Friday, March 11, 2011

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

நான் சொல்கிறேன் வேண்டாம் மக்களே
நீங்கள் சமவெளிக்குள் அகன்று போங்கள்
என்னை விட்டுவிட்டு
கடற்கரை நகரத்தைத் தேர்ந்தெடுத்தது
தவறாகக்கூட இருக்கலாம்
365 நாட்களில் மூணு நாலு தடவையாவது
புயலை நேர்கொள்ள வேண்டியிருக்கிறது
மனதார காலாற நடந்த வழியில்
பெருங்காற்றால் பாதை சேதமுற மணல்
குவிந்திருக்கிறது
கடல் பார்க்க முகமமைத்துக் கட்டிய வீட்டில்
மின்சாரக் கம்பிகள் நன்னீர்க் குழாய்கள்
அறுந்துகிடக்கின்றன
மிக வாஞ்சையோடு கட்டிய படகு
வெறும் பலகைக் குவியலாகக்
கரை ஒதுங்கியிருக்கிறது
கடவுளின் துணையோடு சேகரித்த
குழந்தைகளுக்குப் பசிக்குமே பதற்றமாயிருக்கிறது
நிலைகுலைந்துதான் போய்விடுகிறேன்
பலகீனமான குரலில் குழந்தைகள்
சொல்கிறார்கள் அப்பா வேதனைப்படாதே
புயல் போய்விட்டது
நாம் வீட்டையும் படகையும் மறுபடியும்
கட்டிவிடலாம்
நான் சொல்கிறேன் வேண்டாம் மக்களே

o

கடலை ஒரு கோப்பையில்
எடுத்துவந்து
மேஜைமீது வைக்கிறேன்.
நான் சொல்கிறேன் இது
கடல் என்று
அவள் சொல்கிறாள் இது
கடல் அல்லவென்று
சிறுகூடலுக்குப் பின் அவள்
சொல்கிறாள் இது கடல்தானென்று
நான் அவளுக்குச் சொன்னேன்
இதுவும் கடலில்லையென்று

o

முயன்றாலும்
உறக்கம் கூடிவருவதில்லை
அலைகளின் உரையாடல்களைத்
தவிர்க்க முடிவதில்லை
மீறினாலும் கனவில் கடலலைகளே
குதித்துக் கும்மாளமிடுகின்றன
இளம் மாலுமி போல
கடலலைகளின் பேரிரைச்சலில்
பரவசம்
உயரமான கடலலைகளில்
எனக்கு என் ஆடவல்லான்
அசைவற்ற பூமியின் மீது
நிற்கவும் விரும்பவில்லை
அவள் கேட்கிறாள்
பூமி அசையவில்லையா என்ன
நானும் பாவம்தானே
கடலுக்குத் திரும்புகிறேன்.

o

இது மார்கழி இரவு
நாளை முழுநிலவாக இன்று மிருகசீரிடமாக
இருக்கக்கூடும்
கடற்பரப்பில் கப்பல்களாக
மிதந்து செல்கிறேன்
அலைகளின் சப்தத்திற்கு
காதுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன்
கடலும்
அதன் மீது பரவியிருக்கும் ஆகாயமும்
தாழம்பூ நிறப் பூக்களை
உள்ளும் புறமும் நிரப்ப
பதின்பருவத்து முதற்காதல்
மேலே செருகிய இரு கண்களின்
மத்தியில் சற்று மேலே

No comments: