Friday, March 11, 2011

கவிதைகள் குவளைக் கண்ணன்

கூத்துக்காலம் அல்லது மசானக் கொள்ளை

மகாசனங்களே!
நிகழ்த்துங் கலை துவங்கப் போகிறது
கலைஞர்கள் தயாராகிவிட்டனர்
நீங்களெல்லாம் கண்டு ரசித்து
உள்ளதில் நல்லவரை
அல்ல அல்ல
உள்ளதில் சிறந்தவரை
அல்ல அல்ல
உங்களுக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுங்கள்
தேர்ந்தெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்
தேசத் துரோகிகள் என்பதை அறிவிக்கிறோம்
என்றபடி
குட்டிக்கரணம் போட்டோடினான்
கோமாளிக் குள்ளன்.

வண்ண வண்ணக் கொடிகள்
வா வா என்றழைத்தன
இடதுசாரியில் ஒருத்தன் எதுவோ சொல்ல
வலதுசாரியில் வேறொன்று சொன்னான் வேறொருத்தன்
பெண் வேடமிட்டவர் சவால்விட
ஆண் வேடமிட்டவர் சொல்லால் கூசவைத்தார்.
ஊரைக் காப்பாற்ற என்னை
உரலைக் காப்பாற்ற என்னை
உலக்கையைக் காப்பாற்ற என்னை
என்ற குரல்கள் வலுக்கத் தொடங்க
என்னைக் காப்பாற்ற தொன்னை
என்றபடி
கஜகரணம் போட்டோடினான்
நெட்டைக் கோமாளி.

பகலெல்லாம் கூத்து நடக்க
ஊர்ச் சனங்கள் இரவில்
கதவைத் திறந்துவைத்துக் காத்திருந்தனர் எதற்கோ?

இனத்தைச் சொல்லி
மொழியைச் சொல்லி
ஊரைச் சொல்லி
பேரைச் சொல்லி
இருப்பதைச் சொல்லி
இல்லாததைச் சொல்லி
பிழையில் பொருள் சேர்க்கும் பெருமகனார்
பிணங்களைச் சுமந்தபடி வேடமிட்டாட
மேடை சரிந்து
பெண்களும் குழந்தைகளும் நசுங்கிச் சாக
இதென்ன கூத்து கூத்தபிரானே?

மேடை சரியில்லை என்றவர்கள்
ஆடத் தெரியாதவர்கள் என்றாக,
கூத்து ஆரம்பிச்சாச்சா! ஆரம்பிச்சாச்சா!
என்று கேட்டுக்கொண்டிருந்தான்
ஒரு விவரங்கெட்டவன்.

பிணங்கள் பேசத் துவங்க
நிகழ்காலம் மயங்கி
இறந்தகாலமெனக் கிடக்க
திடுமென அப்போது
திங்கு திங்கெனக் குதித்தபடி
மையத்தில் வந்தமைந்தவளின்
இடது கை ஒன்றிலிருந்த
ரத்தம் சொட்டும் தலை
உதடுகள் அசைத்து ஏதோ சொல்லவும்
இறந்தகாலத்துக்கும்
வருங்காலத்துக்குமாக
இமைகளைத் திறந்து
கோரப் பற்களைக் காட்டி
நாக்கைத் துருத்த
நீண்டபடி தேடத் துவங்கியது
செந்நாவு.

No comments: