Friday, March 11, 2011

கவிதைகள் சரவணன்

தீயசக்திகள் பற்றிய குறிப்பு - 01

ஊருக்குக் குறுக்காக ஓடும் ஆற்றில்
ஆளற்ற தோணி ஒன்று கரைசேர்ந்தது.
அதிலிருந்து மூன்று எண்ணங்கள் இறங்கி,
எதையோ சாதிக்கும் வெறியுடன்
குறுமணற்பரப்பில் நடந்தன.
ஒன்று முன்நோக்கியும்
மற்றொன்று பின்நோக்கியுமாக
அவற்றின் ஆறு கால்தடங்கள்
மணலில் அழுந்திப் பதிந்தன.
அன்று முதல் ஆறு வற்றத் தொடங்கியது;
தொழில்கள் தொய்வடைந்தன
வானப்பெருவெளியில் மேகங்களைக் காணவில்லை;
ஊர் முழுக்கக் கோரை முளைத்தது;
கூட்டங்கூட்டமாக மக்கள் புலம்பெயர்ந்தனர்;
அவர்களின் நிழலைப் பின்தொடர்ந்து
அந்த ஆறு கால்தடங்களும் நடந்தன.

தீயசக்திகள் பற்றிய குறிப்பு - 02

மிகப்பெரிய கிழட்டுப் பறவை ஒன்று
தாழ்ந்து மெல்லப் பறந்துபோனதாகவும்
அதன் நிழல் பல வண்ணங்கள் நிறைந்ததென்றும்
அந்தக் கிராமத்தில் பேசிக்கொண்டார்கள்.
கிராமம் பயத்தில் மூழ்கியது.
பின்னர் ஒரு தலைமுறைவரை அந்தப் பறவையை
யாரும் பார்க்கவில்லை - பறவை பற்றிய
பேச்சு மட்டுமே மிஞ்சியிருந்தது.
கிராமம் பயத்திற்காகக் காத்திருந்தது.
அடுத்து வந்த தலைமுறையினர்
அந்தப் பறவையைப் பார்த்தார்கள்
அது அந்தப் பறவையின்
அடுத்த தலைமுறையாகக்கூட இருக்கலாம்.
அந்தப் பறவைக்கு நிழலே இல்லை என்றும்
நிறமற்ற நிழல் கொண்ட பறவை மூழ்கியது.
பின்னர் எந்தத் தலைமுறையினரும்
அந்தப் பறவையைப் பார்க்கவில்லை;
அதைப் பற்றிப் பேசிக்கொள்ளவுமில்லை.
ஓர் உண்மை தொன்மையாகிப் பொய்யாகிப்
பின்னாளில் இல்லாமலானது.

பிறழ்வு மனம் பற்றிய குறிப்பு - 01

அதே வரிகளையே திரும்பத் திரும்பப்
படித்தபடியே இரவு கழிகின்றது.
மனப்பிறழ்வு இங்கிருந்துதான் தொடங்கியிருக்கக்கூடும்.
இனி எப்படி மீள்வது?
படித்த வரிகளைப் பின்னோக்கிப் படித்து.
புத்தகத்தைப் பழையபடி மூடிவைத்து.
அதைப் புத்தகக் கடையில் திரும்பக்கொடுத்து.
இச்சிந்தனையின் முடிவில் நான்
என்னைப் பார்த்து கேட்டுக்கொள்கின்றேன்
இக்கேள்விகளின் மூலம் நான் நகர்வது
மீட்சியின் விளிம்பை நோக்கியா? மையத்தை நோக்கியா?

பிறழ்வு மனம் பற்றிய குறிப்பு - 02

என் வீட்டிலுள்ள எல்லா அறைகளுக்குள்ளும்
என்னால் எளிதில் நுழைந்து திரும்ப முடிகிறது.
மனசுக்குள் உள்ள ஆயிரம் அறைகளில் என் சிந்தனை
ஓர் அறைக்குள் மட்டுமே பிடிவாதமாய்ச் சுழல்கின்றது.
அது அலுத்து ஓய்வதுமில்லை, அறுந்துபோவதுமில்லை.
மன அழுத்தம் தாளாமல் எனக்கு அழுகைவருகின்றது.

பிறழ்வு மனம் பற்றிய குறிப்பு - 03

நள்ளிரவில் வீடு திரும்பிய பின்னர்தான்
நினைவுக்குவந்தன எனக்கு.
நான் ஜன்னலைத் திறந்து வெளியே சென்றதும்
மாடிப்படிகளில் இறங்குவதுபோல சாலையில் நடந்ததும்
பின்வீட்டுக் கிணற்று வளைவின் மேல் நடந்து
பக்கத்து வீட்டு மதில்சுவரைத் தாண்டி என் வீட்டில் விழுந்ததும்.
விடிந்ததும் மனநல மருத்துவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும்
என் வீட்டு வாசற்கதவைத் திறந்து.

பிறழ்வு மனம் பற்றிய குறிப்பு - 04

முன்னுக்கு முன்னாய்ப் பின்னுக்குப் பின்னாய்
இழுபட்டுச் சிதறும் மனத்தை
எப்புள்ளியில் எவ்விதம் குவிப்பது?
பச்சை உடை, சங்கிலிப் பிணைப்புகள், என் போன்றோர் கூட்டம்.
அறைச் சுவர்களில் பட்டு மீள்கிறது
எங்களின் அடக்க முடியாத பெருஞ்சிரிப்பு.

No comments: