Friday, March 11, 2011

கவிதை சச்சிதானந்தன் (மலையாளம்) தமிழில்: சுகுமாரன்

கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி

கழுமரத்தை நோக்கிச் செல்லும்
என்னைப் பாருங்கள்
பத்து நிமிடங்களில்
கனவுகள் காலியான என் சிரம்
ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும்
நான் கொலைசெய்தவனின் உதிரம்
எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன்
அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும்
நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது
அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து
நான் அழ வேண்டியிருந்தது
மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான
பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது
பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக்கும்
பாதி கட்டிய வீட்டுக்கும்
பாதி வாசித்த புத்தகத்துக்கும்
பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
நான் திரும்ப வேண்டியிருந்தது
நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிருந்தது
குன்றைக் கடந்துபோய்ப் பெருநாளையும்.
'நான் வந்துவிட்டேன்' என்று நண்பர்களிடம் சொல்ல
நெரிசலான பேருந்திலேறி
பட்டணத்துக்குப் போகவேண்டியிருந்தது
மகள் தன்னிச்சையான பெண்ணாகவும்
மகன் அழத் தெரிந்த ஆணாகவும்
ஆகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது
குளிரிலும் கண்ணீரிலும்
துணைக்குத் துணையாக வேண்டியிருந்தது
இலைகளை விடவும் பூக்களுள்ள
வேனிற்கால வாகைமரம்போல
எனக்கு நினைவுகளை விடவும் கனவுகளிருந்தன
நேற்றை விடவும் வெளிச்சமுள்ள
ஒரு நாளை இருந்தது
கதை சொல்லி மரணத்தை ஒத்திப்போட
நான் ஒரு ஷெஹரசாதே அல்ல
கதைகளின் விருட்சம் இலைகளுதிர்ந்து கழுமரமாயிற்று
’கடைசி ஆசை ஏதேனும் உண்டா? ' என்று
அவர்கள் என்னிடம் கேட்டார்கள்
புல்வெளியில் உட்கார்ந்து காது நிமிர்த்தும்
ஒரு முயலாக வேண்டுமென்று
ஒளிந்திருந்து கீச்சிடும்
ஓர் அணிலாக வேண்டுமென்று
வானவில் பறவையும் தலைமுறைகளின் நதியும்
பூக்காலத்தின் காற்றுமாக
ஆகவேண்டுமென்று
நான் சொல்லவில்லை
அவர்கள் எனக்குக் கொடுத்த இனிப்பில்
மரணத்தின் துவர்ப்பிருந்தது
கழுமரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்
பூனையின் கண்களுள்ள கடுந்துவர்ப்பு
சட்டமியற்றுபவர்களே சொல்லுங்கள்,
தீர்ப்பெழுதுபவர்களே சொல்லுங்கள்
இரங்கக் கூட முடியாத
இந்தத் தீர்ப்புக்காக
நீங்கள் இரங்குகிறீர்கள் இல்லையா?
கொலைக்குற்றத்தின் வெக்கையான தர்க்கத்திலிருந்து
தூக்குத் தண்டனையின் குளிர்ந்த தர்க்கத்துக்கு
எவ்வளவு தூரம்?
கேள்விகளை
பூமியின் பசுமையில் விட்டுவிட்டு
அபராதிகளும் நிரபராதிகளும்
ரத்த சாட்சிகளும் நடந்துபோன
குருதி படர்ந்த இதே வழியில்
நானும் போகிறேன்
நாளையேனும்
ஒருவரும் இந்த வழியில் வரவேண்டியிராத
நாளை உருவாகட்டும்.
நான் போகிறேன்

* பெருநாள் - கிறிஸ்துமஸ்
ஷெஹரசாதே - ‘1001 அரேபிய இரவுக’ளின் கதைசொல்லி.

நன்றி: ஒன்னராடன் (கைதிகளின் உரிமைக்கான இதழ்) மே - ஜூன் 2010

No comments: