Friday, March 11, 2011

கவிதைகள் - தேவ அபிரா

நான் எப்போது வாழத் தொடங்குவேன்?

நினைவு அறிந்து
நெஞ்சம் கிளர்ந்து
தெரிந்த உலகமோவிது?

வாழ்வு புரிந்து
வலியை உணர்ந்து
யார் அடைந்தது ஞானம்?

புரிந்த போர்
புரியாப் போர்
களங்கொண்ட மௌனம்
கையால் ஆகாத அமைதி
கண்தெரியாச் சடுகுடு ஆட்டம்
அதிகாரமும் ஆணவமும் பேசும் வார்த்தைகளின்
உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் யாரறிவர்?

கண்ணீரும் கம்பலையுமாகி
மண்ணள்ளித் திட்டி மார்பிலடித்து
ஓலமிட்டு ஒப்பாரிவைத்து மாறாத ரணங்களின் மீது
காலாதிகாலமாக இராசதந்திரமும் நடக்கிறது
கைதொழுதேற்றும் காலடிகள் நீளும்
கங்கை தின்ற சடையும்
காவி மூடிய தாதுக் கோபுரமும்
கர்த்தரும் பாங்கொலியும் பகிரா விடைகள்மீது
பாவிகளின் கேள்விகள்.

காலத் தடத்திலும் உண்டே கையறு நிலை

நீளும் வாழ்வின் கொடியில்
தொங்கும் துயரங்கள்
கொத்தாகிக் கனக்கின்றன.

ஊழிகொண்ட ஆழியோ
உன்மத்தமான கோடையோ
அலையுமாயிரம் இலைகளில்
அழியும் இரவின் மௌனமோ
அன்பே என்று என்னுள் உறங்கும் காதலோகூட
அறியாது கனக்கும் இக்கொத்தை
எங்கு வைப்பேன்
நான் எப்போது வாழத் தொடங்குவேன்?

No comments: