Friday, March 11, 2011

தூரன் குணா கவிதைகள்

கூகிள் எர்த்

குதிரையில் பயணித்தால்
ஒரு இரவு
ஒரு பகல்
நீளும்
அங்கே
என் உயிர்க்கூடு இருக்கின்றது
பச்சையக்கடலின் அலைகள்
காற்றில் அசைந்துகொண்டிருக்கின்றன
இந்தப் பெரு நகரத்தில்
என் கணிப்பொறியில்
கூகிள் எர்த்தை நான் இயக்குகிறேன்
அதில் ஒரு
சிறு நகரத்தை அடையாளங்கண்டு
சிற்றூரை அடையாளங்கண்டு
நகர்மயமாகிக்கொண்டிருக்கும் எனது கிராமத்தின்
கான்கீரிட் உச்சிக்கூரைகளைக்
காண்கின்றேன் -அங்கேயிருந்து
எனது கிராமத்திற்குப் பிரியும்
சாலையைக் காண்கிறேன்
கிராமத்திலிருந்து
தோட்டத்திற்கு நீளும் இட்டேரியைக் காண்கிறேன்
நடந்த ஒற்றையடிகள்
கோடாய் நீள்கின்றன
கனவுகளின் கூட்டுப்புழுக்கள் நிறைந்த
நிலத்தைக் காண்கிறேன்
வீட்டின் உச்சிக்கூரையைக் காண்கிறேன்
தென்னைகளின் இலைகளைக் காண்கிறேன்
மாட்டுக்கொட்டிலின் வெண்ணிற ஆஸ்பெஸ்டசைக் காண்கிறேன்.
மலங்கழித்த வேலியோரங்கள்
தெளிவாகத் தெரிகின்றன
காமத்தின் திவலைகள்
சிதறிய மறைவிடங்களும்
ஆனால் எனக்குத் தெரியும்
அங்கே சில துயருற்ற ஆன்மாக்கள்
அலைகின்றன

அவற்றை மட்டும்
கூகிள் எர்த்தால்
மையப்படுத்தமுடியவில்லை.

தஸ்தாவெஸ்கியின் வாள்

பகலின்
சிற்றிரைச்சல் மிகுந்த குடிநிலையங்களில்
தஸ்தாவெஸ்கியின் நண்பர்கள்
போதை கனிந்த கண்களோடு
வாழ்வினோடு சூதாடுகிறார்கள்
குற்றமோ
ஒரு நாய்க்குட்டியாய்
காலைச் சுற்றுகிறது
அள்ளியெடுத்து வருடி
அதற்கொரு முத்தமிடுகையில்
கண்ணோரங்களில் துளிர்ப்பது
அறத்தின் நீர்முகம்
மலரைப்போல் நோய்மை
இதயத்தில் பூத்திருக்கையில்
மரணமோ
வரிசையில் நிற்கவைத்துப் பார்த்துவிட்டுக்
கலைந்து போகச் சொல்கிறது
தஸ்தாவெஸ்கியின்
நண்பர்களுடைய காதலிகளோ
ஆண்களேயற்ற
வேறொரு பிரதேசத்தில் இருக்கிறார்கள்
ஏதொன்றும் செய்யவியலாமல் வெகுண்டு
குடிநிலையத்தை விட்டு வெளியேறி
பனியாலான
பளிங்கு நிற வாள் உயர்த்துகையில்
வெளியே உக்கிரமாக எரிகிறது
வெயில்.

புத்தனின் முப்பது வயது ஆண்குறி

இன்று
முதுகெலும்பற்ற ஆண்குறி
புழுவைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்னும்
மிச்சமிருக்கும் வாலிபத்தின்
ஆரம்ப வசந்தங்களில்
எல்லா அதிகாரங்களின் கயமையை
கொண்டிருந்த
அது விறைத்திருக்கும்போது
பைத்தியம்
நான் வாளேந்தியிருந்ததாகவே நினைத்திருந்தேன்
ஆனால் காமம்
தசையைவிட
அதன் நிழல்களிலிருக்கிறது
என்பதை அறியத்துவங்கியபோது
அதற்கு எலும்புமில்லையென்பதை
நானும் அதுவும் அறிந்துகொண்டோம்
புழுவானது நாகத்தைப்போல் சீறும்போது
அதன் துயர்களை
ஏந்திக்கொள்ளும்
ஆற்றுப்படுத்தும்
யோனியின் தாய்மை
என் கண்களிலிருந்து விரியும் உலகில்
எங்குமேயில்லை
கனவு மைதுனங்கள் சலித்துவிட்ட
நேற்றைய இரவின்
பௌர்ணமி ஒளியில்
என் ஆண்குறியை
ஒரு கிடாராக மாற்றும்போது
இந்த உலகில் உடல்கள்
தசைகளால் படைக்கப்படவேயில்லை என்பதே
என் ஞானமாக இருந்தது.

No comments: