Friday, March 11, 2011

எம். யுவன் கவிதைகள்

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி
ஒரு பூ பூத்ததாம்... ஒன்றின்
சூல் விரிந்து
ஆயிரம் பூ ஆனது. ஆயிரமாயிரமாயிரம்
குடங்கள் அநேக கோடிப் பூக்கள்.
பூர்விகத்தில் பூக்களுக்கு நிறமில்லை.
இரவில் கருமையும் பகலில் வெண்மையுமாய்ப்
பொலிந்தனவாம்.
உயிர்முடிச்சின்
சூட்சுமம் அவிழ்ந்ததென
ஆதிப் பூ ஒன்று
தன்னைப் பூ என்
றறிந்தது. ஆனாலும்,
தான் யார்
மணமா நிறமா என்று
கவலை அதற்கு. நிறத்தைக் கூட்ட
ஒப்பனையில் இறங்கியது.
மணத்தைக் கூட்ட
திரவியங்கள் பூசியது.
வரிசையில் நிற்கும் பூக்கள்
வரிசையை மீறும் பூக்கள்
கொத்தாய்த் திரண்டு கோஷமிடும் பூக்கள்
கொத்துக்கள் திரட்டி லாபமுறும் பூக்கள்
தனியாய்க் கிடந்து மருகும் பூக்கள்
தனிமையை ருசிக்க விலகும் பூக்கள்
நந்தவனம் மெல்ல மெல்ல
அங்காடியாய் மாறியது.
பூக்களின் நெரிசலற்ற சாலைகள் இல்லை.
பூங்காக்கள் இல்லை ஆலயங்கள் இல்லை
வாகனங்கள் இல்லை நெரிசல் இல்லாத
கணமும் மூச்சுத் திணறாத உயிரும்
இல்லை.
இதோ,
என் தோளில் கிறங்கிச் சாய்கிறது ஒரு பூ.
இறங்க வேண்டிய இடம் எதுவோ, பாவம்.
கரைந்துவிட்ட குழந்தைமையின் மிச்சம்
எச்சில் கோடாய் ஒழுக
வேனிற்காலப் பகல் பயண
அலுப்பை என் தோளில் இறக்கிவைத்து
ஆனந்தமாய் உறங்குகிறது.
உள்ளுணர்வின் விதிர்ப்பில்
பதறி விழித்து உரத்துக் குரலெழுப்பி
பாய்கிறது வாசல் நோக்கி. அவசரத்தில்
தன் இதழ் ஒன்றை
விட்டுப் போகிறது என்
சட்டைப்பையில்.

l

ஒரு கணம் வரமாக மறுகணம் சாபமாக
உருமாற்றம் கொள்ளும்
ஆதி வார்த்தை பல்கிப் பெருகி
விளைவித்த காற்றலைகளில் சிக்கி
போய்க்கொண்டும் வந்துகொண்டும்
இருந்தேன். மற்றபடி,
குடித்திருக்கவில்லை அப்போது.
உறங்கவும் இல்லை
பகற்கனவின் ஊஞ்சலில்
ஊசலிக்கவும் இல்லை.
எந்நேரமும் அரையிருட்டை
முயங்கிக் கிடக்கும் அறை எனது.
அரையிருட்டென்றால்
அரை வெளிச்சமும் தானே. ஆனால்,
அரைகுறை வெளிச்சத்தில்,
தரைவிரிப்பில் அடர்ந்த வனம்
மேலும் இருண்டுவிடுகிறது.
ஊர்வனவும் பறப்பனவும்
வேரூன்றி நிற்பனவும் பகிர்ந்துகொள்ளும்
ஒரே ஆகாயம்
தரையாய் மல்லாந்து கிடந்த
விரிப்பின் விளிம்போரம்
திடீரென ஒளிர்ந்தது.
ஜன்னல் கதவின் இடைவெளியில்
ரகசியமாய் உள்ளேறிய
ஒளிக்கீற்று துளைத்தபோது
நான் விடுத்த புகைச்சுருள்கள்
திட வஸ்துவென மிதந்தபோது
இறப்பின் வருகையை முன்னறிந்த
தெரு நாய் ஊளையிட்டபோது
அது நிகழ்ந்தது.
விரிப்பின் நெசவுக்குள் சிறைப்பட்ட
வண்டொன்று
மெல்ல மெல்ல
இறக்கை விரித்து உயர்ந்தது.
வனம் நீங்கி நகருக்குள் வந்ததில் திகைத்து
திக்குமுக்காடி அங்குமிங்கும் பறந்து
ஜன்னல்வழி வெளியோடியது.
பிரமையோ?
விரிப்பை மீண்டும் பார்த்தேன்.
ஆச்சரியம்,
வண்டு இருந்த இடம்
பொசுங்கி இருந்தது.
நூலுக்கும் நிறத்துக்குமான இடைவெளியில்
உயிரின் ஓடை பெருக்கெடுத்
தோடியது
அதை விட ஆச்சரியம்.

l

அறிந்த நாள் முதல்
எனக்குள் இருந்துவரும் காக்கை
எத்தித் திருடியது.
கரவாக் கரைந்துண்டது.
பிணத்தை உகந்தது.
செத்த எலியைப் புசிக்கும் இடைவெளியில்
என்றோ மரித்த
மூத்தோரின் திருவுருவாய்
கூரையில் வைத்த பிண்டம் உண்டது
கடவுளரையும் கலங்கடிக்கும்
கடவுளைத் தோளில் சுமந்து
ராசிக் கட்டங்களில் இடம்பெயர்ந்தது.
இனத்திலொன்று இறந்ததையெண்ணி
மின்கம்பியில் கூடிய வரிசையில்
பிலாக்கணம் கொட்டியது.
சுற்றுச்சுவரில் தொற்றியேறிய அணிலோடு
ஆர்வமாய் விளையாடியது. சிறகோய்ந்த பொழுதில்
பாரம் இழுக்கும் மாட்டின் மேல் சவாரி
செய்தது. இன்னும்
குழந்தைக்கு உணவூட்டும் கிரியாஊக்கியாய்
விருந்தினர் வருகையின் முன்னறிவிப்பாய்
சிலநேரம் குறியீடாய்
சிலநேரம் அருவருப்பாய்
சிலநேரம் வேடிக்கையாய்
எந்நேரமும் காக்கையாய்
இருந்தது.
நேற்று
வெளிச்சமாய்த் திறந்து அலுத்து
மெல்ல மூடிவந்த பொழுதில்,
கடைசிச் சொல்லும் வறளும் தருணத்தில்,
பார்த்தேன்
இருளின் துளியன்று தத்தி நகர்ந்தது
எனக்குள் துடிக்கும் உயிரின்
கருநிற நீட்சியென.
சாயலில்
காக்கைபோன்றே இருந்தது அது.

l

ஆகாய வெளிர்நீலத்தைக்
குறுக்காக ஒரு கரும்புள்ளி
கீறிச் செல்கையில் நானும்
உடனெழுந்து பறக்கிறேன் - இத்தனைக்கும்
என் விலாவில் கிளைத்தவை கைகள்தாம்
சிறகுகளல்ல.
ஜன்னலோர இருக்கையில்
உறக்கம் கலைந்து திடுக்கிட்டெழும்போது
வெளியில் விரியும் மைதானமளவும்
அதற்கப்பாலும்
விரிந்து படர்கிறேன் - என்
இடுப்புச் சுற்றளவு முப்பத்திரண்டு
தோள்பட்டை நாற்பது அங்குலம்.
சென்ற நூற்றாண்டில் இறந்த பாடகர்
இன்றைய குறுந்தகட்டில்
சுழன்றுயர்கையில் என்னுள்
ஆவிபோல் எழுந்தேறும் சங்கீதம்
அசலைவிடச் சிலவேளை அற்புதமாய்
இருக்கும் - என் வயது வெறும் நாற்பது.
முன்னிரவில் உறக்கம் பறிகொடுத்து
ஆகாயத்தில் ஏதேனும் ஆறுதல்
தேடி ஏங்கி வெறிக்கும்போது
கணநேரத் துணையாய்
விண்மீன் கூட்டத்தில் ஒரு புள்ளி மட்டும்
சற்றே நகரும். மனம் மலர்வேன்.
என் உயரம் ஐந்தடி நாலங்குலம்.
செய்தித்தாளில் தொலைக்காட்சியில்
பல்கலைக்கழகத்தில் அரசவைகளில்
பட்டங்கள் சூழ்வதும் யார்யாரோ ஆள்வதும்
என் சிறுவயதுப் பட்டப் பெயர்
நினைவூட்டும் - நத்தை.
கூட்டுக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் சதா
ஒளிந்துகொள்ளும் நத்தை.
இன்றும்
கடற்கரை மணலில் குழிந்திருக்கும்
புட்டப்பதிவின் அகல ஆழங்களை வைத்து
அமர்ந்தெழுந்து போன யாரோவின்
கதையைப் புனைந்துகொள்கிறேன்
தற்செயலாய்க் கண்டெடுத்த
கட்டைவிரல் நகத்தை வைத்து
ராஜகுமாரியை வரைந்த ஓவியன் போல.
என் உணர்கொம்புகள் அதிக
நீளமில்லை - ஓரங்குலம்தான்.
பூமிப் பந்தின் விட்டத்துக்கு வெளியே
ஓரங்குலம்.

No comments: