Friday, March 11, 2011

இலா கவிதைகள்

வாழையிலைப் பந்தி

காற்றின் இடைவெளியில்
நிலவை ஒளித்து வைத்தேன்

கையகல வட்டத்திற்குள்
வாழையிலைப் பந்தி விரித்து
வகைவகையாய்ச் சமைத்து
என்னை நிரப்பி
என் வெளியும் நிரப்பினேன்

சுழலும் அகலின் சுடரைத் தொட
கண்களில் புன்னகையோடு
சட்டென்று குதித்து
நிலவின் மீதேறி
அமர்ந்துவிட்டேன்

கால்படாது

காப்பிக் கோப்பைக்குள்
எட்டிப் பார்க்கிறேன்
இன்னும் ஒரு சொட்டுக்காக

எட்டிப் பார்க்க முடிவதில்லை
கால்படாது
கரையில் நிற்கையில்

கருப்பு நிழல்

பென்சில் கூர்முனையின்
கருப்பு நிழல் அலைஅலையாய்
சதுரங்கச் சிப்பாய்களின்
தலைமேல் விழுகையில்
கிழிந்து கம்பி மேலாடிய காற்றாடி
பறக்கும் விமானம் மீதேறி
அமர்ந்துகொண்டது

செர்ரி மரம்

வாசல் செர்ரி மரத்தில்
இரண்டு பனிக்காலங்களாக
விரல் மடிப்புள் அடங்கும்
சிறு குருவியின் மாளிகை

இந்தப் பனி முடிந்தது
பூக்கள் மலர்ந்தன

காணாத குருவி
காலிக் கருப்பை

கவிஞரும் ஓவியருமான இலா, கலிபோர்னியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கவிதைகள் நவீன விருட்சம் இதழிலும் சொல்வனம் இணையத்திலும் வெளிவந்துள்ளன.

No comments: