Friday, March 11, 2011

கவிதைகள் சுகுமாரன்

ஆணொருபாகினி

மதனப்பள்ளி.
தெருவில் அனல் உதிரும் பகலாக இருந்தது அப்போது.

வட்டமிட்டிருந்தார்கள் அவர்கள். ஆண். பெண். குழந்தைகள்.
வட்டத்துக்குள்ளிருந்தாள் அவள்.

விநோத ரூபிணி. வீதி நர்த்தகி. அபூரணி. இரக்கத்துக்குரியவள்.
வட்டத்தின் உள் விளிம்பில் அவன். விநோதரூபன். வீதி இசைஞன். பூரணன். அவளின் தோழன். வட்டத்தைக் கடந்து ஒலிக்கிறது இசை. டோலக். திமிரி. யாசகக் குரல்.

வாரிப் பின்னிப் பூச்சொருகிய சிரம். இறைஞ்சும் கடல் விழிகள்.
கைகள் குன்றிய முடத் தோள்கள்.
ஆடையின் இருளுக்குள் இறுகிய மார்புகள்.
sஒசியும் இடை.
வளர்ச்சி முடங்கிய குறுந்தொடைக் கால்கள்.

வட்டத்தைத் தாண்டி முழங்குகிறது டோலக். கலைஞனின் மூச்சில்
யாசிக்கிறது திமிரி. வட்டத்துக்குள்
குட்டைப் பாதங்கள் சுழல ஆடுகிறாள் நர்த்தகி. வட்டமிட்டுப் பார்க்கிறார்கள்.
ஆண்கள். பெண்கள். கைதட்டித்
துள்ளுகிறார்கள் குழந்தைகள்.

நானும் பார்க்கிறேன்.

o

மதனப்பள்ளி.
ரயிலடியில்
குளிர் நடுக்கும் இரவாக இருந்தது அப்போது.

வெளிச்சச் சிதறல்கள். நடுவே இருக்கைகள். சரக்குப் பொதிகள்.
நடுவே யாசகர்கள். இருக்கைகளில்
பயணிகள். ஆண். பெண். குழந்தைகள். பொதிகளின் இருளில்
யாசகர்கள். இடுக்குகளில் பெருச்சாளிகள்.

இருள் விரிந்த நடைமேடை. உறக்கம் தொலைத்தவர்கள்
நடக்கிறார்கள். ஆண்கள். அந்நியர்கள்.

நானும் நடக்கிறேன். இருளின் சந்துகள். முயங்குகிறார்கள்.
ஆண்கள். பெண்கள். ஆண்கள்.

ஆண்கள். பெண்கள். பெண்கள். ஆண்கள். மூன்றாம் பாலினர்.
பெண்கள். மூன்றாம் பாலினர்.

பெருமூச்சு விடும் எஞ்ஜின்கள். இளைப்பாறும் பெட்டிகள்.
வந்தவை. போகவிருப்பவை. ஓய்ந்த
பெட்டிக்குள் பாடல் ஒலிக்கிறது. நகரும் ரயில் வெளிச்சம்
பாடலைக் காட்சியாக்குகிறது.

திளைக்கிறாள் அவள். விநோத நர்த்தகி. பாட்டில் கிறங்கித்
துவளுகிறான் அவன். விநோதக் கலைஞன். ததும்பும் இரு உடல்கள்.
கீழே அவன். மேலே அவள். துள்ளி உயர்கிறது கீழுடல்.

எம்பி அமிழ்கிறது மேலுடல். தேக வைபவம். நான் பார்க்கிறேன்.
காமத்தின் பேரிசை. நான் கேட்கிறேன். இரு உடல்கள் ஒன்றுக்கொன்று முழுமையாக்குகின்றன. நான் உணர்கிறேன். காலம் பரவசமாய் நிலைக்கிறது. நான் சிலிர்க்கிறேன்.

துய்ப்பின் கணங்கள் வடிகின்றன. பல்லக்கிலிருந்து விக்கிரகத்தை
இறக்குவதுபோலக் கையில்லாத
நர்த்தகியைப் பெயர்க்கிறான் கலைஞன். சரீரம் பிய்வதுபோல்
சரிந்து நிமிர்கிறது குறையுடல். நிர்வாண அபூரணி. கடல்விழி
விளிம்பில் மிதக்கிறேன் நான். மோகநீர் சுழலும் விழிக்குள்
ததும்புகிறது நாணம்.

பார்க்கக் கிடைத்ததா பரவசம்? எனவே நாணம். அந்தரங்கம்
காட்சியானதே? எனவே கனல்கிறது கோபம். இருளில்
மறைகிறார்கள் இருவரும்.

முயக்கத் தருணத்தில் உடல்கள் உடல்கள் மட்டும். ஆணில்லை.
பெண்ணில்லை. இரண்டும் துறந்த உயிருடல் மட்டும்.

நானும் நடக்கிறேன்.

o

மதனப்பள்ளியிலிருந்து திரும்பும்போது
கேட்டுக்கொண்டேயிருந்தது டோலக்கின் தாளம். கடவுளின்
இதயத்துடிப்புப்போல. தும்தும்நம் ததிம்தோம் நம். கேட்டுக்
கொண்டேயிருந்தது கடவுளின் முனகல்போல. குறையுடற்
பெண்ணின் இரவுப் பாடல்.

o

காமம் செப்புதல்

நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ

பூமியை உறிஞ்சிவிடப்
பொழிகிறது
பொழிந்து தணிகிறது மேகம்

சினம் தணியக்
கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
சொட்டி விழுகிறது உன்
ஒரு துளிக் கண்ணீர்

அந்த ஒற்றைத் துளியில்
நூறு கடலின் உவர்ப்பு
அந்த ஒற்றைத் துளிக்கு
உறைபனிப் பாறையின் கனம்.

வாணியின் வீடு

எவருக்கும் எங்கேயும் போக இடமில்லை;
எனினும் எல்லாரும் போகிறார்கள்
அவர்கள் இவர்கள் நான் நாம்
எல்லாரும் போய்க்கொண்டிருக்கிறோம்
இந்தக் கைவிடப்பட்ட நிலத்தில்
வாணி, நீ மட்டும்
ஒருவேளை
உன்னோடு இருக்கலாம்
அநாதைப் பிள்ளைகள்
அநாதைப் பெற்றோர்
அநாதைப் பறவைகள்
அநாதைப் பிராணிகள்
அநாதைக் கடல்
அநாதைக் கானகம்
அநாதைக் காற்று
அநாதை இதயம்
ஒருவேளை
நாமும் நானும் இவர்களும் அவர்களும்
திரும்பி வரும்போது நீயும் இருக்கக் கூடுமோ?
புதையுண்ட எலும்பாக
புழுவரித்த சதையாக
கல்லில் உறைந்த கண்ணீராக
எல்லாராலும் கைவிடப்பட்ட
நீ வசித்த வீட்டின்
இடிந்த சுவரில் கீறிய பெயராக.

அதற்குள்...

சாவா
சாவுக்கு விரட்டும் கணங்களின் வாழ்வா
காரணம் எது? தெரியவில்லை.
இருப்பினும்
இரண்டாவது தற்கொலை
முதலாவதைப் போல
அரைகுறையாய் முடியாது
அபத்தமாக இருக்காது

அது
கனவின் பனியற்றதாக இருக்கும்
அது
நம்பிக்கையின் கானலற்றதாக இருக்கும்
அது
மரணத்தின் நிச்சயமாக இருக்கும்
அது
வெஞ்சினத்தின் கருணையாக இருக்கும்

அதற்கான உபாயம்
யாரும் இதுவரை அறியாததாக இருக்கும்

அதற்குள்
இந்த வரிகளை முடிக்க வேண்டும்
அதற்குள்
தற்கொலைக்கான புதிய உபாயத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்
அ த ற் கு ள் . . .

சிட்டுக்குருவியைப் போலே . . .

இருந்தேனே தவிர வாழவில்லை அவ்வீட்டில்; என்பதனால்
மாற்றத்தால் விசனமில்லை; ஆனாலும்
பொருட்கள் நீங்கிய காலி அறைகளுக்குள்
கீச்சிட்ட குரலால் கண்கள் கசிந்தேன்
கழிவுநீர்க் குழாயிடுக்கிலிருந்து
குருவிக் குடும்பம் விடை சொல்லி அனுப்பியது:
‘கூடு மாறுகிறீர்களாக்கும். கீச் கீச் கீச்
போய் வாருங்கள் கீச் கீச் கீச்’.

வாழவிரும்பிக் குடிபுகுந்தேன் இவ்வீட்டில்; இருப்பினும்
மாற்றத்தால் நிறைவில்லை; எனினும்
பொருட்கள் திணித்த குறுகிய சுவர்களுக்குள்
கீச்சிட்ட குரலால் கண்கள் மலர்ந்தேன்
சன்னல் கம்பி மேல் வந்தமர்ந்து
குருவிக்குரல் விசாரித்தது:
‘புதிய கூடு வசதிதானே? கீச் கீச் கீச்
நலமாய் இருங்கள் கீச் கீச் கீச்’.

இருந்த வீட்டில் வசிக்கும் குருவியா இது?

இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம்.
எதுவாயினும் எனக்கு
இந்தக் குருவி அந்தக் குருவியே.

o

பிரார்த்தனை

வானுயர நின்று வெளியைத் தழுவி விரிந்த
தேவமைந்தனின் கைகளின் நிழலில்
உபதேசியார் பிரசங்கிக்கிறார்:

‘கடவுள் வீட்டை
நாம் கட்டுவோம்’

விசுவாசிகள் ஒப்புதல் செய்கிறார்கள்
‘ஆமென்’

தேவமைந்தனின் அங்கிநிழலில் ஒண்டி
உபதேசியார் பிரசங்கிக்கிறார்:

‘நம் வீட்டைக்
கடவுள் கட்டுவார்’

விசுவாசிகள் ஒப்புதல் செய்கிறார்கள்
‘ஆமென்’

கூட்டத்தில் ஒளிந்திருந்த சாத்தான் கேட்கிறான்:
‘உபதேசியாரா? கடவுளா?
வீட்டுக்கடனை யார் கட்டுவார்?’

விசுவாசிகள் ஒப்புதல் செய்கிறார்கள்
‘ஆமென்’.

No comments: