Friday, March 11, 2011

சுகிர்தராணி கவிதைகள்

ஒரு துளி இசையும்
ஒரு பாம்புச்சட்டையும்

அவள்
அந்த இசைக்கருவியை
இரு கைகளாலும் பற்றியிருக்கிறாள்
முலைமுதிரா இளம்பெண்ணின்
செழிப்பான கனவைப் போல
பருத்திருக்கும் நீண்ட மூங்கிலது
உடலின் துளைகளைப் பதுக்கிக்கொண்டு
ஓர் உயிர்பிரியும் இசையை
வழியவிடக் காத்திருக்கிறது
காமப்பழத்தின் விதைகளையும்
கொண்டாட்டத்தின் தானியங்களையும்
வலியூறிய இறகுகளையும்
தன்னுள் தளும்பியபடி சரிந்திருக்கிறது
விரகம் மீதூறும்
மெல்லிய முத்தத்தைச் சுவைப்பதுபோல
உதடுகுவித்து அவளதை இசைக்கிறாள்
காமத்திலும் காயத்திலும் புரண்ட இசை
கோடையின் சுழலாய் மேலெழும்புகிறது
அவள் இசைக்க இசைக்க
உடலெங்கும் தாழைக்காட்டின் வாசனை
உயிர் எப்போதோ உருகியிருந்தது
அவள் வாசித்து முடிந்ததும்
அவ்வறையில் எஞ்சியிருந்தன
ஒருதுளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும்

காமத்தின் புராதனக் கோயில்

என் மீதுதிர்ந்த உன்
விரகச் சருகுகளால் தீமூட்டு
என் சுண்ணம் என் சாந்து
உருகி வழிகிறது
ஓங்கி உயர்ந்தயென் அழகுகெட
பிளவுகளில் கிளைபரப்பி
என் கற்களைத் தகர்
புணர்வின் பறவைகள் பறக்கின்றன
உள்நுழைந்த உன் வேரிலிருந்து
அதிஅற்புத துளியைச் சிந்து
கருவறை
மேலிருந்து மூழ்குகிறது
காமத்தின் புராதனக் கோயில் நான்.

இரவு

சிவப்புநூலைப் போலிருக்கும்
என் உதடுகளால்
விதைப்புக் காலத்தின் பாடலொன்றைப்
பாடுகிறேன்
ஆணிகளால் அறையப்பட்ட கதவு
தாளிடப்படவில்லை
அறையெங்கும் நீல ஊற்றுப் பீறிட
போதையைப் பிளந்துண்ணவனின்
அல்லாட்டத்தைப் போலப் பரவசமடைகிறேன்
மதகடைத்தபின் கசியும் நீரென
காமம் என்னுள் பரவுகிறது
அப்போதுதான்
அதுவும் அவளும் உள்நுழைகிறார்கள்
அது தன் புறாக்கண்களால்
பார்த்துக்கொண்டிருக்க
நானும் அவளும் நிர்வாணமாகிறோம்
வெளிமானின் குட்டிகளையொத்த எம்முலைகள்
உடல்களுக்கிடையே உருகி ஓடி
ஆறாத தீக்கடலில் கலக்கின்றன
தூரக்காட்டில் மூங்கில் முறிகின்றது
அவளிடமிருந்து புரண்டு நகர்கிறேன்
அவிழ்த்துப் போட்ட ஆடைகளின்கீழ்
பழகிய விலங்காய்
படுத்துக் கிடக்கிறது இரவு.

கற்சிற்பம்

செயற்கையாய் குளிரூட்டப்பட்ட
அவ்வருங்காட்சியகத்தில் நுழைகிறேன்
சோடியம் ஆவி விளக்கிலிருந்து
ஒளி தூறிக்கொண்டிருக்கிறது
கடந்துபோன நூற்றாண்டுகளின்
கற்சிற்பங்கள்
குறிப்புகளோடு அமர்ந்திருக்கின்றன
வியந்தபடி
அவற்றைத் தொடாமல் நகர்கிறேன்
மூலையில் நின்றிருக்கும்
மூக்குடைந்த வீரனின் சிலை
என் தோளைப் பற்றித் திருப்புகிறது
எனக்கு நா எழவில்லை
அறையெங்கும்
வெப்பம் வியாபிக்கிறது
வெளிச்சமும் பெய்யவில்லை
ஒரு நீண்ட உதயத்திற்குப் பிறகு
அடுத்த பார்வையாளனுக்குக்
காத்திருக்கிறது என் கற்சிற்பம்.

உறையிலிடாத முத்தம்

எனது அறையில்
குவிந்திருக்கும்
ஓராயிரம் முத்தங்களில்
வெடித்திருக்கும்
உன் உதடுகளிலிருந்து பெற்ற
போர்க்கள முத்தத்தைத்
தேடிக் கண்டடையும் வேளை
அது
தடயமற்றுக் கரைந்திருக்கிறது
உறையிலிடாத உப்பாய்.

No comments: