Friday, March 11, 2011

கவிதைகள் அனார்

மூன்று பொழுதுகளாலான
பச்சைக் கண்ணாடிக்குள் நான்

பச்சைக் கண்ணாடி வெளிக்குள் உள் நுழைந்தேன்
கண்ணாடிக்குள் உலவினேன்
நெருப்புப் பொறியெனச் சில குமிழிகள் சிதறின
மெல்லிய வளையங்களாய் நீர் தளும்பியது

கண்ணாடிக்குள் அலையலையாக வீசியது காற்று
கண்திறந்தேன்
அபூர்வமான மெழுகுக் கடல்
ஓர் காலைப்பொழுதெனத் தெரிகின்றது
விளையாடத் தொடங்கிவிட்டேன் புரியாதவற்றையெல்லாம்
அவை தீர்ந்தபாடில்லை...
பார்த்திருக்க மெழுகுக் கடல் கரைந்தோடிற்று

வம்மிப் பூக்கள் இறைந்துகிடந்த கண்ணாடியுள்
தொட்டாச் சுருங்கிகள் முட்களை நீட்டிச் சுள்ளெனக் குத்தின
பகல் பொழுது
முற்றிய வசைமொழியாய் அறைகின்றது

பகலின் கதவினுள் நுழைகிறேன்
வெம்மையான சிறு நிழலில்
பசிதேங்கிய உடலைச் சுருக்கி மடங்கிக் கிடக்கிறேன்
தனிமை ஓணான்
ஒளித்தாரைகளைப் பிடித்துத் தாவிக்கொண்டிருந்தது.

‘வானம்’ அந்த அப்பாவி முகத்துடன்
வெயிலை உரச
வாக்குறுதிகளின் அர்த்தமற்ற நடிப்பு
தளர்ந்த நிலைக்குத் திரும்புகின்றது

மூடாத ஜன்னல்வழி கேட்டுக்கொண்டிருக்கிறது
மர்மங்களின் சிதில வெடிப்புகள்

பின்னர்
காத்திருக்கத் தொடங்குகிறேன்
இரவு மகாராணியின் விருந்து மேசையை எதிர்கொள்ள

மகாராணி முன் அரச வம்சத்தின் பல்லாண்டுச் செருக்குகளோடு
நான் அமர்ந்திருப்பதை
உள்ளூர வியந்தவள் ரசிப்பதை நானும் ரசித்துப் போதையேறுவதற்கு
இரவாகிய கறுப்புத் திராட்சையை ருசிப்பதற்கு...
ஹவ்வாவின் கனியைப் பிழிந்த சொட்டுக்களை
நட்சத்திரக் கிண்ணத்திலிருந்து ஊற்றிப் பருகுவதற்கு
நீண்ட மேசையின் அதி விசேசங்களை நேர்கொள்வதற்கு

எல்லாவிதமான அயர்ச்சிகளையும் மறந்து
நான் நிர்வாணமாகும்போது
மகாராணி புன்னகைப்பாள்

கரும்பச்சைக் கண்ணாடிக்குள் கேட்டுக்கொண்டிருக்கும்
காமத்தின் வேட்கை மிகுந்த சங்கீதம்
உன் உடல் மாபெரும் இசை
மற்றும் எல்லையற்ற பச்சைவெளி என்பாள் என்னருகில் மகாராணி.

m

சூரியக்கோயில்

முதுகினில் இறக்கை முளைத்த வனதேவதை
மெழுகுபோன்று முளைத்துவருகின்ற தன் ஒற்றைக் கொம்புடன்
தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள்

‘கொனாரக்’ அதிசயங்கள் விளையும் நிலம்
அளவற்ற வியப்புடன் ஸ்பரிசிக்கின்றாள்
அப்போது தொன்மையான அவளது ஆன்மா
கண்களில் எட்டி எட்டிப் பார்த்தது.

சூரியக்கோயிலைத் தழுவி வீசும் ஆதிக்காற்றின் காதுகளுக்குள்
பேருணர்ச்சியைக் கூவினாள்
முதலும் கடைசியுமான வாழ்த்துகளைச் சிற்பங்களுக்குச் செலுத்தினாள்

வசந்தகாலப் பனியில் உணர்வில் மூழ்கி
இன்னும் இறுகத் தழுவிக்கொண்டிருந்தன
இரண்டு பெண் சிற்பங்கள்

பிணைந்தது பிணைந்தவாறே கற்பனையிலிருக்கும்
திவ்யமான அந்தரங்க ஓசைகளைப் புதிதாய்க் கேட்டு
புலன்கள் பூரித்து நிரம்பிற்று

அமானுஸ்யப் பரிவாரங்கள் ஆட்சி செய்யும்
சுதந்திரச் சதுக்கத்தில்
கண் கோர்த்து... கைகோர்த்து...
கற்சிலைகள் பூரணத்தில் ததும்புகின்றன

செதுக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றில் விடுதலை
மற்றொன்றில் நித்யம் இன்னொன்றில் ஆற்றல்
தீர்க்கமாய், தெளிவாய் உயர்ந்து நிற்கிறது சூரியக்கோயில்

வலப்புறமாக
இரு யானைகளின் முதுகினில்
சிம்மங்கள் பூட்டிய தேர் கம்பீரமாகக் காவல் புரிகின்றது

பனியில் உயிர் குளிர்ந்து
குதூகலத்தை அபிநயித்து
அருகருகே ஆதிச் சம்பாசணைகள் புரிகின்றன சிற்பங்கள்

உவகையும் சல்லாபமும் மிகுந்திருந்த அபூர்வமான அனுபவம்

புராதனக் கலை மேன்மைகள் பொதிந்த அவ்விடம்
சூரியக் கிரணங்களில் முயங்கிப் பொலிகின்றது
அதி இயற்கையின் மாயக் கம்பளத்தில்
சிற்பங்களின் பொற்காலம் மறைவதேயில்லை

முதுகின் இறக்கையை உயர்த்தி மொய்க்கிறாள்
யாரும் ஏறாத கனவின் உச்சியை
அரூபமான பிரமாண்டத்தினுள்
கண்கூசும் புதையல்களைக் கண்டெடுக்கிறாள்

விலை மதிப்பற்ற அதிர்ஷ்டத்தை
பெரும் வல்லமையை... விடுதலையை...
தனது கனவின் மொழிகளில் விதைக்கின்றாள் வனதேவதை.

No comments: