Friday, March 11, 2011

சே. பிருந்தா கவிதைகள்

நீ யாரோவாகிய தினம்

இதென்
இலையுதிர் காலம்
கனவுகள்
வர்ணமற்று
ஆபத்தைப் பகிராத
தனிமை
பிணவறையில் தேடிச் சலித்த
நண்பனின் துர்மரண முகம்
நோய்வாய்ப்பட்ட குழந்தை
உடனிருக்க -
யாருமற்ற நான்
நீ யாரோவாகிய தினம்
அதேபோல் உலகம்

எனது தோழியின் மகள்

நான் பேசுவதாக,
தோழி தன் மகளிடம்
தொலைபேசியைக் கொடுத்தாள்
அதொரு
அற்புதம் நிரம்பிய தருணம்
‘ஹலோ’வுக்குப் பதிலாக
‘ம்யாவ்’ என்றேன்
அன்றிலிருந்து நான் அவளுக்கு
Pussey cat Aunty
நேரில் சந்திக்கையில்
ரோஜாக்களோடு -
பிறகு Rose Aunty ஆனேன்
அவளின் கேள்விகள் நூதனமானவை
கவலைகள் ரஸமானவை
- ரயிலை யார் கழுவுவார்கள்
- பாசிபடர் குளத்தை எப்படி சுத்தம் செய்வது
- ரோட்டோரச் சிறுமி ஏன் புத்தகம் விற்கிறாள்
சிறுமியின் அம்மா-அப்பா என்னவானார்கள்
- ஆடு மாடுகள் மழையில் நனையுதே
சளி பிடிக்காதா
- அவளுடைய கை
அம்மாவினுடையதைவிட
ஏன் சிறியதாக இருக்கிறது
- சோறு சாப்பிட்டால்
வயிறுதானே வளரனும்
கையும் காலும் எப்படி வளருகிறது
இந்தக் கவிதை
அவளின் முடிவுறாக் கேள்விகளோட
இப்படி முடிகிறது-
அவளின் அப்பா
ஏன் வீட்டுக்கே வருவதில்லை?
சாமிக்குப் பிரியமானவர்களைத்
தன்னுடன்
அழைத்துக்கொள்வார் என்றால்
நாமெல்லாம் சாமிக்குப்
பிடிக்காதவர்களா?

சாத்தானிடமிருந்து கடவுளுக்கு

கால் இடறி விழாமல்
குருட்டுப் பிச்சைக்காரனைத்
தொட்டு நிறுத்துபவர்
பைத்தியக்காரியின் கர்ப்பத்துக்குப்
பொறுப்பேற்றுக்கொள்பவர்
சைகைகளில் காதலித்த பெண்ணை
‘தங்கை’யென்று சொல்லாதவர்
சாலையோர மரணங்களைச்
சகியாதவர்
சிறுமிகளை மகளாகவும்
நடத்தத் தெரிந்தவர்
சடலத்தின் முன்
குழந்தைக்கான வைத்தியப் பணத்தில்
குடித்துவிட்டதாக ஒப்புக்கொள்பவர்
ஒரு நொடி பயணிக்கிறார்
சாத்தானிடமிருந்து கடவுளுக்கு

No comments: