Friday, March 11, 2011

றஷ்மி கவிதைகள்

மரணத்தின் பின்னான உதடுகள்...

ஆரத்தழுவுதல் வழி நட்பு மேலிடலை
உனது வழக்கின் படி வலியுறுத்தி
சொற்ப நாழி தான்...
வலிந்து படுக்கையில் சரிக்கப்பட்டபோது
வேட்டை நிமித்தம் ஏவிவிடப்பட்டிருந்த
வெறி நாய்களைக் கண்டு ஒரு கணம்
நடுங்கி
நிலைக்கு வந்தாய்.

படுக்கை அறை மென் மஞ்சள் உமிழும் இரா விளக்கு
பொன்னிறத்திலிருந்து வதனத்தின் பூச்சைக் கரைக்க
உனது முகம் சிவப்பைச் சார வெளிறிற்று

சுற்ற கூச்செறியும் முலைகள் அற்று
ஸ்தனங்களின் மட்டத்தில் இளநிறத்தில் புதைந்திற்று காம்பு

உள்மடித்து இறுக மூடியிருந்த
இரத்தம் சுண்டியோடா உலர் இதழ்களில் இருந்து
கையகப்படுத்தத் தொடங்குகின்றேன்...
மரணத்தின் பின்னான உதடுகள்...

திமிறலின் தாக்குப்பிடிக்கும் திறன்
வலு தளர்ந்தபோது
பாதி வெறுப்பும் மீதி விருப்புமாய்
உன்னை இழந்துபோகத் தொடங்கியிருந்தாய்...

காமத்தின் வலிவையெல்லாம் கையில் இறக்கி
கட்டிற்குள்ளாக்கி உன்னைக் கொள்ளும்
எத்தனத்தே யோனி இதழ்விலகி வழிவிடா மூடி
சலனம் ஏதுமற்றுப் பிரேதம் அதுவாகிக் கிடக்கிறாய்.

புழுவாய் ஊர்ந்து மேய்ந்து
அரித்துச் சுவைக்கின்ற ஜந்து
வேட்டைப் பல் நான்கை உடையதாயிருந்தது...
அறிவு ஐந்தையுடையதாயிருந்தது...

பித்தேறிய மண்டையிலிருந்து
காதலை முற்றும் துடைத்தெறிந்திட்ட சடமாய்
உன்னில் பாரமாகின்றபோது
வெறும் நுரைக்காய்களின் குலையென ஒருக்கால்
மனம் ஆற்றி ஆறிய
பருமுலைகளை மணமறிந்த
மோப்ப நாய்களின் வீணீர்
மூக்கினால் தாண்டுகையில் தெரிகின்றது.

உனது பரிவகக் கீழ் பகுதியைத் தீண்டி வீழ்த்தியபோது
நானுனை உள்வாங்க முடிந்தது.
வசியத்தின் போது போல்வாய் படிந்தாய்.

சிவந்த முகமும்...
சிலிர்த்த காம்புகளும்
தளர்வில் வழிவிட்ட இதழ்களும்...

கொஞ்சம் தண்ணீரை அலம்பி
இந்தப் பிசுக்கையும்
கொஞ்சம் நாட்களைக் கடத்தி
குமையும் கெட்ட இக்கனவையும் துடைத்து
எறிந்து புண்ணியனாய் திரும்ப முடியும் என்னால்...

கலவியின் களைப்பு அகலுமுன்
என்னை உதறியெறிந்து ஓடி
என் முத்தங்களை
கழிப்பறையில் வாந்தியாய் எடுத்தாய் நீ
குமட்டி...

மீட்பனால் மோசடி செய்யப்படுதல்

பள்ளியின் தினவரவு இடாப்பிலிருந்து
சிகப்புமையால் பெயர் நீக்கம் செய்யப்பட்டு
கெட்ட சகவாசங்களைத் தேடிக்கொண்டது
சுருட்டி கிடுகு வேலிகளுள் சொருகி ஒளிக்கப்பட்ட
பாடப் புத்தகங்கள் பக்கம்
பிறகெப்போதும் நாட்டங்கொள்ளாதபடி கவனங்களில்
பெண்கள் நுழையத் தொடங்கியிருந்த காலம்.

காதலின் தீராப்பசி அடங்க
அருமருந்துக்காய் அலைந்த பித்தர்களுடன்
கணிசமான காலவெளி கரைய
உள்ளூர் வேசிகளின் பின்வாசலில்
நள்ளிரவில் அவர்களை இறக்கிவிட்டு
இருளுக்குக் காவலிருந்தேன்.
அவர்கள் ருசிகரக் கதைகளை
எனக்காக வைத்திருந்தனர்.

இருட்டை பிறவிக் குருடர்களிடமும்
ஓசைகளை காதுகேளாதவர்களிடமும்
நாற்பது பகல்களும் நாற்பத்தியொரு இரவுகளுமாக
கற்று வெளியேறியபோது முனிகளின் துணிவு கிட்டிற்று

வெள்ளுடும்புகளை வீசியெறிந்து நிலைக்குத்தில்
படர்ந்தேறும் வித்தையை கள்வர்களிடம் பயின்றிருந்தவன்
உடைந்த கீலக் கண்ணாடிகளும்
துருவேறிய ஆணிக்கூர்களும் காவல்நின்ற
அரண் சுவர்களைத் தாவி உன்னை வந்தடைந்தேன்.
மாடவிளக்கின் திரிகுறைத்து இன்னும்
இரவாக்கி வைத்திருந்தாய் நீ...
சொட்டு வெளிச்சத்தையும் ஊதி அணைத்தோம்...

என்னை விசுவாசங்கொண்டிருந்தாய்

காதலும் கலவியும் அறம்பிறழ்ந்தது
கீழைத்தேய ஒழுக்கம் மரபு சிதைய
குறிகள் கலந்தன கொண்டாடினோம்...
கொண்டாடினோம்...
அதற்கப்புறமாய் வந்த நாட்கள் நீளவும்
மாடவிளக்குக்கு எண்ணெய் இடவில்லை நீ...

நீ விசுவாசம் கொண்டிருந்தபடி
நான் பாத்திரமானவானயிருந்தேன்
நூற்றியொருவீதம் கலவினேன்...

தாவல் ஒன்றில் ஊரொன்று கடக்கும்
கால்வலுவை எட்டொன்றும் பெற்றிருந்த காலம்.
காதல் ஒரு சாகசமாயிருந்தது.

No comments: