Friday, March 11, 2011

கவிதைகள் கவிதா

துர்க்கனவொன்று,
விளக்கிலிருந்து விடுபட்ட
பூதம்போல வளர்கிறது.

எனது கோட்டைப் பதாகைகளில்
ஒளிரும்
அதன் கொடுஞ்சாயல்.

எனது கொடித்தடத்தில்
வீசும்
அதன் குருதியின் வாடை.

எனது இரவுகளின் மீது
தனது கோரப்பற்களை
அது புதைக்கும்போது
நான் இன்னொரு
துர்க்கனவாக
மாறிவிடுகிறேன்.

இப்போது விடுதலைக்குக் காத்திருக்கிறது
இன்னொரு விளக்கு.

o

இந்தக் கவிதையை
நீங்கள் எழுதிவிடுங்கள்.

எழுதப்படாத எனது கவிதையின்
தாள்களில் ஒன்றை
உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.

எனது அகம் பற்றியும்
புறம் பற்றியும்
உங்கள் ஐயங்களை
இங்கே எழுதிவிடுங்கள்.

(எனது முந்தைய கவிதைகளில் அதற்கான விடைகள் இருக்கப்போவதில்லை.)

உங்களை நிராகரிப்பது பற்றி
அல்லது
உங்களை அதிதீவிரமாக
ஏற்றுக்கொள்வது பற்றி

எனது கண்கள் உங்களைத் தொந்திரவு செய்வது பற்றி
அதிலிருந்து காரணமின்றிப் பெருகும் கண்ணீர் பற்றி
கேள்வி எழுப்புங்கள்.

எனது அரசியல் பற்றி
எனக்கு அரசியல் இருக்க வேண்டியதன் தேவை பற்றி
பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பும் என் சினேகம் பற்றியும்
வெறுக்கும் என் அதிகாரம் பற்றியும்
மறக்காமல்
எழுதிக்கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பத்திற்கு நான் வடிவமைக்கப்படாதபோதும்
உங்கள் விருப்பத்திற்குரியவளாகவே
தொடர முடிவது பற்றி
ஆச்சரியம் கொள்ளுங்கள்.

என்னால் ஒருபோதும் எழுத முடியாத
இந்தக் கவிதையை
நீங்கள் எழுதிவிடுங்கள்.

o

இந்த இரவோடு நான் முடிந்துவிடுகிறேன்

பேராகாயத்தில் ஒரு புள்ளியாக
கரைந்துவிடவோ
பூமியின் விரிந்த வெளிகளில்
இசையாய் மிதக்கவோ
எனக்கு விருப்பம்.

காற்றின் முடிவற்ற பக்கங்களில்
கடவுள் எழுதிக்கொண்டிருக்கும்
மொழியற்ற கவிதையில்
ஒரு வரியாக
இருந்துவிட்டுப் போகிறேன்.

இருள் புலரும் பொழுதில்
பூக்கும் முதல் பூவின் மீது
ஒரு துளிக் காதலாய்
மலர்ந்து
நிராகரிக்கப்பட்டவளின்
மடியில் போய்ச் சேர்கிறேன்.

ஒரு குழந்தைமையின் சாபத்தை விடுவிக்கும்
தேவதையின் சிறகுகளில் ஒன்றாகவோ
வாழ்வின் இறுதி நொடியிலிருந்து
மரணத்தின் முதல் நொடிக்கு
பயணித்துக்கொண்டிருப்பவனின்
கடைசி விருப்பமாகவோ
மாறிவிடுகிறேன்.

வேறு எதுவாகிலும்
இருந்துவிடுகிறேன்.

No comments: