Friday, March 11, 2011

கவிதைகள் - குலசேகரன்

பயணம்



வீட்டிற்குள் வேறிடமில்லாததால்
அவன் ஜன்னலோரம் உறங்கத் தொடங்குகிறான்
அதில் சாலை கருமையாக நீண்டு
சக்கரங்கள் ஓயாமல் உருண்டோடுகின்றன
அவன் மூடிய கண்களில்
பாய்ந்து வரும் வெளிச்சம்
பகலைப் போல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது
தொடர்ச்சியாக எழும் ஓசை
கனமாக மேலேறிச் செல்கையில்
ஒவ்வொரு முறையும்
அவன் நசுங்கிக்கொண்டிருக்கிறான்
முதுகுக்குப் பின்னால் ஒலிப்பான்கள்
அடிக்குரலில் துரத்திக்கொண்டிருக்கின்றன
அவனைச் சாலையின் ஓரங்களுக்கு
தூக்கத்தில் நீளும் சாலையில்
எங்கும் நிற்காமல் களைப்புடன்
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்
வாகனங்கள் மௌனமாக ஓடும்
சைகைகளை மொழியாகக் கொண்ட
உலகிலிருப்பதுபோல்
தினமும் கனவு காண்கிறான்
எப்போதாவது தோன்றும் அமைதியில்
திடுக்கிட்டு விழித்துப் பார்க்கையில்
அவன் உயிரோடிருப்பதை நினைத்து
மீண்டும் புரண்டு படுக்கிறான்.

n n n

நடத்தல்

உன்னிடமிருந்து பிரிந்து வந்த
சாலையில் நடப்பவன்
தனித்து நீளும் பின்னிரவில்
உதைத்துக்கொண்டே வருகிறான்
உன்னிடத்திலிருந்த ஒரு தகர டப்பாவை
உன்னை நினைத்துக்கொண்டு
அது அமைதியில் வீறிடுகிறது
உன் பெயரைக் கத்திச் சொல்லி
சிலர் ஜன்னலில் எட்டிப் பார்க்கிறார்கள்
உனக்கும் அவனுக்குமான பிணக்கை
ஓரிருவர் திரும்பியும் பார்க்கிறார்கள்
நீ ஓரமாகச் செல்கிறாய்
திரும்பவும் வீதி நடுவே வருகிறாய்
அவன் வருகைக்காகக் காத்திருந்து
ஓர் எற்றில் விலகி
மீண்டும் அவனை நெருங்குகிறாய்
அவன் கால்களில் கதறுகிறாய்
வழியெல்லாம் அழுது புரள்கிறாய்
ஒரு கால்பந்தாட்டக்காரனைப் போல்
இலாகவமான உதைகளில்
உன்னை மறந்து
காலியான தகர டப்பாவோடு
அவன் வீட்டுக்குத் திரும்புகிறான்.

No comments: