Friday, March 11, 2011

கவிதை பெருந்தேவி

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றைமரத்தின் ஒரே இலை விழுகிறது.
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை.

விழுந்துகொண்டிருக்கிறது.

மதிப்பு

ஆண்கள்
பெண்கள்
இருபாலர்
உடல்களுக்கு
உடல்களின் நீண்ட உறவுக்கு
ஒரு கொழுத்த வங்கிக்கணக்கு போதும்.

சின்ன முத்தங்களே
தரமுடியாத உறுதிமொழிகளைக்
கேட்கின்றன விலையாக.

ஈயென

பூத்தூவி
நெக்குருகி
உளங்கசிந்து
கண்ணீர் சோர
கரங்கூப்பி
நெடுங்கிடையாய்
வீழாதே
ஏனோ ஐம்புலனும் இல்லை
இல்லை என்ற சொல்லுக்கு.

ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை

நிறக்குழம்புகள் வழிகின்றன
முகத்தின் வளைபரப்பில்.
தொட்டது தரையைச் சிகப்பின் முதல்துளி.

ஆரஞ்சும் மஞ்சளும்
அக்குள்களின் வளைவுகளில் தேக்கம்.

வயிறெலாம் படர்ந்த பச்சை
விரிகிறது புறக்கணிக்கப்பட்டதொரு காட்டில்.

விண்ணேகும் நீலம்,
ஏழு கடல்களில்
இளையதைச் சேரும் இண்டிகோ.

வழிமறிக்கப்பட்ட வயலட்
தெரிவுசெய்கிறது
ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தை.

ஏற்கெனவே
விழியினின்று நெஞ்சில்
இறங்கிவிட்டிருந்த
கருப்பு வெள்ளையை
அறிவோம்
ஒழுக்கத்தின் பேரால்.

ஆகாயத்தின் எட்டாவரி

ஒரு புல்.
உன் விரல் அதில் துளியாய் அமர்ந்திருந்தது.
நான் நெருங்கினேன்.
நீ என் கரங்களுக்கு வந்தாய்.
என் சூரியனை நான் குப்புறக்கவிழ்த்தேன்.

இருட்டு.
புதிரின் கோபுரம் எழும்பியது.
நான் மாடங்களானேன்.
நீ மாடப்புறா ஆனாய்.

வேகம்.
ஒளியின் பாய்ச்சல்ரூபம்.
ஆகாயத்தின் எட்டாவரி
கனவின் தாரை நீ.

விம்மல்.
அதற்கெனைத் தந்தேன்.

இருத்தல் நிமித்தம்

வெளியே போய்விட்டான் வழக்கம்போல
நேரங்கழித்துதான் வருவான் வழக்கம்போல
ஆம்பிளை என்றாலே ஆயிரமிருக்கும்
ஒன்றேயானாலும் ஆயிரம்தானே
உணவுமேசைமேல் சுடுகலனில்
ஆறிக்கொண்டிருக்கிறது இரவு
காத்திருந்தபடியே அசருகிறேன்
பாத்திரங்களை ஒழித்துப் போடவேண்டும்
வருகிறான்
வந்துவிட்டான்
உணவுக்குப் பின் உண்ண
நறுக்க மறந்துவிட்டேன் ஆப்பிளை
அவனுக்கு ரொம்பப்பிடிக்கும்
இதோ
சிறுகத்திதான் என்றாலும் கூர்மை
அறுக்கிறேன்
என் ஒருமுலை துடிக்க இன்னொன்று
அதற்குச் சாட்சியாகிறது
ஏன் என்று கத்துகிறான்
கிறுக்கா என்று கதறுகிறான்
முலைகளுக்குக் கேட்கிறது ஆனால்
அவைகளுக்குக் கேள்விகள் பிடிக்காது
குளியலறையில் முனையற்ற
முலையைக் கழுவுகிறேன்
பாத்திரங்களைக் கழுவப் போடவேண்டும்
அவன் சாப்பிட்டானா
தெரியவில்லை
அல்லது
அக்கறையில்லை
காலையில் எழுந்ததும் கத்தியைக்
கைக்கெட்டாத தூரத்தில் வைக்கவேண்டும்
அதற்குமுன் நன்றாகத் தூங்கவேண்டும்
தூங்கிக்கொண்டிருக்கிறேன்

உரையாடல்

நீங்கள் பேசுகிறீர்கள்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் . . . என விளக்குகிறீர்கள்
. . . . . . . . . . . என வாதிடுகிறீர்கள்
அப்படியா என்கிறேன்
யாவின் நீளம் கண்ணாடி பிம்பம்
அது குறைகிறது கூடுகிறது
. . . . . . . . . . .என முடிக்கிறீர்கள்
என் காலில் சிற்றெறும்பொன்று கடிக்கிறது
குனிந்து எடுத்து நசுக்குகிறேன்
முணுமுணுக்கிறேன்
கதவைச் சற்று மெதுவாக மூடிவிட்டுப் போங்கள்.

No comments: