Friday, March 11, 2011

கவிதைகள் சக்தி ஜோதி

கனவுகள் புதைந்த வீடு

என் மன அறையில்
உன் நினைவுகள் மட்டுமே
நிரம்பியிருந்த ஓர் மாலைப் பொழுது அது
அடர்வனம் சூழ்ந்திருக்கும்
அந்த வீட்டிற்குள்
நான்
அடியெடுத்து வைக்கிறேன்
கனத்த வெற்றிடத்தை
நிரப்பவியலாத
பெரும் சுவர்களும் ஜன்னல்களும்
அற்புத வேலைப்பாடுகளினால்
நிரம்பியிருக்கின்றன
கனவுகள்
புதைக்கப்பட்ட
பிரம்மாண்டமான
அவ்வீட்டிற்குள்
வழிப்போக்கனைப் போன்று
பார்வையாகிறேன்
காலங்காலமாக
வாழ்வோமென்ற நம்பிக்கையில்
கட்டப்பட்ட
மூதாதையரின் அந்த வீடு
சலனங்களேது மற்றிருக்கின்றது

இளைப்பாறல்

விலா எலும்புகள் பொதிந்துள்ள
திரட்சிமிகு சதைப்பற்று வற்றி
மெல்லிய சிறகுகள்
இப்போதுதான் முளைவிடத் துவங்கியுள்ளன
காற்றறைகள் நிரம்பி
பறத்தலுக்கு எத்தனித்துக்கொண்டிருக்கிறது
சின்னச் சிறகுள்ள எறும்பும்
நீள உடல் தட்டானும்
வண்ணத்துப்பூச்சிகளும்
இன்னும்
பலவகைப் பறவைகளும்
பறத்தலின் மாதிரிகளாய்
அமைந்துள்ளன
பறவையாய் இயல்பூக்கம் பெறுகையில்
அதன் தகவமைப்பும்
ஆய்ந்தறிய வேண்டியுள்ளது
கூடவே
படபடக்கும் சிறகினைக் கவிழ்த்து
விரிந்த கரம் தேடியமர்வதையும்
கற்றுத் தருகின்றன பறவைகள்.

No comments: