Friday, March 11, 2011

கவிதைகள் - பெருந்தேவி

இல்லையா என்ன?

எப்பேர்ப்பட்ட விடியலும்
கண்ணீர் முத்தொளிக்கு ஈடாகாதென்று
சொல்லச் சொல்லி
தோற்றபின்
தூதுவிட்ட சமாதானம்
துரிதத்தின் காலையை அணிந்து
நண்பகலில் அன்பின் பேதைமை வடிந்து
உப்பூறிய
வெற்றிலை வாயின் அந்தி சுமந்து
அடைந்த ஓர் இரவு
சடுதியில் திரும்பும்
வரை,
யாமம் தாவிப்பிடித்து முடிச்சிட்ட
தனிமைப் பைக்குள்
புலம்பித் தீர்க்கிறான்
அப்படியில்லை இல்லை என்று
ஒரு கள்ளக் காதலன்.



சிறிய ஆமாம்

ஒரு பெரிய இல்லையை
தன் விரல் நீட்டிய நாளின் முன்னால்
எல்லாச் சிறிய இல்லைகளும்
கண்கட்டி மறைகின்றன.
ஒரு சிறிய ஆமாமின்
விரல் கோர்த்த
வேறுநாள் பற்றிய
கற்பனையின் வசியம்
மறைக்கும்
இதையும்
இல்லையா?



ஊதா

வண்ணவண்ணச் சொல்லடுக்குகளில்
பாராட்டின் பாயசத்தை
நிரப்பிக் கொணர்ந்தாலன்றி
பெரிய வாய்ப் பெண்களை
யாருக்குப் பிடிக்கும்?
தன்னைப் பிடிக்காதவர்களை
தனக்கும் பிடிக்கக் கூடாதென்று
அடுக்குகளை
இடறியும் விடுவார்கள் அவர்கள்.
மிச்சத்தை நக்கப் பூனைகள் அவாவும்போது
தூங்குவதாகவும் பாவிப்பார்கள்.
காதலிகளாக இருக்க முடியாத பூனைகளுக்காய்
ஐயோ என்று
இரங்க முனையாத நாக்கு
அன்று அண்ணாந்து பார்த்த
நீள்வானத்தின் அரும்ஊதா
தன்னை எழுதியதாக எண்ணித்
தானே
அமைதியுறும்.



பேராசை

தெரியவில்லை
களியாட்டம் கொண்டாட
ஓர் அந்தரங்கம் போதும்
ஆயுசுக்கும்
என்றாலும்
இன்னும் சாறுகளோடு
இன்னும் பேரதிகமான
இன்னும் கருணையின் செல்லப்பிள்ளையாக
என் உவகை இருந்திருக்கலாம்.



வரையறைகளை எழுதுதல்

ஒரு பெண் சொல்லை
எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம்?
நிச்சயமாக கலகலப்பின் முத்துக்களாக அல்ல.
அதன் சிகப்புக்கூட மாதுளையுடையது அல்ல.
அருங்கிளியின் பாடலாக அல்ல.
கூறியது கூறலில்
அது
புயலின் நாற்சந்தியில் சுழலும் கைகாட்டி.
திசையில் கவனமில்லாத அது
வரைபடத்தின் தடம்கூட அல்ல.
சேருமிடம் அதன் நோக்கமல்ல.
சில நேரங்களில்
அது நிராசைகளின் கொலுசு.
சில நேரமோ அது
உபரியற்ற விழைவுகளின் வேண்டுதல்.
இன்னும் சில நேரமோ
பாதைகளோடு கண்ணாமூச்சியாட
அவாவும் மின்னல்.
விழியில் உறுத்தும் ஒளியின் நறுக்கு.
சடுதியில் பொருளாகாமல்,
பிரமிப்பில் வைரத்தை நினைவூட்டாமல்,
இறைகட்டளைக்கு முன்னோடி ஆகாமல்,
எந்த ஒழுக்கத்தோடும் சேராமல்
அந்தச் சொல்
சுதந்திரத்தோடு நமக்கிருக்கும் இணக்கம்.
அதனோடு நாமிருக்கும் வெகுதூரத்துக்கான துக்கம்.
தந்தைமையை அடுத்துக் கெடுக்கும்
வாக்கியங்களின் சீட்டுக்கட்டில்
ஒரு ஜோக்கர் துருப்பு.



எங்கிருந்தும்

அந்நிய மொழியின் வகுப்பறையில்
உச்சம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.
நெகிழ வளையணியா என் கரம்
பசலையொத்த சொல்லை
அடிக்கோடிடத் தேடி
ஒளியச்சாக அனுப்பியது உனக்கு.
நிலையழிந்தன என் வெற்றோவியம்
நிலாக்களாகவும்
வளரும் தேயும் தனிமை
கொண்டாடத் தெரியாத
கையுறைகள் அபிநயிக்கின்றன
வாக்குறுதிகளை நினைவுகூரும் நோயை.
மின்தட்டச்சுப் பலகை படபடத்துச்
சிலிர்க்கும் என் ஆதூரம்
வேறொரு பொங்குமாக்கடல்
அருகே
பெருமூச்சு நீண்ட செடி.
உன் அஞ்சல் பெட்டியில் ஒளிரும்
புதுச்செய்திகளில் அதன் தண்டு.
நண்பிகளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா
என வினவும் ஜன்னலால்
அலைக்கழியாமல்
அதைத் தொட்டுவிட வேண்டும்
நீ.
என் பொறாமையின்
பனித்த கடல்கள் பல தாண்டி
அங்கே உன்
இரவின் மயானத்தின்
இங்கென்
பகலின் விரல்கள்
கணினி வசப்பட
அவிழ்கின்றன
பூவின் மேல் பூவாய்
வண்ணம் குலைந்த ஆசைக்கொத்து
பறந்து திரும்பும்வரை
முத்தம் அரும்பும்போது மட்டும்
மின்திரையிலிருந்து முகத்தை
முயற்சித்துத் திருப்பிக்கொண்டுவிடு.

No comments: