Friday, March 11, 2011

சிங்களக் கவிதைகள் தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

மஹேஷ் முணசிங்ஹ

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமைமிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா

பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்


பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

மரித்தோரின் திருநாளில்

ஜயந்த களுபஹன

இன்று உயிர் நீத்தோர் தினம்
என்னை நினைத்து நீ
கதறும் அழுகையின் ஓசையும்
எனக்குக் கேட்டது

நீ அழுததைப் போலவே
வானம் அழுதது
மின்னல் வெட்டி வெட்டி
பூமியை அதிர வைத்து அதிர வைத்து
துயரம் சொன்னது
வெண்முத்துக் குடை பிடித்து
நான் நடந்து போனேன்

நாங்கள் நடந்துபோன சாலையில்
உன் பாதச்சுவடு தேடினேன்
இரயில் நிலையப் பாலத்தின்
ஈரப்பாசி படிந்த
படிக்கட்டுகளின் மேல்

திருவாணைக் கல்லிருக்கும்
ஒற்றையடிப்பாதையில் நடந்துசென்று
நான்...
எனது கல்லறையருகில்
முழந்தாளிட்டேன்
விடையளிக்கும் பூச்செண்டை வைத்தேன்

எனதே எனதான விழிநீர்த் துளி
எனது கல்லறையின் மீதே
வீழ்ந்து சிதறியது
குளிர் மழைத்துளி போல

‘ஐயோ அவனிருந்திருந்தால்
இந்த உலகம் முழுதும்
என்னைப் பற்றி
காதலுடன் கவிதை எண்ணங்களை
விதைத்திருப்பான்
தாரகைத் துண்டுகளைப் போல’

நீ அழும் ஓசை
எதிரொலிக்கிறது
விம்மலுடன்

அன்பான மனைவியான
உன் துயரம்
வெகு தொலைவிலிருந்து கேட்கிறது
சோக கீதத்தின் தாளத்துடன்

இடம்பெயர் முகாமிலிருந்து

சுபாஷ் திக்வெல்ல

அந்தகாரத்தில் மூழ்கிப்போன
சாபமிடப்பட்ட இரவொன்றில்
நெற்றிப் பொட்டை எடுத்து
நிலத்தில் போட்டு மிதித்தேன்

சாட்சிக்காக எஞ்சிய
ஒரே ஒரு இதயமும்
நெஞ்சு வெடித்துச் செத்துப் போயிருக்கும்
தடயங்களை விட்டுவைக்காமல்
மணாளப் பறவைகள்
இன்னும் பறக்கின்றன
கூந்தல் கற்றைகளுக்குள்
விரல்களை நுழைவித்தபடி

முகாமின் முள்வேலியில்
விஷக் கள்ளிகள் மலரட்டும்
தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு
முள்ளின் விஷம் உணர்த்தட்டும்

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத்
தங்கம்மா சொன்ன கவிதை

தர்மசிறி பெனடின்

முதியவளான என்னில்
துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி
என்ன தேடுகிறாய் பிள்ளையே
வெடிப்புக்கள் கண்டு பால் வறண்ட மார்புகளன்றி
வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

வெடிக்கக் கூடியவை அனேகம்
பலவீனமான என் நெஞ்சுக்குள் உள்ளன
தென்படாது உன் இதயத்துக்கு அவை
நானும் உன் மத்தியில் இன்னுமொரு தாய்தான்

உன் புன்சிரிப்பைக் காணவென
பாசத்தின் ஈரத்தை நிரப்பி
உனை நோக்கிப் புன்னகைக்கிறேன்
உனது வதனத்திலொரு மாற்றத்தைக் காண இயலாவிடினும்
இச்சீருடையைக் களைந்ததன் பின்னர்
எப்பொழுதேனுமுனக்கு
புன்முறுவல் தோன்றுமென்பது நிச்சயம்

இடம்பெயர்ந்தவர்களின்
முகாமிலிருந்து எழுதுகிறேன்

மாலதீ கல்பனா எம்ப்ரோஸ்

அன்பின் சுந்தரம்,

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன
ஏழை வானத்தின் கீழ்
அந்தகார இரவு
முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது
ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே
எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென
உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி
அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

அன்றைய நள்ளிரவு இருள்
பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு
அப்பா இல்லாமல் போன காலம்
குஞ்சுகளுக்கு யாருடைய காவல்

அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர்
வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள்
ருசி தானே இந்த (சிறை) உணவு
வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் சுவை உணவு

புள்ளினங்கள் பறந்தாலும்
பாடல்கள் இல்லை அவையிடத்தே
பூக்கள் மலர்ந்தாலும்
மிதிபட்டுச் சிதையும் அக்கணமே
இழுத்துப் பிடித்த வீணையின் நரம்புகள்
முன்பெழுந்த இன்னிசையை இனியெழுப்பாது

தப்பித்தோடினால் மீளவும்
முட்கம்பிகளில் சிக்கி விட நேரிடும்
விழி உயர்த்திப் பார்த்தால்
மீண்டும் தலைதூக்க முடியாமல் போய்விடும்
ஒரு துளி விழிநீர் சிந்தினால்
முழுப் பரம்பரையும் சாம்பலாகும்

அதனால் உணர்ச்சியற்றிருக்கிறேன்..
எவர்க்கும் கேட்டுவிடாதபடி சுவாசிக்கிறேன்..

நீங்கள் அங்கு உறங்கும் வரை.

இப்படிக்கு,
உங்களுடைய,
ராதா.

சுதந்திரம்

பிரகீத் எக்னெலிகொட

சுதந்திரம்
சுதந்திரம்
சுதந்திரம்
ஓர் தினம் மனிதனொருவன்
பூமியிலிருந்து
ஆகாயம் நோக்கி எழுந்து நின்றுரைத்தான்
அனைவரினதும் சுதந்திரத்தைக் காக்கும் பணி
வரலாற்றிலிருந்து
தனக்கே வழங்கப்பட்டுள்ளதென
கட்டளையைப் புறக்கணிப்பவர்
எவராக இருப்பினும்
சுதந்திரத்தின் பெயரால் அவருக்கு
மரணம் உரிமையாகுமென்றும்
முழங்கினான் அவன்

ஆயுதங்கள் மோதும் சப்தம் கேட்கிறது
யுத்தப் பேரிகை முழக்கங்கள்
திக்கெங்கும் ஒலிக்கின்றன
உயிர்கள் மண்ணில் சாய்கின்றன
நீ எதற்காகச் சாகிறாய்?
நீ எதற்காகக் கொல்கிறாய்?
சண்டையிட்டுக்கொண்டிருந்தவர்களை நோக்கிக்
கேட்டானொரு மனிதன்
பதிலுரைத்தனர் அவர்கள்
சுதந்திரம் - சுதந்திரம்
குழுக்களாய்க் கூடும் சுதந்திரத்துக்காக
ஆயுதம் தரித்திடும் சுதந்திரத்துக்காக
முதியவனே அறிந்துகொள் இன்றாவது
குழுக்களாகக் கூடுவதற்கும் ஆயுதம் ஏந்துவதற்கும்
வரலாற்றில் கூட சுதந்திரமிருப்பதை.
ஆனாலும்
சுதந்திரம் இருக்குமிடத்தில் கிளர்ச்சிகளிருக்குமோ
கிளர்ச்சி தோற்றுவித்த சுதந்திரமுண்டோ
சுதந்திரம் இருக்குமிடத்தில் ஆயுதமேந்துவரோ
ஆயுதங்களேந்துகையில் சுதந்திரம் இருக்குமோ
ஆயுதங்களேந்த சுதந்திரம் இருப்பின்
மரணத்துக்கும் சுதந்திரம் இல்லையோ
கிளர்ச்சியும் சுதந்திரமும்
ஒன்றல்ல இரண்டென
சுதந்திரத்துக்காக அணிதிரள முடியுமெனினும்
அணி திரண்டிடச் சுதந்திரம் இல்லாததை
அறிந்திருத்தல் வேண்டும் நாம்

இருந்தனர் இரு குழுவினர்
இரு திக்கில் பிரிந்து
பித்தளைக் குண்டுகளைக் கரங்களில் கொண்டு
தங்களுக்கு வரலாற்றிலிருந்து அளிக்கப்பட்ட
அனைவரினதும் சுதந்திரத்தைக் காப்பதற்கு
நிராயுதபாணி பொதுமக்களிடம்
காண்பிக்கின்றனர்
பித்தளைக் குண்டுகளின் ஸ்பரிசத்தை
கொல்லப்பட்டவர்கள்
சுதந்திரத்தின் வீரர்களெனவும்
சுதந்திரத்தின் துரோகிகளெனவும்
குரல்கள் எழும்பின

திடீரெனப்
பித்தளைக் குண்டொன்றும் எழுந்து நின்று
இவ்வாறு சொன்னது
“உலகில், நேர்மையாக வேலை செய்யுமொருவன்
நான் மட்டுமே
துப்பாக்கி வாயிலிருந்து நேரான பயணம்
எனது பயணம் என்னாலேயே
எனது உள்ளம் சுதந்திரமானது
எனது உள்ளம் உறுதியானது
பலம் வாய்ந்தவன் - பலவீனமானவன்
உயர்சாதி - தாழ்ந்த சாதி
பார்க்காமல் - எவரையும்
ஊடறுத்துச் செல்கிறேன் - தசைகளை
மரம் செடிகளை எரித்துக் கொண்டு
உயிர்க் கொடிகளை அறுத்துக் கொண்டு
எனது சுதந்திரத்தைத் தேடி
நிற்காமல் - முன்னே போகிறேன்
எனது உள்ளம் - உறுதியானது
எனது உள்ளம் - சுதந்திரமானது
சுதந்திரத்தின் பிரதிவிம்பத்துக்கு நிகராவேன்
அரசியல் பலம் வளர்வது
துப்பாக்கிக் குழல்களினூடாகவே

o

பிரகீத் எக்னெலிகொட - இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவராக, லங்கா ஈ நியூஸ் வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதிவருபவர். நாட்டின் மிக நெருக்கடியான சூழ்நிலைகளின்போதும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பகிரங்கமாகப் பல நூறு கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியதால், தைரியமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரராகவும் வெளிப்படையான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். 2010, ஜனவரி 24ஆம் திகதி, இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன், இரவில் தனது வீடு நோக்கி வந்த பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார். வீட்டினருகே நிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடற்ற வெள்ளை நிற வேன் ஒன்று அவரைக் கொண்டுபோனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைக் கண்டுபிடிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியில் எந்த முன்னேற்றத்தையும் இதுவரையில் காண முடியாமலுள்ளது.

No comments: