

திகம்பரக் குளியல்

சிற்றோடை
எம்பி விழுந்து
அருவியாகும் கானகம்

வெயில் வடிக்கும்
இருபுற மர உச்சிகளில்
ஒலிமுகம் காட்டும் பறவைகள்

நீர் தேய்த்த
வழுக்கல் பாறையேறி நின்றேன்

தீராக் குளியல் வெறியில்
திகம்பரனாக்கி
அருவி மூடிற்று

பாறைகளில் உருண்டு
கிளைகளில் தாவி
வானகம் பறந்து
மீண்டும்
அருவிக்குள் இறங்கினேன்

ஒரு கணத்தில்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
கடந்தது உடல்

பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது

அவன் எதுவும் பேசவில்லை
கண்ணீர்த் துளிகள் நிலவொளியில் மினுங்கின
தலைகுனிந்து மண்டியிட்டுப்
பூமாதேவியை வணங்குபவன் போலக்
குப்புறப் படுத்தவன்
என் கால்களைப் பிடித்துக்கொண்டான்

சந்தோசமாகத்தான் இருந்தது
எத்தனை நேரம்
அவன் தன் பிடியை விடுவதாயில்லை

எல்லாக் கோரிக்கைகளையும்
ஏற்பதாகக் கத்திப் பார்த்தேன்
அவன் ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை
எனினும்
பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது
கண்ணீரால் நனைந்த பாதங்கள்
வெம்மையில் தவிக்கின்றன

பிரயாசையோடு
உதறி எறிந்துவிட்டு ஓடுகிறேன்
அகற்ற இயலாமல் உடன்
அவன் கைப்பிடி விலங்கு.

No comments: