Friday, March 11, 2011

கோகுலக்கண்ணன் கவிதைகள்

தொலைவில்

குற்றவாளிகளுக்கும்
எனக்கும்
இடையே
கண்ணாடித் திரைகளோ
காகித வனங்களோ
சுவர்களோ
அவர்கள் எல்லாவற்றையும் ஊடுருவி
அருகே வர விழைகிறார்கள்
கறுத்துவரும் கையால்
அவர்கள் கரங்களைப் பற்றவும்
தோளில் சாய்த்துக்கொள்ளவும்
தயாராய் இருக்கிறேன்
என் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்க வேண்டாம்
ஆனால் எனக்குத் தெரியும்
அவர்கள் என்னை முகர்ந்து பார்க்கவே விரும்புகிறார்கள்
அதில் என்ன வியப்பு!
ஒரு நாள் கனவில் வந்த மனிதரிடம்
மிகவும் மோசமான வாசனை வீசியது
என் மூக்கு முகத்திலிருந்து கழன்று விழுந்துவிடும் என்று பயந்தேன்
எப்படியாவது அந்த இடத்திலிருந்து அகன்றுவிடவே விரும்பினேன்
கனவென்னும் இடத்தை விட்டு விலக முடியவில்லை
கடவுளைப் போலத் தொலைவில் இருக்கவே விரும்பினேன்
குற்றவாளிகளைப் போலவும்.

நனைவது

நானும்
நீயும்
ஒரே மழையில்
நீ
குளிருகிறது என்றபோது
நானும்
குளிருகிறது என்றேன்
ஒரே மழை
ஒரே நேரத்தில்
குளிர்விக்கிறது
வெவ்வேறாய் இருக்கும்
ஒன்றை

நிழலைத் தேடியவன்

அவனுடைய ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு நிழல் இருந்திருக்கிறது
வெவ்வேறு இடங்களில் அவை தங்கிவிட்டன
கைவிடப்பட்டதால் அல்ல
முடிவற்றுத் தொடரும் பிரயாணத்தில் அயற்சியுற்ற யாத்ரீகர்கள் அங்கங்கே தங்கிவிடுவது போல்
முன்சென்றுகொண்டே இருப்பவன்
ஒரே சமயத்தில்
முன் செல்லும்பொழுது
பின்னாலும் செல்கிறான்
சதா நிழல்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்
நிழலற்ற வெற்றிடங்கள் அவனைக் குழப்புகின்றன
ஒரு முறைக்கு இருமுறை இடங்களைச் சரிபார்த்துக்கொள்பவனுக்குப் புரியவில்லை
நிழல்கள் எங்கே போகக்கூடுமென
அப்போது பார்க்கிறான்:
ஒரு தாவலில் பல காலடிச்சுவடுகளைத் தொடரும் மிருகமொன்று
நிழலைத் தின்பதை
ஆயிரம் நிழல்களை ஒரே விழுங்கலில் அழித்துவிடுவதை
நிழலைத் தின்னும் மிருகமே
என்னை மட்டும் ஏன் மீதம் வைத்தாய்
என்று கேட்டான்
மெல்ல உறுமிய மிருகம் சிந்தியது ஒரு கண்ணீர்த் துளியை
அதில்
மூழ்கிக்கொண்டேயிருக்கிறான்
அவனும்
இன்னும்
அவனும்.

புதிதாய்

புத்தம் புதியதாக
சுவை அறியாத
பழம் ஒன்று
உணவு மேசை மேல் இருந்தது
கையில் எடுக்கும் சிறுமி
தோலைத் தடவிப் பார்க்கிறாள்
பிறகு பழத்தை மெல்ல முகர்ந்து பார்க்கிறாள்
கண்களை விரித்துக்கொண்டு
அவளுக்குப் புதியதாய் இருக்கிறது
துடைத்துவிட்டது போல் வெளியே இருக்கும் வானம்
வசந்த காலப் பறவையின் அழைப்பு
சன்னல் வழி உள்ளே நுழையும் வெளிச்சத்தின் ஒரு விரல்
உணவு மேசை மேல் ஏறி அவளை நோக்கி நீள்கிறது
வெளிச்சத்தின் விரலுக்கும்
தன் விரல்களுக்கும்
இடையிலிருக்கும் பழத்தை
மாறி மாறிப் பார்த்தபடி இருக்கிறாள்

நீருக்குள்

நீர் வாசலில் நிற்கிறோம்
நீருக்குள் நுழைவது எப்படி?
நீரின் கதவு எங்கே?
யோசனையில் காலம் கழியும்போது
நம்மைத் தொட்டுப் போகும்
ஒளி
நீர்க் கதவின் சாவியாய்
நீளுகிறது
ஒளியை எப்படித் தொடருவது
என்று எண்ணத்தில் நிற்கும்போது
புன்முறுவலாய் நெளிகிறது
நீரில்
ஒளி

நீர்க்குழந்தைகள்

குழந்தைகள் விளையாடுகின்றன
தனித்தனியாய்
ஒன்றுடன் ஒன்று கூடி
விதவிதமாய் விளையாடுகின்றன
பக்கத்தில் இருக்கும் என்னைக் கவனிக்காமல்
இருக்க முடியாது
குழந்தைகளை உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்
அப்போது ஒவ்வொரு குழந்தையும் நீராய் மாறித் தரையில் பரவுகிறது
எவ்வளவு சிறு அலைகள்
எவ்வளவு குமிழிகள்
எவ்வளவு தளும்பல்கள்
யார் அள்ளிப் பருக
யார் நனைய
என் பாதங்களைச் சுற்றிச் சுழித்தோடுகின்றன
நீர்க்குழந்தைகள்?

No comments: