Friday, March 11, 2011

ஆப்ரிக்கக் கவிதைகள் ஆங்கிலம் வழி தமிழில்: குவளைக்கண்ணன்

விரைத்து மரித்தவர்கள்

என் தேசம் ஒரு புகலிடம்
அங்கே பைத்தியக்காரர்கள்
தங்கள் கண்களால் பேசுவார்கள்
ஏனெனில் அவர்கள் நாவற்றவர்கள்
கறுத்த இரவில்
நான் அதில் நடந்திருக்கிறேன்
மௌனம்வரை
நான் அதில் நடந்திருக்கிறேன்
கல்லறைவரை
நான் அதில் நடந்திருக்கிறேன்
வனங்கள் பேசுவதைக் கண்டிருக்கிறேன்
இரக்கமற்ற விளக்குகளோடுள்ள மாநகரங்கள்
நடைபாதையில் ஆட்டோக்கள்
ஜாக்கிரதை
என் சூரியனைக் கடல் திணறடிக்கிறது
ஜாக்கிரதை
என் குரலைக் கடல் மூடுகிறது
இன்று
பைத்தியக்காரப் பெண்கள் பாறைகளிடம் பேசுகிறார்கள்,
மலைகளுக்குக் கதைகளைச் சொல்கிறார்கள்
எமது மரித்தவர்கள் விரைத்தே வெளியேறினார்கள்
எமது மரித்தவர்கள் நடந்தே போனார்கள்

- அல்ஜீரியா, வடஆப்ரிக்கா மாலிகா ஓலாசென்

நின்றுகொண்டிருப்பது யார்?

முதலில்
உனது பெயரைத் துடைத்தழி,
உனது வருடங்களைக் கட்டவிழ்த்துவிடு
உனது சுற்றுப்புறங்களை அழித்துவிடு,
நீ எதைப் போலிருக்கிறாயோ அதையும்,
எஞ்சியிருப்பதையும் வேரோடு பிடுங்கு,
பிறகு,
உனது பெயரைத் திரும்ப எழுது,
உனது வயதை மீட்டுப் பெறு,
உனது வீட்டை மறுபடி கட்டு,
உனது பாதையில் நட,
அதன் பிறகு
முடிவற்று,
தொடங்கு, முதலிலிருந்து மீண்டும்

- எகிப்து ஆண்ட்ரி செடிட்

எனது சித்திரவதையாளன்,
லெஃப்டிணன்ட் டி . . .க்கு

நீ என்னை அறைந்தாய்-
இதுவரை யாரும் என்னை அறைந்ததில்லை-
மின்னதிர்ச்சி
அதற்குப் பிறகு உனது முஷ்டி
உன் ஆபாசமான பேச்சு
இனி முகம் சிவக்க முடியாது
நிறைய ரத்தம் சிந்திவிட்டேன்
இரவு முழுக்க
என் வயிற்றில் ஒரு தொடர்வண்டி
என் கண்களின் முன்னே வானவில்கள்
என் வாயை நான் தின்றுகொண்டிருப்பது போல்
என் கண்களை மூழ்கடிப்பது போல் இருந்தது
என் உடல்மீது எங்கும் கைகள்
எனக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது
பிறகு ஒரு காலையில் வேறொரு சிப்பாய் வந்தான்
ரத்தத்தின் இரு துளிகளைப் போல் ஒரே மாதிரி இருந்தீர்கள்
லெஃப்டிணன்ட் டி . . . , உங்கள் மனைவி
உங்கள் காபியில் சர்க்கரையைக் கலக்கினாரா?
நீங்கள் பார்க்க நன்றாக இருப்பதாக
உங்கள் தாயார் உங்களிடம் சொல்லத் துணிந்தாரா?
குழந்தைகளின் தலைமுடியைக் கோதினீர்களா நீங்கள்?

- வட ஆப்ரிக்கா, அல்ஜீரியா லைலா ஜபாலி

விடுதலை

நாங்களெல்லாம் தாய்மார்கள்,
எங்களுக்குள்ளே அந்தத் தீ
வலிய பெண்களின்
சீற்றமிகுந்த உள்ளுயிர் உள்ளது
எங்களால் வாழ்வுக்குள்
அழகை நகைத்தபடி புகுத்த முடியும்
அப்போதும் உங்களை எங்கள் அறிவின்
உப்புக் கண்ணீரைச் சுவைக்க வைக்க முடியும்
ஏனெனில் நாங்கள் துன்புறுத்தப்படுவதில்லை
இனிமேலும்;
நாங்கள் உங்கள் பொய்களுக்கும்
பொய்க் கோலங்களுக்கும் அப்பால் பார்த்துவிட்டோம்,
நாங்கள் சொற்களின் மொழியில் நிபுணத்துவம் பெற்றுவிட்டோம்,
பேச்சில் கரைகடந்துவிட்டோம்.
மேலும் இப்போது
எங்களைப் பச்சையாகவும் பார்த்துவிட்டோம்
நிர்வாணமாகத் துண்டுதுண்டாக
எங்கள் சொந்தக் கைகளில் ரத்தம் தெரிய தோலுரித்துப் பார்த்துவிட்டோம்.
நாங்கள் எங்களுக்குச் செய்துகொள்ளாத
எந்தப் பயங்கரத்தை உங்களால் செய்துவிட முடியும்?
பல காலம் முன்பே நாங்கள் எங்களுக்குச் சொல்லி
ஏமாற்றிக்கொள்ளாத எதை நீங்கள் சொல்லிவிட முடியும்?
எங்களது கனவுகளின் உடைந்த சிதறல்களைப் பார்த்துச்
சிரிப்பதற்குமுன்
எவ்வளவு காலம் அழுதோம் என்று உங்களால் அறிய முடியாது
அறியாமை
எங்களை, அவ்வாறான துணுக்குகளாக்கியது
நாங்கள் எங்களைத் துண்டுதுண்டாகத் தோண்டியெடுக்க வேண்டியிருந்தது,
எதிர்பார்த்திராத நினைவுச் சின்னங்களை
எங்கள் கைகளால் மீட்டெடுக்க வேண்டியிருந்து
அப்படியான பொக்கிஷத்தை
எப்படிப் பாதுகாப்பது என்றுகூட அதிசயித்தோம்.
ஆம், எங்கள் உருச்சிதைக்கப்பட்ட நம்பிக்கைகளைத்
திரட்டி உருவாக்கி
பார்வையின் சாரமாக்கி
உங்கள் கற்பனைகளுக்கு அப்பால்
எங்கள் மீட்பின் வலியாக அறிவிக்க
புரிந்துகொண்டுவிட்டோம்
ஆகவே கேட்கக்கூடச் செய்யாதீர்கள்,
இந்தமுறை எந்த அவஸ்தையில் இருக்கிறோமென்று;
கனவு காண்பவர்கள் தங்கள் கனவுகளை நினைவு கொள்வார்கள்
தொல்லைக்கு ஆளாகும்போது-
எங்களது வாழ்வின் உடைந்த துணுக்குகளைக் கொண்டு
நாங்கள் உண்டாக்கப்போவதிலிருந்து
நீங்கள் தப்பிக்க முடியாது.

- கானா, மேற்கு ஆப்ரிக்கா அபீனா P.A. பசியா

மீட்பனால் மோசடி செய்யப்படுதல்

பள்ளியின் தினவரவு இடாப்பிலிருந்து
சிகப்புமையால் பெயர் நீக்கம் செய்யப்பட்டு
கெட்ட சகவாசங்களைத் தேடிக்கொண்டது
சுருட்டி கிடுகுவேலிகளுள் சொருகி ஒளிக்கப்பட்ட
பாடப்புத்தகங்கள் பக்கம்
பிறகெப்போதும் நாட்டங்கொள்ளாதபடி கவனங்களில்
பெண்கள் நுழையத் தொடங்கியிருந்த காலம்.

காதலின் தீராப்பசி அடங்க
அருமருந்துக்காய் அலைந்த பித்தர்களுடன்
கணிசமான காலவெளி கரைய
உள்ளூர் வேசிகளின் பின்வாசலில்
நள்ளிரவில் அவர்களை இறக்கிவிட்டு
இருளுக்குக் காவலிருந்தேன்.
அவர்கள் ருசிகரக் கதைகளை
எனக்காக வைத்திருந்தனர்.

இருட்டைப் பிறவிக் குருடர்களிடமும்
ஓசைகளைக் காதுகேளாதவர்களிடமும்
நாற்பது பகல்களும் நாற்பத்தியொரு இரவுகளுமாகக்
கற்று வெளியேறியபோது முனிகளின் துணிவு கிட்டிற்று

வெள்ளுடும்புகளை வீசியெறிந்து நிலைக்குத்தில்
படர்ந்தேறும் வித்தையைக் கள்வர்களிடம்
பயின்றிருந்தவன்
உடைந்த கீலக் கண்ணாடிகளும்
துருவேறிய ஆணிக்கூர்களும் காவல்நின்ற
அரண் சுவர்களைத் தாவி உன்னை வந்தடைந்தேன்.
மாடவிளக்கின் திரிகுறைத்து இன்னும்
இரவாக்கி வைத்திருந்தாய் நீ...
சொட்டு வெளிச்சத்தையும் ஊதி அணைத்தோம்...

என்னை விசுவாசங்கொண்டிருந்தாய்

காதலும் கலவியும் அறம்பிறழ்ந்தது
கீழைத்தேய ஒழுக்கம் மரபு சிதைய
குறிகள் கலந்தன கொண்டாடினோம்...
கொண்டாடினோம்...
அதற்கப்புறமாய் வந்த நாட்கள் நீளவும்
மாடவிளக்குக்கு எண்ணெய் யிடவில்லை நீ...

நீ விசுவாசம் கொண்டிருந்தபடி
நான் பாத்திரமானவாயிருந்தேன்
நூற்றியொரு வீதம் கலவினேன்...

தாவல் ஒன்றில் ஊரொன்று கடக்கும்
கால்வலுவை எட்டொன்றும் பெற்றிருந்த காலம்.
காதல் ஒரு சாகசமாயிருந்தது.

போகத்தில் பழுத்தவர்கள்
காதலினதும் கலவியினதும் சூட்சுமங்களை
இறுதி நெறியாகப் பயிற்றி
தலைதடவி ஆசிர்வதித்த நீண்ட காலம் தள்ளி
நூறுகோடிப் பெண்களில் நிவாரணி
கொஞ்சம் கொஞ்சமாய் விகிதம் கண்ட அவர்கள்
தனக்கான பெண்ணைக் கண்டடைந்ததில்லை
என்ற மெய்
மரணங்களுக்குப் பிறகு இரங்கலாகிற்று.

காதலால் பீடிக்கப்பட்டிருந்த நூற்றாண்டுகளில்
இரவுகளின் கரிய வாசம் மணம்பிடித்தபடி
உனது பின் வளவு பேய் வதியும் பற்றைக்
காடுகளில் பாம்புகள் சரசரக்க
மணற் கடிகாரங்களில் மண்
நிரப்பிக்கொண்டிருந்தபோது
இந்தக் காதலனும் கலவியும்
கசந்துபோக விதியிருந்தது பின்னாளில்

இன்னும் நீ இரவாகி கட்டற்றுப் பெருகிய காலம்
பகலில் ஒரு நாள் இழையத் தொடங்கிற்று.

நீ தழுவியிருந்த மார்க்கம் பொய்யெனவாகிற்று
உனது மீட்பன் மோசடி புரிந்தேன்...
கைவிடப்படுதலின் இடியைத் தலைமீது
இறக்கினேன்...

ஏமாற்றுதலின் சாதுர்யத்தைத்
துணைகளில் வாய்ப்புப் பார்த்துக்கொண்டிருந்த
சகாக்களிடமிருந்து
பாவங்களின் விச முறிவுக்கான பத்திரச்சாறு பற்றிய
சுவடிகளைக் கைமாறிய பிறகு
முதலாவது பொய்யின்போது மட்டும் கடைசியாகத்
தடுமாற்றமிருந்தது.

சிரம்பதித்து நிலம்நனைய நினைந்துருகி அழுத
நீண்டதொரு
உடன்படிக்கைக்கு ஆண்டவனோடு வந்த பிறகும்
ஒதுங்கி இருந்த எல்லாவற்றோடும் நெருங்கினேன்...

நீ மாடங்களில் திரிகுறைத்த மண்ணெண்ணெய்
விளக்கின்
மஞ்சள் நடம் மறந்து
புகையும் கோலங்கள் அழிய
உனது கூந்தல் வழி கடந்த அகழிகள் தூர்ந்து
போகவிட்டு
அந்தகத்தில் ஆழ்த்தி உனை இருள் சூழ
துரோகத்தை என்னால் நிகழ்த்த முடிந்தது...

கண்களை உற்றுப் பார்த்தபடி
ஒரு குழந்தையை என்னால் கொல்ல முடிந்தது
இவ்வாறு...

- றஷ்மி

No comments: