Friday, March 11, 2011

கவிதைகள் - அ. ரோஸ்லின்

பிரபஞ்சத்தின் சில துளிகள்

பசிக்கும் ருசிக்குமான
இடைவெளிகளில்
அடைபட்டுள்ளது
பிரபஞ்சம்
நாளைக்கும் வருவான்
பஞ்சம் தீர்க்கும் தேவன்
கண் காணவியலாத
காற்றின் ரூபம்கொண்டு

n n n

பூர்வ ஜென்ம நித்திரையில்
பிரபஞ்சம் தன்
கால்பிடியிலிருந்து
நழுவிக்கொண்டிருக்கும்
ஏதோவொன்றுக்காக
சிந்தை
பிறழ்ந்தலைகிறது.
எட்டோ டு ஒன்பதாய்
அலுத்துப்போன
ஜீவிதம்,
தலை சாய்ந்த
சுற்றுகளோடு
புலம்பெயருமதன்
சருமம் துடைத்தெறியும்
வியர்வையோடு
விழி நீர்த் துளிகளையும்.

n n n

ஒரு கழுதையாய்
சுமந்தலையும்
பிரபஞ்சத்தின்
பொதிக்குள்
நீர்த்து உறங்கும்
நிதர்சனங்கள்,
அதிருப்திகள்
நெருக்கடிகளுக்கான
பிதற்றல்கள்
இம்மி இம்மியாய்
உயிர் பிளக்கும்.

கரு முட்டைகளோடு
அடிபட்டு அடங்கும்
சர்ப்பத்தின்
கருப்பையாய்!

No comments: