Friday, March 11, 2011

கவிதைகள் பா. வெங்கடேசன்

கரிக்கும் பெண்

கரிக்கும் பெண்ணுக்குத் தன் காதலைச் சொல்லத் தெரியவில்லை
உன்னத இசையிலிருந்தும் மகா உன்னதக் காவியங்களிலிருந்தும்
கற்றுக்கொண்ட வார்த்தைகளென்று எதுவும்
அவள் கைவசமில்லை
பாறையிடுக்குகளில் பதுங்கியிருக்கும் பண்டாரங்களின் பார்வையில்
பிரசன்னமாகக்கூடும் அது என்று மட்டுமே வர்ணிக்கத் தெரிந்த அவள்
உழக்கினுள் சேகரமான விதையாய்
கழுத்தையுயர்த்தி உன்னை முத்தமிடும் பொழுதுகளில்
தன்னுள் துடித்துக்கொண்டிருக்கும் உயிரின் ஆர்ப்பரிப்பையே
உனக்குள் கடத்திவிடத்
தன் குதிகாலில் எழும்பி நிற்கிறாள்
ஸ்தனங்களின் தொடுவிசையில் திறக்கும் உதடுகளின் பிளவிலிருந்து
நீ உறிஞ்சியெடுத்துக்கொள்வதெல்லாம்
உனக்கான இன்னொரு முத்தத்தை மட்டுமேயென்றும்
குறைபட்டுக்கொள்கிறாள்
(என்னுள் நீ இறங்கும்போது கர்த்தர் தேவைப்படாத சீமோனாக
நான் உன் வலையை நிரப்பியனுப்புகிறேன்தானே)
மேலெங்கும் துளிர்த்துத் ததும்பும் உப்பை அருந்தக் கொடுத்துத்
தூய்மையின் மகத்துவத்தை உன் நாவிலிருந்து
அழித்துவிடும் முனைப்புடனே அவள் உடல்
எப்போதும் திறந்துகொள்கிறது
அதன் கரிப்பை நீ உச்சரித்தவுடன்
நாபியின் ஆழத்தில் அந்த வார்த்தை
ஒரு குட்டி மீனாகி நீந்த வேண்டுமேயென்றும்
அது கவலைப்படுகிறது
(இதற்காகவே உன் நாநுனியை
அங்கே நீந்தப் பழக்குவதாயும் அவள் பிதற்றுகிறாள்)
அஸ்தி கரைக்கப்பட்ட நதிகளில்
அரைகுறைப் பிணங்களை மலர்களாய்ச் சுமந்துகொண்டு
அலைந்தவொரு வெக்கைப் பருவத்து இரவுப் பயணத்தின்போது
(அப்போது நீங்களிருவருமே
வெவ்வேறு தேசங்களின் உப்பரிகைச் சன்னல்களுக்கடியில்
வெறுந்தரையில் உங்கள் மார்புகளைப் பதியப் படர்த்தியிருந்தீர்கள்)
முத்தங்களின் பொட்டொலியை
அலைவரிசையில் கடத்தப்
பிடிவாதமாக மறுத்துவிட்ட அவள்
(பின் இன்னொரு காய்ச்சல் காலத்துப் பயணத்தின்போது
தன் தோளின்மேல் ரகசியமாய் முத்தமிட உன்னை அனுமதித்தவளும்
நீலவுடலின் சாரத்தைக் காற்று உறிஞ்சிச் செல்வதைச்
சரியாய்ச் சித்திரப்படுத்தியவனென்று சிலாகித்துச் சொன்னவளும்
அதே பைத்தியக்காரிதான்)
பிரசவ காலத்தின் போதையூசி
தன்னுள் ஏற்றப்பட்ட அனுபவம்தான் காதலென்று
நீ திடுக்கிடும்படி அறிவித்தது
உனக்கு நினைவிருக்கிறது
ஆனால் வாத்ஸல்யத்தின் விரிவுமுன்
காமத்தின் விதிகளைத் தளர்த்திக்கொள்வதில்
தவறேதும் இல்லையென்றும் முனகும் அவள்
(காதலைத் தன் வாய்க்குள் உச்சரிக்க வேண்டும்போதெல்லாம்
யோனிக்குள் செவிகளைப் பொருத்த முயற்சிக்கும் உன்னை)
தன்முன் மண்டியிடவும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை
(நுரைத் தலையணைகளை இடுப்பிற்கு முட்டுக்கொடுக்க
நிரப்பியிருக்கும் தன் சிம்மாசனத்தில்
நீயிருக்கும் வேளைகளில் அவள் அமர்வதுமில்லை)
புத்திசாலியென்று தன்னை நினைத்துக்கொண்டிருக்கும்
கரிக்கும் பெண் உண்மையில் ஒரு முட்டாள்
சமயம் அதிகமில்லையென்றும்
காதலைச் சொல்லுமொரு கடைசிச் சந்தர்ப்பத்தைத்
தன்னால் வென்றுவிட முடியுமாவென்றும் அவள் தவிக்கும்போது
(கரிக்கும் கரங்களால்
மணல்வெளி முழுவதும் தான் எழுதிச் செல்லும் கவிதைகளின்
ஒரு வரியைக்கூட ஒத்துக்கொள்ளும்படி
என்றுமே உன்னைக் கெஞ்சியிராத அகம்பாவியான அவள்)
கருணையின் ஈரப்பதம் கசியும் தன் மையத்தின் அடங்காத புயற்சுழியை
அவசரப்பட்டு உன் சாகஸத்தின் ஆடுகளமாக
அனுமதித்துவிடுகிறாள்.

அலைபேசும் துயரயிசை

அவள் தன் துயரங்களை
அரற்றிக்கொண்டிருக்கிறாள்
ஏதோவொரு தோல்வியின்
மயக்கத்தின்
போதையின்
கவனமற்ற வார்த்தைகளை
மனப்போக்கில் வாரியிறைத்தபடி
ஆனால் உண்மையில்
முடிவற்ற சஞ்சாரத்தை மட்டுமே விரும்பும் ஒரு
ஆலாபனை அது
உன் கனவில் நீ கேட்க விரும்பிய இசை
அலைபேசியில் வழிந்துகொண்டிருக்கிறது
உன் செவியுறலின் நதியில் நீந்தவும்
உன் மௌனத்தின் மடியில் படரவும்
நீ அதில் வெறுமே உறைந்திருக்கவும்
மட்டுமே அது பாடப்படுகிறது
உன் இரக்கத்தின் கொழுத்த விரல்களைத்
தவிர்க்கும் மென்மையுடன்
உன் மேதமையின் அர்த்தமாக்கலுக்குள்
சிக்கிவிடாத புதிர்மையுடன்
இயலாவிடில் அது இப்புவியில்
யாராலும் ஒருபோதும் கேட்கப்பட்டிராத
ஒரு புனிதப் பாடலாகி
அலைபேசியைத் துண்டித்துவிடுகிறது.

இந்திர பிம்பம்

முழுவதும் உதடுகளாலான உன்னை
உன் குரலைக்கொண்டு தனக்காய்
வனைந்துகொண்டிருப்பதாய் அவள் சொன்னாள்
தினமும் அதனுடன் உறவாடியபடியே
நதிக்கரைக்குச் செல்வதும்
அமிழ்த்தி அதில் நீர் சேந்துவதுமாகப்
பொழுது கழிந்துகொண்டிருக்கிறதென்றாள்
பிறகு சில கனவுகளைச் சேமித்துவைப்பதற்கும்
பாடல் வரிகளாக அவற்றை மீட்டெடுப்பதற்கும்
சமயங்களில் முத்தமிடுவதற்கும் அது
மிகவும் பயன்படுகிறதென்றாள்
மேலும் பறவைகள் கலைந்து சென்றவொரு
கொய்யா மரமாயும்
மனிதர்கள் கலைந்து சென்றவொரு
கடற்கரையாயும் அதை மாற்றி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவும் முடிகிறதென்றாள்
அதிகாலைகளில் நதியின் எதிர்க்கரையிலிருந்து
உன் நடுங்கும் பிம்பத்தைச் சுமந்துவரும்
அலைகளை அவள் கவனியாமலில்லை
வனைந்தது கரைந்துவிடுமென்கிற
சாபம் அவளை விடுகிறதாயுமில்லை.

உருமாற்றம்

சிறகுகளின் மீதான ஆசை
தினமும் அவளை வதைக்கிறது
குதிகால் வெடிப்புகளிலும்
நகக்கண்களிலும்
அழுக்கில்லாத தொலைவிற்கும்
(அல்லது நகங்களும் குதிகால் வெடிப்புகளும்
இல்லாத ஒரு தேசத்திற்கு)
வியர்வையும் மாதவிடாய் ரத்தமும்
ஒழுகாத உயரத்திற்கும்
(அல்லது சுரப்பியும் யோனியுமற்ற
அந்தர வெளிக்கு)
தன்னைக் கொண்டு செல்லும்
ஒரு ஜதைச் சிறகுகளைக்
காய்கறிகளுக்கிடையிலும்
பாத்திரங்களினடியிலும்
அவள் தேடித் தவிக்கிறாள்
மாறாகத் துயரங்களின் பளு தன்னை
இன்னும் தரைதட்டாத பள்ளத்தை
நோக்கியே இழுக்கிறது என்று
உன்னிடம் புலம்புகிறாள்
தேவதை என அவளை நீ
விளித்தவொரு மாலையிலிருந்து
அவள் பாடு இவ்விதமாய்க் கழிவதை
நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
அவ்வப்போது குழந்தையின் பீத்துணியைத்
தன் தோள்களின் மீது
ஒட்டவைத்துக்கொண்டு
குழந்தைகளும் தேவதைகளின் உலகத்தைச்
சேர்ந்தவர்கள்தானே என்று
கேட்டுவிட்டு உன் பதிலுக்காக
அவள் ஆவலுடன் காத்திருக்கிறபோதெல்லாம்
மிகத் தாமதமாக உன் கண்களில்
கண்ணீர் பெருகுகிறது
அவளை நீ
அந்தப் பெயரால் அழைத்திருக்கக் கூடாது.

நடைமேடைப் பூ

சூடவாடிக் குன்றுச்சித் தொலைநோக்கியின்
பார்வைக்குள் சிக்கிவிடக்கூடிய தொலைவில்
இல்லை அவள் வசிக்கும் நகரம்
(சூடவாடி அத்தனை உயரமில்லை)
அந்த நகரத்திலிருந்து புறப்பட்டு
இங்கே வரும் புகையூர்தியில் ஒருமுறையேனும்
அவள் நினைவாகப் பயணித்துப் பார்க்க
நீயும் விரும்பியதில்லை
(அது அவளுக்கு எதிர்திசையில் நகர்கிறது)
ஓய்வுபெற்ற முதியவர்களின்
உரையாடல்கள் கசகசக்கும் மாலைநேரத்தில்
எதிர் நடைமேடையின் மனிதச் சித்திரங்களை
அழித்துக்கொண்டே நகர்ந்து செல்லும்
இந்தப் புகையூர்தியை எப்போதும் கவனித்தபடி
இங்கேயே தங்கியிருக்கிறாய்
(அப்போது அலைபேசியில் அவள் சேய்மையை
உறுதிப்படுத்திக்கொள்ள நீ விரும்புவதில்லை)
அழிக்கவேயியலாத சித்திரப் பூவொன்றாய்ப்
பூத்துக்கொண்டேயிருக்கிறது உன் முகம்
கடல் கொண்ட நகரங்கள் மற்றும்
கடலால் கொள்ளப்படவிருக்கும் நகரங்களின்
மிதக்கும் பின்னணியில்.

இயக்கி காத்திருக்கிறாள்

ஒரு தேர்ந்த பறவையின்
சிறகடிப்பைப்போல அதிகச் சொடுக்கல்களின்றி
மிதந்து உயர்கிறது கலுகொண்டப்பள்ளி மலை
இந்தப் பயணம் இன்னும் சற்று நீள வேண்டும்
ஓ சப்தங்களின் புத்திரனே
ஓ இலட்சியங்களின் வேலைக்காரனே
குரல்களற்ற கொக்குகள் அலைந்துகொண்டிருக்கும்
இந்த வெளியின் மௌனத்தால்
நீ முற்றிலும் விழுங்கப்பட்டவனாகுக
இயக்கி காத்திருக்கிறாள்
அவள் சப்தங்களை விரும்புவதில்லை
அவள் உன்னிடம் இரகசியமாகவே பேசுகிறாள்
எறும்புப் புற்றைப்போல உயரும்
பாதையின் மறைவுகளில் உறையும்
பலிஜர்களும் ரெட்டிகளும்
அவளிடம் மட்டுமே உறவாடுகிறார்கள்
பெண்கள் யாவரும் பால் சுரக்கிறார்கள்
பெண்கள் யாவரும் அங்கை அருளுகிறார்கள்
இயக்கி காத்திருக்கிறாள்
எலிகளும் பல்லிகளும்
தத்தமதாய் சுவீகரித்துக்கொண்ட வளையில்
தன் முலைகளைத் தானே நக்கும்
துருத்திய நாக்குடன் உனக்காக
ஓ வெற்றிகளின் வேட்டைக்காரனே
இங்கென்ன செய்துகொண்டிருக்கிறாய்

No comments: