Friday, March 11, 2011

கவிதைகள் - கு. உமாதேவி

இலைச்சூட்டில் மூழ்கும் ஆன்மா

தரையழுந்தச் சம்மணமிட்டுக்கொண்ட
அடித்தளத்தை
மிகவும் நுட்பமாய்ப் பெயர்த்தெறிந்தது
புரியாத வேறு யாருமில்லை
அடைக்கலமற்ற எத்திசைக்குஞ் சென்று
பெருத்த வல்லமையோடு திரும்பும்
நான் விரும்பாத - என்னைப் புரியாத
உயிர்ப் பறவை
எதனோடும் கலக்க மறுக்கும்
என் புண்ய நதியில் தலை துவட்டுகிறது
காகிதப் புலன்களைக் கிழித்துக்கொண்ட
மிக நீண்ட சொற்ப தினங்களில்
ஒரு பார்வையாளராக மட்டுமே வந்துபோகும்
இரத்தங்களின் இலைச்சூட்டில்
கதறக் கதற மூச்சுத் திணறுகிறது ஆன்மா
உடல் கனக்கும் உறுப்புகளை
வெட்டியெறிந்து விட்டு
கொஞ்சம் கவிதைகளோடு
வாழலாமென்றாலும்
பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப்போல்
வீங்கித் தவிக்கிறது மனசும்
அவர்களின் தூரமும்

n n n

பசியநிற மரமும் அதன் கிளைப்பரப்பலும்

பசியநிறமுடைய உடல் யாருடையது
உடல் விளைச்சலை
நினைத்த பொழுதெல்லாம் அறுவடை செய்த
நரமாமிச கதி
விம்மிப் புடையும் உறுப்புகளின்
வெளித்தோற்றத்தில் பசியாறும்
இயலாமைகளின்
கூரிய நகங்களைக் கண்டு
சுயவிழிப்பற்ற அரைகுறை வினைகளில்
ஆழ்ந்திருக்கும் அதற்கு
என்னைக் குறித்து என்ன தெரியும்
உயிர்த்தலும் - துறத்தலும் அன்றெனினும்
பூத்துக் காய்த்துக் கனிந்துதிர்ந்த வீர்யமிக்க
பசியநிறமுடைய இவ்வுடல் யாருடையது
அடர்ந்த வைகறை பொழுதில்
முளைத்தலின் பிரகாசத்தில்
இன்றென் ஜன்னலறைக்குள்
தனது கிளைகளைப் பரத்தி படுத்துக்கிடக்கிறது
பசியநிற உடலொன்று மீண்டும் ஆதியாகி.

n n n

எதிரேறா அலைகள்

சுடச்சுடப் பெய்யும் மழையாய்
தேவை எதுவாயினும்
காலடி சப்தத்தில்
கூட்டித் தள்ளப்படும் மூலையில்
பட்டாம்பூச்சியின் லாவகமாய்
தொரட்டுமுள் வாழ்க்கை
கன்னித்திரைக் கிழிசலில்
நம்பிக்கைக்குரிய பாத்திரமாயிற்று
ஏற்றுக்கொள்ளும் பாரமாய் இரவுகள்
வித்தைக்காரனின் அசைவிற்கேற்ப
ஆடி அடங்கிக் கிடக்கும்
பெட்டிப்பாம்பாய்
உடம்பொடு மனசும்
வெறுமனான பார்வைக்கு
நீள்கரத்தின் ஆசுவாசம்
அரளிப்பூவையும் எஞ்சி நிற்கும்
பெரும் வெப்பமாய்
ஆயினும் அலைகள் பழக்கமாயிற்று
நுரையாகி உறைந்து போவதற்கும்
ஊடாக மடிந்து மீள்வதற்கும்

n n n

உறங்க முயன்றல்லாடுமொரு அடரிரவு

இடைவெளிகளற்றுப் பருத்து கனக்கிறது பருவம்
கூடவே உயிருறைய
நுண்வலியும் அப்பிச் செல்கிறது
சிறுகாற்றுக்கு அல்லாடும் பசுந்தழைகளாய்
மெல்லுரையாடலிலும் அதுவற்ற நிலையிலும்
முகத்தெளிவானது அறுபட
காலோய்ந்து விடுதி திரும்பும்
பின்மாலைப் பொழுதில்
தாமதத்திற்கான காரணம் கேட்கும்
காப்பாளரின் கனிந்த பார்வைக்கு
ஏதேனும் சாக்கு சொல்லத்தான் தோன்றுகிறது
உள்துடிப்பில் உயிர்ப் பொறிபறக்க
ஆடை நெகிழ்ந்தோடும் குளியலறையுள்
தீய்ந்து கனக்கிறது உடல்
எனினும்
சிறு நாசியில் மெல்ல நுழையும்
காமவாடை பழகாத எனதறையை
யாரோ தட்டிச்சென்றாற்போல் தோன்றிற்று
இன்றைய முழுநீளக் கசிவில்

n n n

விதைகள் அபாயகரமானவை

சகதிகொஞ்சும் சூன்ய வாழ்வின்
தீர்த்தங்கரைகளில் முகிழ்க்கும் பருவங்களை
மிக நடுக்கத்துடனும் உக்ரத்துடனும்
கடந்தடைவது மாபெரும் சாகசம்
பூசிமெழுகப்பட்ட இரவின் படுக்கையென
விரிந்து கிடக்கிறது காலம்
மன்பதை சுவர்களென நீட்டிக் குவிக்கப்பட்ட
வைக்கோல் போர் மறைவுகள்
உடல்கள் அறுத்துண்ணும்
பேய்க் கபாலமாயிற்று
நானவளை வெளிக்கு அழைத்தபோது
கழுகுகள்
நிணநீர் கொப்பளிப்பைக் கொத்திப் பிராண்ட
பிசுபிசுக்கப் புணரக் கிடந்தாளொருத்தி
திசை உறவு உருவழிந்து
அடித்துச் செல்லப்பட்ட போக்கிடந்தோறும்
புகலிடமாக்கிக் கொண்டதில் எஞ்சியது தாய்மை
தீப்புலன்கள் சுருண்டெரியும் அக்காவின்
அபயக் குரலுக்கப்பால் நகக்கீரல்களோடு நடுங்கும்
அப்பெண்ணின் வழித்தெடுக்கப்பட்ட மூளையும்
உடலும்
சிலவேறு நாட்களில்
காலங்களைக் கக்கத்திலிடுக்கிக்கொண்டு
சந்து / சந்திகளை ஆக்ரமிக்கும்
சாம்பல் நிறக் கத்தியோடொரு
மகவை ஈன்றெடுத்தாள்.
அவ்வாலைச் சிறுமி
சதைகளிறுகித் தகதகக்கும் கத்தியில்
வெண்தீ மூட்டுவதிலும்
அவளுயிர்ப்புக்கான விந்தைத் தேடுவதிலுமே
தன் பொழுதைக் கழிக்கிறாள்
அடிமரத்தை விட
அதன் விதைகள் அபாயகரமென்பதால்
இனி எதுவும் நடக்கலாம்.

n n n

வேசியன் வீடு

உனது நிலைப்பாடுகளில் பருவமடைகிறது
எழுதப்படாதயென் காவியங்கள்
எனினும் புத்தம்புதிய ராகஸ்வரங்களைப் பரிசளிப்பேன்
பூமியாகி வெடித்தணைத்துக் கொல்லவும்
உடலெங்கும் காற்றாகி
ஊதி வெடிக்கச் செய்யவும்
ஆழி கவ்வும் உலகில் அந்தரமாக்கவும்
குறுக்கிடுகளற்று விளம்பினாய்
இந்த மாலைப்பொழுது ஒரு மரணத்தை
உரிஞ்சும் பளிங்கென
இலைகளிலும் கிளைவெளிகளிலும்
பூத்துக்கிடந்த சூரியன் நஞ்சுறவுகளாய்
சுவாசம் உதிர்க்கும் துர்ச்சகுணத்தில்
வழியும் கோழைகளில் காடெங்கும்
காமவாசம் வீச
தாய்மையடைந்தாள்
சிறகு வளர்ந்த வேர்கள்
நடுவாசலில் நின்று தேம்பியழுவதை
நோக்கும் கண்களுக்கப்பால் தெரிவது
இராப் பிச்சைக்காரியின் முனகல் அல்லது
அற்றைப் பரிசக்காரியின் இந்திரஜாலம்
பெயரிடப்படாத ராகஸ்வரங்களைத்
துய்த்துணர்ந்த வேசியன் வீடெங்கிலும்
புனையப்பட்டுள்ளவை
தாய்மையின் அடிவயிறுகள்
தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன் செதில்களெனத் தரையெங்கும் வெண்தூள்
மிதங்கிக்கொண்டிருந்தன
புற்றின் மேற்புற நீண்டுகிடக்கும்
வாய்மூடிய பாம்புகளைச் சிதைத்தெரிய
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று
வலிகளை வரித்துச்சொல்லி அழத்தெரியாத
கண்ணாடி தேவதையின் உறைந்த பாதரசம்
ஒரு வெற்றுத்தாளென
வெளியெங்கும் விரைத்து நிற்க
வாழ்தலின் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்து பிதுங்கி பீய்ச்சியடித்த
மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பருவக்கோடையதைக் கடந்துகொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.

No comments: