Friday, March 11, 2011

கவிதைகள் ரவி சுப்பிரமணியன்

ராபர்ட் செவல்* நினைவாக ஒரு ஸ்தல புராணம்

அடிக்கடி வருகிற உற்சவமும்
ஆண்டுக்கொருமுறை வரும் தேரும்
திருவிழா பலவும் கொண்டாடும்
கோலாகல ஸ்தலம் இது ஒரு காலம்
மந்திர முழக்க மணியோசை
ராக நடன ஜதிக்கலவை
எல்லாம் பார்த்த மண்டபமோ
மௌனம் காக்குது கும்மிருட்டில்
காலைத் தூக்கிக் கல் நனைக்கும்
ஓடி வந்த தெரு நாய்கள்.
குட்டி போட்டு சுற்றிவரும்
மடப்பளியருகே ஒரு பூனை
ஆனையகல மதில் சுவரில்
ஆடுகள் மேயுது அணிதவறி
சாணம் நிறைந்த பாதைகளில்
மாடுகள் அங்கே அசைபோடும்
வவ்வாலோடு போட்டியிட்டு
கோபுரம் நிறைக்கும் புறாக்கூட்டம்
சருகுகள் அசைய ஓடிவந்து
சுவாசத் துடிப்பில் கண் உருட்டும்
மஞ்சளில் குளித்த ஓணான்கள்
மரங்கள் விட்டு மரம் தாவி
ஓடி தவ்வுது அணில் ஜோடி
பறிப்பார் அற்ற பூவனமும்
தூர்ந்து நாறும் கேணிகளும்
கோலம் குலைந்து கிடக்கின்றன
ஒலிகள் மறந்த லிபிகள் எல்லாம்
உள்ளுக்குள்ளே கல்வெட்டாய்.
கொலுசொலி மறந்த படிக்கட்டு
வளையொலி மறந்த கல்விளக்கு
சொடுக்கை மறந்த சண்டிகேசன்
பிரகாரம் மறந்த நாயனங்கள்
மூலவர் மீதும் தூசிவலை
நடக்க முடியா யானைகளும்
பறக்க இயலாக் கல்கிளியும்
உதிர்ந்த சித்திர ரூபங்களும்
அழியுது இங்கே ஊழ்வலியில்
எல்லாம் பார்க்கும் பராந்தகனோ
நின்றபடியே நிற்கின்றான்.

* Robert Sevell உலகப் புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்.

1852ல் உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டிய கோவில்கள் என்ற தலைப்பில் வால்யூம் II என்ற விவர அறிக்கையை அப்போதைய மதராஸ் மாகாணத்துக்கு அளித்தவர்.

இது வேறு காலம்

காற்றுப் புகா சீசாவில் வைத்துக்
காத்து வந்தேன் அக்கனவை
பிரமிக்கும் ரூபமும் யௌவனமும் ததும்ப
ஒரு இளவரசிபோல் வீற்றிருக்கும் அதை
பார்த்துப் பார்த்து மிதந்துகொண்டிருப்பேன்
எங்கு போய்த் திரும்பினாலும்
சீசாவை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் எனக்கு
சீசாவோடும் ஒரு நெருங்கிய சிநேகம் உருவாகிவிட்டது
திடீரென வந்த ஊழி
கனவையும் அக்காலத்தையும்
வசீகரக் கற்பனைகளையும்
அலங்கார நினைவுகளையும்
ஈவிரக்கமின்றி அள்ளிச் சென்றுவிட்டது.

பித்தாகி
பெயர் தெரியா இத்தீவில்
அலைந்துகொண்டிருக்கும்போது
இன்று காலை காலில் தட்டுப்பட்டது.
அதுதானா
நீண்ட காலம் முன்பு ஊழியில் போன அதுதானா
அதே சீசாதான்
உறுதிப்படுத்திக்கொண்டேன்
கிடைத்த அதிசயம் குறித்த பரவசம் ஏதுமில்லை
கண்ணீர் வழிய
பொறுமையாய்
அக்கனவை எடுத்து
ஒரு முறை வாசித்தேன்
மறுபடி காற்றுப் புகாதவாறு மூடி
கடலில்விட்டேன்
சலனமின்றிச் சற்று நேரம் பார்த்தேன்
கடலில் மிதக்கும் கனவை
இது வேறு காலம்.

No comments: